சிரியாவின் நிலை (பகுதி 3) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்

Posted on

♣ ♣ ♣ ♣ ♣

YouTube link: The Syrian Situation Part 3

உரையாற்றிய நாள்: 10-12-24

(மேலே படத்தில்:  2002இல், பஷார் அல் அசதுடன் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர்)

♣ ♣ ♣ ♣ ♣

பஷார் அல் அசத் சென்று விட்டாலும், வருந்தத்தக்க விதத்தில், சிரிய மக்களின் துயர் தொடர்ந்து நீடிக்கிறது.

பஷார் அல் அசதை மேற்கத்திய ஊடகங்களும், மேற்கத்திய அரசுகளும் இப்போது ஒரு அரக்கனாக காட்டினாலும், அவர் அரசுத் தலைவராகப் (President) பதவியேற்றவுடன், அவரை பிரிட்டன் வரவேற்றது. மேலும் பிரிட்டன் அரசி அவரை விருந்துக்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைத்தார். பின்னர், பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர் அவருக்கு சர் பட்டம் (knighthood) வழங்குவது குறித்து கூட பரிசீலித்தார்.

பஷார் அல் அசதுடன் பிரிட்டன் அரசி எலிசபெத் II

காரணம், அப்போதுதான் 9/11 நிகழ்வு நடந்திருந்தது. மேற்குலகால் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்கள் அனைவரையும் சித்திரவதை செய்து வாக்குமூலங்கள் பெற வேண்டியிருந்தது.

அவர்களை சிரியாவுக்கு அனுப்பி சித்திரவதை செய்வதற்கு —முஸ்லிம் உலகின் பிற சர்வாதிகாரிகளோடு சேர்த்து— பஷார் அல் அசதை இவர்கள் உளப்பூர்வ கூட்டாளியாகப் பார்த்தனர். எனவே பஷார் அல் அசத் பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட மேற்குலகம், அதன் சார்பாக செய்யச் சொன்ன குற்றங்களில், ஒரு கூட்டாளி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போது நிகழ்காலத்துக்கு வருவோம். வருந்தத்தக்க விதமாக, சியோனிச இஸ்ரேல் சிரியாவில் தனது போர் குற்றங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இஸ்ரேலிய டாங்கிகள் சிரிய தலைநகர் டமஸ்கசிலிருந்து 25 கி.மீ. தொலைவு தூரத்தை அடைந்து விட்டன என்று ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ இன்று, டிசம்பர் 10-ம் தேதி, செய்தி வெளியிட்டுள்ளது.

அதே வேளையில், இஸ்ரேலிய விமான படை சிரிய இராணுவத் தளவாடங்கள் மீது குண்டு வீசுவதில் மும்முரமாய் ஈடுபட்டுள்ளது. டமஸ்கஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற சிரிய விமானப் படைத் தளங்கள் கிட்டத்தட்ட ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டு விட்டன. சிரிய கடற்படையும் அழிக்கப்பட்டுவிட்டது. ஆக, கடந்த இரண்டு நாட்களில் சிரியாவில் இராணுவப் படைகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தபட்டன.

ஆனால் வருந்தத்தக்க விதத்தில், சிரியாவை கைப்பற்றியுள்ள அதன் புதிய ஆட்சியாளர்களான, (நிராகரிப்பு குற்றஞ்சாட்டும்) தக்ஃபீரி பயங்கரவாதிகளிடமிருந்து இதுவரை ஒரு சிறு கண்டன குரல் கூட எழவில்லை. அவர்கள் தேடிப் பிடித்து கொல்ல விரும்பும் மக்கள் பட்டியலை தொகுப்பதில் மிகவும் மும்முரமாக உள்ளனர்.

டிச. 10 அன்று கொல்லப்பட்ட டாக்டர் ஹம்தி இஸ்மாயில்

உண்மையில், அங்கு கொலைகள் ஆரம்பமாகிவிட்டன. சிரியாவின் வடகிழக்கில் வாழும் நூற்றுக்கணக்கான —மைய நீரோட்ட முஸ்லிம்கள் அல்லாத— நுசைரி மக்கள் வருந்தத்தக்க விதமாக, கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று (டிசம்பர், 10) டமஸ்கஸிலேயே இரண்டு முக்கிய நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹம்தி இஸ்மாயில் என்ற சிரியாவின் முன்னணி விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டார். மற்றும் ஷேய்க் தவ்ஃபீக் அல் பூத்தியும் இன்று ஷஹீத் ஆக்கப்பட்டார். அவர் மறைந்த ஷெய்க் ரம்சான் சையித் அல் பூத்தியின் மகனாவார்.

முன்னர் (2013இல்), டமஸ்கசின் ஒரு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு, இந்த பயங்கரவாதிகளால் தற்கொலை படை மூலம் ஷஹீத் ஆக்கப்பட்டவர்தான் ஷெய்க் ரம்சான் சையித் அல் பூத்தி

எனவே சிரியாவில் நடக்கும் நிகழ்வுகளை நாம் மிக மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆனால் சிரியாவில் நாம் எதிர்நோக்கும் அசல் அபாயம் என்னவெனில் —வருந்தத்தக்க விதமாக—அது சிதைந்துவிடும் என்பதே. ஏனெனில் இஸ்ரேல் சிரிய நிலபரப்பை முடிந்த அளவு ஆக்கிரமிப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு கொனெத்ராவில் (Konetra) துவங்கி, பின்னர் ஹெர்மான் மலைக்கு (Mount Hermon) நகர்ந்தனர். மேலும் இப்போது மேற்குநோக்கி தர்ஆவிற்கு (Dar’a) நகர்கின்றனர்.

நான் ஏற்கனவே சொன்னது போல டமஸ்கஸை நோக்கி வடக்கிலும் நகர்ந்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்று இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் —2000 ஆம் ஆண்டில் ஹிஸ்புல்லாஹ் செய்தது போல— அடித்து விரட்டப்பட்டால் ஒழிய அவர்கள் ஆக்கிரமித்த பகுதிகளை விட்டுச் செல்வதில்லை. எனவே சிரியா உண்மையில் முற்றிலுமாக மறைந்துபோகும் ஆபத்து உள்ளது.

ஷஹீத் ஷெய்க் ரம்சான் சையித் அல் பூத்தி

‘அலெப்போ நகரம் உஸ்மானிய சாம்ராஜ்யத்தைச் சார்ந்தது; எனவே அது துருக்கிக்கு திரும்ப கொடுக்கப்பட வேண்டும்’ என்ற எண்ணம் அந்நாட்டு அதிபர் ரஜப் தையிப் ஆர்துகானுக்கு உண்டு. எனவே அதைச் சுற்றியுள்ள வடமேற்குப் பகுதிகள் துருக்கிக்கு வழங்கப்படலாம்.

அநேகமாக ஆர்துகானுக்குச் செய்யும் உபகாரமாக இஸ்ரேலியர்கள் அதை அவருக்கு ஒப்படைக்கக் கூடும். ஆனால் சிரியாவின் எஞ்சிய பகுதிகள் ஆக்கிரமிக்கப்படும். அப்படி நடந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று யோசித்துப் பாருங்கள்.

லெபனான் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்படும். ஹிஸ்புல்லாஹ்விற்கு எந்த உதவியும் அடைய முடியாது. ஆதரவற்ற பாலஸ்தீனத்தை பொருத்தவரையில், அவர்கள் கிட்டத்தட்ட தோல்வியடைந்துவிட்டனர்.

சொல்லப்போனால், காஸாவில் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் துடைத்து அழித்துவிடும் என்றே தெரிகிறது. வடக்கில் நிலத்தை ஆக்கிரமித்துவிடும். தெற்கில், ரஃபா எல்லையைத் திறந்து பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள். மேற்குக் கரையில் இருக்கும் பாலஸ்தீனர்கள் ஜோர்டானுக்கு தள்ளப்படுவார்கள்.

சியோனிச அமைப்புடன் ஒத்துழைத்து உடந்தையாய் இருந்து வரும் இத்தகைய அரசாங்கங்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். சியோனிச அமைப்பு யாருக்கும் நட்பாக இருப்பதில்லை. அது எல்லோரையும் விழுங்கிவிடும்; எல்லோரையும் அழித்துவிடப் போகிறது. பாலஸ்தீன மக்களை அழிப்பதில் தீர்மானகரமாக உள்ளது.

பஷார் அல் அசத் ஒரு கொடுங்கோலர்தான். அவர் பல பயங்கரமான குற்றங்களை இழைத்துள்ளார். நாம் அவரை ஆதரிக்கவில்லை. ஆனால் பஷார் அல் அசத் வேளியேறியதால் அப்பாவியாக குதூகலிக்கும் முஸ்லிம்கள், எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை கவனமாக சிந்திக்க வேண்டும்.

மேற்கத்திய ஆட்சிகளின் வலையில் நாம் சிக்கிவிடக் கூடாது. அவர்கள் முஸ்லிம்களின் நண்பர்கள் அல்ல. எப்போதும் அவர்கள் அப்படி இருந்ததில்லை.

எனவே நாம் எப்படி செயல்படுவது, எப்படி எதிர்வினையாற்றுவது, எப்படி முன்னேறுவது என்பதை மிக மிகக் கவனமாகச் செய்ய வேண்டும். வருந்தத்தக்க விதமாக, சிரியாவின் எதிர்காலம் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது – அது பிழைத்திருந்தால்.

♣ ♣ ♣ ♣ ♣

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *