இஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் – கலீல் அப்துர் ரஹ்மான்

Posted on

[கலீல் அப்துர் ரஹ்மான் (khalil@thinkstrategy.org) எழுதிய ‘The Strategic Importance of the Islamic Calendar‘ என்ற கட்டுரையை இங்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறோம். ஆங்கிலத்தில் ஒரே கட்டுரையாக இருந்ததை படிக்க எளிதாக இருக்கும் பொருட்டு தமிழில் இரண்டாகப் பிரித்துள்ளோம் – மொழிபெயர்ப்பாளர்]

♦ ♦ ♦ ♦ ♦

(பாகம் 1)

மக்களே! அல்லாஹ் தடுத்ததை அனுமதிக்கப்பட்டதாகவும், அனுமதித்ததை தடுக்கப்பட்டதாகவும் ஆக்குவதற்காக அல்லாஹ்வின் அதிகாரத்தை நிராகரிப்பவர்கள் நாட்காட்டியில்மோசடியாகத் திருத்தங்கள் செய்வதில் ஈடுபடுகிறார்கள். அல்லாஹ் இந்த வானங்களையும் பூமியையும் படைத்தபோது இருந்ததற்கு ஒப்ப காலம் இப்போது தனது அசல் நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒரு வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களைக் கொண்டதாகும். அவற்றுள் நான்கு புனிதமானவை. துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம்;பின்பு ஜுமாதாவுக்கும் ஷஅபானுக்கும் நடுவில் வரும் ரஜப் என்பனவே அவை. (நபியின் இறுதி ஹஜ்ஜுப் பேருரை)

நாட்கள், மாதங்கள், வருடங்கள் எனும் அலகுகளைக் கொண்டு காலத்தை எவ்வாறு மிகச்சரியாகக் கணக்கிடுவது என்பதைக் கூறுகின்ற நாட்காட்டி முறை உலக வரலாற்றிலேயே ஒன்றே ஒன்றுதான் இருந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? அதைத் தவிர மனிதர்கள் இதுநாள்வரை பயன்படுத்தி வந்துள்ள மற்றெல்லா நாட்காட்டி முறைகளும் ஏதோவொரு வகையில் காலத்தைக் கூட்டுவதிலோ குறைப்பதிலோ (‘இடைச் செருகல்’ -Intercalation என்றறியப்படும் நடைமுறையில்) ஈடுபட்டுள்ளன; அல்லது, போலிக் கடவுளரையும் அல்லாஹ்வின் சில படைப்புகளையும் வழிபடுவதாக அமைந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா?

தனிச்சிறப்பான இந்நாட்காட்டியை உங்கள் அன்றாட காரியங்களுக்குப் பயன்படுத்துவீர்களா? அல்லது, சில ‘சமய நிகழ்ச்சிகளுக்கு’ ஆயத்தமாவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டுவிட்டு, அன்றாட காரியங்களுக்கு வேறேதேனுமொன்றை பயன்படுத்துவீர்களா? உண்மையில் இது கவனத்தை ஈர்க்கக்கூடியதொரு சூழ்நிலைதான்.

அத்தனிச்சிறப்பான இஸ்லாமிய நாட்காட்டி முறையைத் தான் அல்லாஹ் முழு மனிதகுலத்திற்காகவும் வழங்கி இருக்கிறான் என்பதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அதில் வாரநாட்களின் பெயர்களோ மாதங்களின் பெயர்களோ போலிக் கடவுளரையோ அல்லாஹ்வின் சில படைப்புகளையோ வழிபடுவதுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை. மாதத்தின் துவக்கம் புதிய பிறையைப் பார்ப்பதன் மூலம் உறுதிசெய்யப்படுவதால், அதில் ஒவ்வொரு மாதமும் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதாக அமைகிறது. இவ்வுண்மையின் முக்கிய விளைவு என்னவென்றால், இந்நாட்காட்டியின் மாதங்களுக்கும் ஆண்டின் பருவகாலங்களுக்கும் இடையே நிலையான உறவு இல்லை என்பதாகும்.

எடுத்துக்காட்டாகக் கூறுவதெனில், முஹர்ரம் மாதம் சில ஆண்டுகளில் இளவேனிற் காலத்தில் வருவதுண்டு. பிறகு அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் முன்பனிக் காலத்திலும், பிறகு குளிர் காலத்திலும், பிறகு கோடைக் காலத்திலும், பிறகு மீண்டும் இளவேனிற் காலத்திலும் வரும். இஸ்லாமிய நாட்காட்டியின் மாதங்கள் எந்தவொரு குறிப்பிட்ட பருவகாலத்துடனும் நிலையாகப் பொருந்தாமல், எல்லாப் பருவ காலங்களின் வழியேயும் தொடர்ந்து பயணம் செய்கின்றன.

பருவ காலங்களுடன் இயைந்து செல்வதற்கான முயற்சிகள்

பருவ காலங்களுடன் இயைந்து செல்லும் வகையில் ஒரு நாட்காட்டியை உருவாக்குவதென்பது மிக நீண்ட காலமாகவே -இன்று வரையிலும் கூட- மனிதர்களால் தீர்க்க முடியாதவொரு சவாலாக இருந்து வருகின்றது. அத்தகைய முயற்சிகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எதைக் காட்டுகின்றன என்றால், கடந்த 5000-க்கும் அதிகமான ஆண்டுகளில் பல்வேறு நாட்காட்டி முறைகளை மனிதர்கள் உருவாக்கியுள்ளனர்; ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவிலான துல்லியத் தன்மை கொண்டவை; ஒரு ஆண்டின் நாட்களையும் மாதங்களையும் தொகுத்துப் பார்த்தால் அது பூமி சூரியனைச் சுற்றி ஒரு முழுப் பயணத்தை நிறைவுசெய்ய ஆகும் காலத்துடன் நேர்த்தியாகப் பொருந்தி வர வேண்டும் என்பதே அம்முயற்சிகளின் நோக்கமாக இருந்து வந்துள்ளது.

பருவ காலங்கள் என்பன மக்களின் வாழ்க்கையில் ஆற்றிவந்துள்ள பாத்திரத்தை இங்கு மனதில் இருத்திக் கொள்ளுங்கள். மக்கள் தமது உணவைப் பெற்றுக் கொள்வதற்கும், விலங்குகளை வேட்டையாடவும் பயிர்செய்யவும் உரிய காலம் எதுவென்பதை கண்டுகொள்வதற்கும் பருவ காலங்களின் வருகையை முன்னறிவது உதவிகரமாக இருந்து வந்துள்ளது. உணவையோ நல்ல வாழ்நிலைகளையோ தேடி சில மனிதர்களும் விலங்குகளும் மேற்கொண்ட இடப்பெயர்வுப் பாங்குகளையும் பருவ காலங்கள் பற்றிய இவ்வறிவே தீர்மானித்தது. பல்வேறு தொழிற்துறைகள் இன்றும் கூட அந்தந்த பருவ காலங்களில் விற்பனையாகும் உற்பத்திப் பொருட்களையும், வழங்கப்படும் சேவைகளையும் சார்ந்தே இருக்கின்றன. உடைகள் மற்றும் காற்றுப் பதனிகளின் (Air-Conditioners) விற்பனை, வரி ஆலோசனைச் சேவைகள் போன்றவை ஓரளவுக்கு பருவகாலப் போக்குகளிலேயே தங்கியுள்ளன.

மற்றனைத்துக் காரணங்களைக் காட்டிலும் முக்கியமாக, பருவ காலங்களைத் துல்லியமாக முன்னறியும் வகையில் காலத்தின் செல்வழியை தடமறிவதற்கான ஒரு சாதனமாகவே நாட்காட்டிகள் உருவாக்கப்பட்டன. நாட்களை எண்ணவும், அவற்றை வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் எனும் அலகுகளாக ஒழுங்கு செய்யவும் அவை வடிவமைக்கப்பட்டன. பொதுவாக இந்த அலகுகள் மீள மீள நிகழும் வானியல் சுழற்சிகளில் இருந்தே பெறப்படுகின்றன. அல்லாஹ்வின் படைப்புகளின் மத்தியில் இவ்வானியல் கோளங்கள் தமது சுழற்சிகளில் மிக வழமையானவையாகவும் வெளிப்படையாக மாற்றமுறுபவையாகவும் இருப்பதே இதற்குக் காரணம்.

எடுத்துக்காட்டாக, சந்திரனின் படிநிலைகளிலிருந்தே மாதங்கள் வருகின்றன (அனேகமாக வாரங்களுக்கும் இது பொருந்தும்). அதே போல், சூரிய ஆண்டு என்பது சாய்வான கோணத்தில் பூமி சூரியனைச் சுற்றிச் சுழல்வதிலிருந்து உருவாகிறது. மேலோட்டமாகச் சிந்திக்கும் போது, இச்சுழற்சிகளை அவதானிப்பதும் கணக்கீடு செய்வதும் எளியதொரு காரியம் போன்று தோன்றினாலும், உண்மையில் அது அத்துணை எளிதல்ல என்பது தெளிவாகியுள்ளது. பருவ காலங்களுடன் கன கச்சிதமாகப் பொருந்தும் துல்லியமான சூரிய நாட்காட்டி என்ற ஒன்று இன்றும் இல்லை; இருப்பதற்கான சாத்தியமும் இல்லை.

போலிக் கடவுளர் வழிபாடு

வானியல் கோளங்களை அவதானித்து வருவது நாட்காட்டிகளை உருவாக்குவதற்கு அவசியம்தான் என்றாலும், அவற்றை வழிபடுவதற்கான ஒரு வலுவான மனச்சாய்வையும் மனிதர்கள் வெளிப்படுத்தியே வந்துள்ளார்கள். அவற்றின் நகர்வுகளுக்கு ஏற்ப பருவ காலங்கள் வந்து செல்வதால், பூமியில் மனிதர்களின் இருப்பினை அவை ஏதோவொரு வகையில் கட்டுப்படுத்துகின்றன என்றவர்கள் எண்ணினர். 5000 ஆண்டுகளுக்கு முன்பு டைக்ரீஸ்-யூப்ரடீஸ் நதிக்கரையில் தோன்றி வளர்ந்த சுமேரிய சமூகத்தில் அவற்றை அவதானித்துப் பதிவு செய்வதற்கென தனியான துறை வல்லுனர்கள் இருந்தார்கள். வருடத்தின் குறிப்பிட்ட காலங்களில் பாசனப் பயிர் நிலங்களை உழுது, விதைத்து, பராமரித்து, அறுவடை செய்வதை சுமேரியர்களின் பொருளாதாரம் சார்ந்திருந்ததால், இப்பதிவர்களின் பாத்திரம் அதில் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. எனவே அவர்கள் கடவுளரோடு தொடர்புள்ளவர்கள் என்றும், அவர்களின் நல்லாசியைச் சார்ந்தே சமூகத்தின் செழுமை இருக்கிறது என்றும் கருதப்பட்டது.

இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்த பாபிலோனியர்கள், சுமேரியர்களால் பயன்படுத்தப்பட்ட நாட்காட்டியில் திருத்தங்கள் செய்தனர். பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரிய மற்றும் சந்திர சுழற்சிகள் பொருந்திப் போகின்றன என்பது நீண்டகால அவதானங்களுக்குப் பின் கண்டறியப்பட்டது. இதன் ஒளியில் அவர்கள் மேற்கொண்ட திருத்தம், பருவ காலங்களுடன் இயைந்து செல்வதில் சூரிய நாட்காட்டியின் துல்லியத்தன்மையை அதிகரித்தது.

எனினும், பருவ காலங்களை கட்டுக்குக்குள் வைத்திருப்பதாக கருதப்பட்ட கடவுளர்களை சமாதானப்படுத்தும் எண்ணமே இப்பணிக்கு பிரதான தூண்டு விசையாக இருந்தது. பருவகாலங்களுடன் ஒத்திசைவதன் மூலம் கடவுளரோடு ஒத்திசையும் வகையில் நாட்காட்டியில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கூடுதல் நாட்களை சேர்க்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். கடவுளரை மகிமைப்படுத்தும் இந்தப் “புனித நாட்களை” எப்போது சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து, அந்நாட்களில் பொதுவிருந்து, சிறப்பு வழிபாடுகள் போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம் கடவுளர் தமக்களித்த அருட்கொடைகளை கொண்டாடி மகிழ்வதாக அவர்கள் கருதினர்.

இதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உலகின் இன்னொரு பகுதியில் ஜூலியஸ் சீசர் அதிகாரத்திற்கு வந்தார். அவர் சூரிய நாட்காட்டி முறையின் உருவாக்கத்தில் அடுத்த பெரியதொரு சீர்திருத்தத்திற்கு தலைமை தாங்கினார். அவர் 365 நாட்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட எகிப்திய நாட்காட்டி முறையின் முக்கிய அம்சங்களை அப்படியே வைத்துக் கொண்டு, நான்காண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளை கூடுதலாகச் சேர்க்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார். இந்நடைமுறையை அவர் அதிகாரபூர்வமாக்கிய ஆண்டு “குழப்ப ஆண்டு” என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் நாட்காட்டியைப் பருவ காலங்களோடு இணக்கமாகக் கொண்டு வருவதற்காக, அவ்வாண்டு மட்டும் வழமையான 365 நாட்களுக்குப் பதில் 445 நாட்களைக் கொண்டதாக ஆக்கப்பட்டது.

இந்த ஜூலியன் நாட்காட்டி முறை 1500 ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்தாலும், அதில் ஓர் உள்ளார்ந்த பிழை காணப்பட்டது. அதாவது, 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதில் ஒரு நாள் கூடிக் கொண்டே வந்தது. பதிமூன்றாம் கிரிகோரி அதிகாரத்திற்கு வந்தபோது, அது வரையிலும் பத்து நாட்கள் பிழை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஆகையால், சூரிய நாட்காட்டியின் 1582-ம் ஆண்டின் பத்து நாட்களை கழித்த கிரிகோரி, லீப் வருட விதியையும் திருத்தியமைத்தார். அதுவே இன்று ‘கிரிகோரியன் நாட்காட்டி’ என்று அறியப்படுகிறது. ஒவ்வொரு 3323 ஆண்டுகளுக்கும் ஒரு கூடுதல் நாள் என்றளவில் துல்லியம் கொண்டது அது. சூரிய நாட்காட்டி முறைகளின் இவ்வரலாற்றுச் சுருக்கத்தை கவனித்தால் அவை அனைத்திலும் பல பொதுச் சரடுகள் தென்படுகின்றன. 1) போலிக் கடவுளரையும் அல்லாஹ்வின் சில படைப்புகளையும் வழிபடுவது தொடர்பான பிரதான கூறுகளையும் 2) நாட்களும் மாதங்களும் பருவ காலங்களுடன் பொருந்திவர வேண்டும் என்பதற்காக காலத்தைக் கூட்டவும் குறைக்கவும் செய்யப்படும் தொடர் முயற்சிகளையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் (பாகம் 2) – கலீல் அப்துர் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *