அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

Posted on

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? (பாகம் 2) – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? (பாகம் 3) – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? (பாகம் 4) – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? (பாகம் 5) – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

♦ ♦ ♦ ♦ ♦

Acquiring political power: on whose terms and conditions? (Part 1) – Dr. Pervez Shafi, Crescent International, Ramadan 12, 1433

பர்வேஸ் ஷாஃபி (சிறப்புக் கட்டுரை, கிரசென்ட் இன்டர்நேஷனல் [ஆங்.], தொகுதி 41, எண் 6, ரமழான் 1433)

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தொடர்பான தன் கட்டுரையின் முதல் பாகத்தில், டாக்டர் பர்வேஸ் ஷாஃபி சன்னி அரசியல் சிந்தனையின் விநோதமான வளர்ச்சியையும் தற்கால இஸ்லாமிய இயக்கத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஆய்வு செய்கிறார்.

ஆங்கிலத்தில் இரண்டு பாகங்களாக உள்ள இக்கட்டுரையை தமிழில் ஐந்து பாகங்களாகப் பிரித்துள்ளோம். மேலே உள்ள படம் எகிப்தில் ஹோஸ்னி முபாரக் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் போது எடுக்கப்பட்டதாகும் (மொழிபெயர்ப்பாளர்).

♦ ♦ ♦ ♦ ♦

(பாகம் 1)

தற்போது நிகழும் (கி.பி. 2010களில் நடந்த அரபு வசந்தம்) முஸ்லிம் மறுமலர்ச்சி மற்றும் மாற்றங்கள் குறித்து தர்க்கப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் எளிதில் விளக்க முடியாத பல அம்சங்கள் உள்ளன. இவற்றை அவதானிக்கையில், சில சங்கடமான கேள்விகள் எழுகின்றன:

1. முஸ்லிம் நாடுகளில் குறிப்பிட்ட சில (சிவில் அல்லது இராணுவப் பின்னணி கொண்ட) தனிநபர்களோ குடும்பங்களோ நீண்டநெடுங்காலம் ஆட்சிசெய்ய முடிவது எப்படி? அதிகாரத்தில் இருப்பவர்களாயினும் அவர்களை எதிர்ப்பவர்களாயினும் வன்முறை மற்றும் படையை (force) மட்டுமே சார்ந்திருப்பது ஏன்?

2. இந்நாடுகளை பிரபுத்துவ அல்லது சர்வாதிகார ஆட்சிமுறையை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய ஏதோவொன்று அவற்றின் வரலாற்றுப் பரிணாமத்திலேயே இருக்கின்றதா?

3. முஸ்லிம் உலகில் மறுமலர்ச்சி மற்றும் இஸ்லாமிய மாற்றங்களை முன்மொழிபவர்களை அமெரிக்காவும் மேற்குலகும் ஆதரிப்பது ஏன்?

4. மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நாடுகளில், மேற்குலகுடனும் அதன் பெருவர்த்தக நிறுவனங்களுடனும் (corporations) ‘எப்போதும் போல சுமுகமானதொரு’ உறவு நிலவுவது ஏன்?

5. ஒரு மூச்சில் முஸ்லிம்களை நண்பர்கள் என்றும் அடுத்ததிலேயே பயங்கரவாதிகள் என்றும் தனது நலன்களுக்கேற்ப ஏகசமயத்தில் மாற்றிமாற்றிப் பிரகடனம் செய்யும் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் பொறிக்குள் முஸ்லிம்கள் தொடர்ந்து சிக்குவதன் காரணமென்ன?

6. இந்த மறுமலர்ச்சிகள் மற்றும் மாற்றங்களுக்கான மேற்கத்திய எதிர்வினை சன்னி உலகில் மட்டும் வித்தியாசமாக இருப்பது ஏன்? மறுபுறம் பார்க்கின், முஸ்லிம்களின் எதிர்வினையும் பொதுவாக மேற்குலகை ஒத்ததாகவே இருப்பது ஏன்?

7. இந்தப் புரட்சியாளர்கள் தமது சமூகங்களின் மீதான மேற்குலகின் மேலாதிக்கத்தையோ, மேற்குலக மதிப்பீடுகளையோ, முதலாளித்துவப் பொருளாதார மாதிரியையோ சவாலுக்கு உள்ளாக்காதது ஏன்?

8. முஸ்லிம்களிடம் தமது இலக்குகள் பற்றியும், அவற்றை அடையும் வழிமுறைகள் பற்றியுமான புலமைத்துவத் தெளிவு இருக்கின்றதா? அதாவது மறுமலர்ச்சியைத் துவக்கி, உருவாக்கவும், அணிதிரட்டி, ஒழுங்குபடுத்துவதற்கும் இறை பிரக்ஞை (முத்தகீ) உள்ள தலைமைத்துவத்தால் வழிநடத்தப்படுவதற்கும், இவற்றின் மூலம் இஸ்லாமிய நோக்குடன் இயைந்த வழிமுறைகளின் ஊடாக இலக்குகளையும் குறிக்கோள்களையும் அடையும் திறன்படைத்ததாக அவர்களின் புலமைத்துவ உலகநோக்கு இருக்கின்றதா?

9. இறுதியாக, யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில் இந்த அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படுகிறது?

இக் கேள்விகளுக்கான பதில்கள் ஓர் உலகநோக்கினுள், அதிலும் குறிப்பாக முழு இஸ்லாமிய வரலாற்றையும் தழுவியதாக அமைந்த ஓர் அரசியல் சிந்தனையில் தங்கியிருக்கின்றன. முஸ்லிம்கள் தமது உலகநோக்கு —இலக்குகள் மற்றும் அவற்றை அடையும்வழிமுறைகள் — குறித்து ஒத்திசைவான, முரண்பாடுகளற்ற புலமைத்துவத் தெளிவைப் பெற்றிருப்பார்களாயின் மேற்கூறிய அனைத்துக் கேள்விகளுக்கும் எளிதில் விடையளிக்க முடியும். எனினும் நிலைமை அவ்வாறு இல்லை. இந்தத் தெளிவின்மையானது ஒரு கருத்தியல் குழப்பத்தைக் காட்டுகிறது. இது முஸ்லிம்களின் அசல் எதிரிகளை இனங்காணுவதைத் தடுக்கிறது. இதனால் அவர்கள் ‘மேற்குலகின் சம்மதமின்றி அர்த்தமிகு மாற்றம் எதுவும் நிகழ்வது சாத்தியமில்லை’ என்ற அவல நிலையை ஏற்றுக் கொண்டவர்களாக தம் ஒவ்வொரு எட்டிலும் சமரசம் செய்து கொள்ளவும் வேண்டியுள்ளது. வருந்தத்தக்க விதத்தில், இத்தகையவொரு சூழ்நிலையை துனீஷியா, லிபியா, ஏமன், எகிப்து மற்றும் வளைகுடா ஷெய்க் ஆட்சிப்பிரதேசங்களிலும், தற்போது சிரியாவிலும் அவதானிக்க முடிகிறது.

முஸ்லிம் அரசியல் சிந்தனை குறித்து, குறிப்பாக சன்னி அரசியல் சிந்தனை குறித்து ஓர் அனைத்தளாவிய, முறைப்பாங்கான அணுகுமுறையை மேற்கொள்ளும்போது பிரச்சினை எங்கிருக்கிறது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடிகிறது. கிரசண்ட் இன்டர்நேஷனல் (ஆங்.) பத்திரிக்கையும் நாமும் (கட்டுரை ஆசிரியர்) உட்பிரிவுவாதக் கருத்தாக்கங்களிலிருந்து எப்போதும் விலகியே இருந்து வந்துள்ளோம். எனினும், பிரச்சினை ஒரு குறிப்பிட்ட உட்பிரிவின் கருத்தியலில் இருக்கிறது எனும்போது வெறுமனே அதனை அலட்சியப்படுத்துவதோ கண்டனம் செய்வதோ மட்டும் போதாது. அவ்வுட்பிரிவின் கருத்தியலில் உள்ள பிரச்சினையை அதன் வேரிலேயே இனம்காணும் வரை முஸ்லிம் ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் வெற்றிகரமாக அமையாது.

முஸ்லிம் உலகில் பெருந்தொகையினர் ஏற்றுப் பின்பற்றும் ஒன்றாக சன்னி அரசியல் சிந்தனை உள்ளது. ஆகவே அரசியல் குழப்பத்திற்கும் சிந்தனை மற்றும் செயலில் தோன்றும் முரண்பாடுகளுக்கும் தோற்றமூலமாக உள்ள இந்த அரசியல் சிந்தனையை மறுபரிசீலனை செய்வதற்கு ஒரு தார்மீகத் துணிவும், புலமைத்துவ நேர்மையும், விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. இதன் காரணமாகத்தான் புரட்சியாளர்கள் மத்தியிலும் கூட அது தொடுவதற்குத் தடைசெய்யப்பட்டவொரு கருப்பொருளாகவே இருக்கிறது.

முதற் கட்டம்
இஸ்லாத்தின் திசைநெறியில் மாற்றம், வீழ்ச்சி மற்றும் சிதைவு

இரண்டு கட்டங்களாகப் பிரிக்கத்தக்க சன்னி அரசியல் சிந்தனையின் வரலாற்றுப் பரிணாமத்திலிருந்தே மேற்கண்ட தீர்மானம் வருவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்தியக் காலனித்துவம் பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் முஸ்லிம் உலகினுள் நுழைந்து மேலாதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. இந்நிகழ்வு வரையான முதற் கட்டத்தில் சன்னி அரசியல் சிந்தனையும் உலகநோக்கும் கோத்திரவாதம், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டி-பொறாமை, எதேச்சதிகாரம் ஆகியவற்றில் சிக்குண்டுக் கிடந்தன. இத்தீமைகளைக் களைந்தெறியும் திறன்படைத்த இஸ்லாத்தின் பரிசுத்தக் கோட்பாடுகள் அமலாக்கம் பெறுவதற்கான வாய்ப்பு துவக்கத்திலிருந்தே ஒருபோதும் வழங்கப்படவில்லை.

நமது அன்பிற்கினிய இறைத்தூதரின் (ஸல்) மரணத்தையடுத்து இஸ்லாத்தின் திசைநெறியில் மாற்றம் ஏற்படலானது. இறைத்தூதருக்கும் (ஸல்) அவரின் தோழர்களுக்கும் எதிராகத் தொடுக்கப்பட்ட பல்வேறு போர்களில், இணைவைத்த தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுவிட்டனர். எனினும், மக்கா வெற்றி வரை பிழைத்திருந்த அபூ சுஃப்யானும் அவரது குடும்பமும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு வேண்டாவெறுப்பாக முஸ்லிம்களாக மாறினர். முஸ்லிம்களாக மாறிவிட்ட தமது எதிரிகள் விஷயத்தில் இறைத்தூதரின் (ஸல்) போக்கு எப்போதுமே உளப்பூர்வமானதாகவும் பரிவு நிறைந்ததாகவுமே இருந்தது. ஆனால், அபூ சுஃப்யானின் விடயத்திலோ அவருடைய தீவிர இஸ்லாமிய எதிர்ப்பின் காரணமாக, அவர் தென்படும் போதெல்லாம் இறைத்தூதர் (ஸல்) தமது முகத்தைத் திருப்பிக் கொள்வார்; அவருடன் நெருக்கமான உறவைப் பேணவுமில்லை.

இறைத்தூதர் (ஸல்) இவ்வுலகை பிரிந்தபின், அபூ சுஃப்யானின் குடும்பத்தினரும் பிள்ளைகளும் இரத்தபந்தச் சலுகையின் ஊடாக இஸ்லாமிய அரசில் முக்கியப் பதவிகளைப் பெற்றுக் கொண்டதுடன், புதிதாகப் பெற்ற இந்த அதிகாரத்தை நன்கு வலுப்படுத்திக்கொள்ளவும் ஆரம்பித்தனர். ஆக, அபூ சுஃப்யான் இறைத்தூதருடனான (ஸல்) நேரடி மோதலில் எதனை அடைந்துகொள்வதில் தோல்வியுற்றாரோ, அதனை இஸ்லாமிய வலயத்திற்குள் இருந்தவாறே அடைந்து கொண்டார்.

அபூ சுஃப்யானின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அரசியல் மற்றும் இஸ்லாமிய அரச நிர்வாகம் தொடர்பான முக்கிய இஸ்லாமியப் போதனைகளைத் திரித்தனர். இது அவர்களுடைய அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும், ஏதோவொரு வகையில் சட்டப்பூர்வத் தன்மையைப் பெறுவதற்கும் உதவி செய்தது. சூது, உட்சதி, வெளிப்படைப் போர் ஆகியவற்றினூடாக முஆவியா இஸ்லாமிய அரசின் சர்வாதிகார ஆட்சியாளராக மாறினார். அவர் இறைத்தூதரின் (ஸல்) தோழமையை ஒரேயொரு நாள் கூடப் பெற்றிராத நிலையிலும், ‘வேதவெளிப்பாட்டை எழுத்தில் பதிபவர்’ (காதிப் அல் வஹீ) என்றவொரு பட்டத்தைத் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார். மக்கா வெற்றிக்குப் பிறகு ஓராண்டுக்குள்ளாகவே வேதத்தின் இறுதி வெளிப்பாடு தோன்றி இஸ்லாத்தின் செய்தியை நிறைவு செய்துவிட்டது. அதைத் தொடர்ந்து இறைத்தூதரின் (ஸல்) மரணமும் நிகழ்ந்தது என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அபூ சுஃப்யான் இஸ்லாத்தின் போதனைகளை உருத்திரிப்பதன் மூலம் இரண்டு குறிக்கோள்களை அடைய நாடினார்: (1) போலி ஹதீஸ்களைப் புனைந்து உருவாக்குவதன் மூலமும் அசல் ஹதீஸ்களை இருட்டடிப்புச் செய்வதன் மூலமும் சட்டப்பூர்வத் தன்மையை ஏற்படுத்தி தனக்கும் தன் சகாக்களுக்கும் “அல்லாஹ் அவரை பொருந்திக் கொண்டான்” என்று பொருள்படும் “ரழியல்லாஹு அன்ஹு” போன்ற இஸ்லாமிய அடைமொழிகளை வழங்கிக் கொள்வது —இதன் மூலம் ஒரு முக்கிய குர்ஆன் வசனத்தின் அர்த்தத்தைத் தன்னுடைய நோக்கத்திற்குப் பொருந்தும் வகையில் அவர் மாற்றினார். (2) இறைத்தூதருக்கு (ஸல்) நெருங்கிய பல தோழர்கள் மற்றும் குடும்பத்தினர் நியாயமாகவும் சட்டப்பூர்வமாகவும் பெற்றிருக்க வேண்டிய பதவிப் பொறுப்புகளை விட்டு அவர்களைத் தடுப்பது.

மேலும், அவரை எதிர்த்தவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இவ்வாறு சட்டவிரோதத் தன்மையும், அதற்கெதிராக முன்வைக்கப்படும் வாதங்களை முறியடிப்பதற்கு இயல்பாகவே வன்முறையைப் பிரயோகிப்பதும், ஒடுக்குமுறையும் அந்த நாள்தொட்டே சன்னி அரசியல் சிந்தனையின் வழக்கமாகவே இருந்து வரலாயிற்று. இந்தத் திரிபுகள் மற்றும் வழிகேடுகளை அம்பலப்படுத்தி உண்மை இஸ்லாமியப் போதனைகளைப் பிரச்சாரம் செய்வதிலிருந்து இறைத்தூதரின் (ஸல்) பல நெருங்கிய தோழர்கள் தடுக்கப்பட்டனர். அவர்கள் தம் பணியில் உறுதியாக இருந்தபோது தொலைதூரப் பிரதேசங்களுக்கு நாடு கடத்தப்பட்டனர்; சிறையிலடைக்கப்பட்டனர் அல்லது விஷமூட்டப்பட்டனர். இவ்வாறாக தம் ஏகாதிபத்தியக் கனவுகளை நனவாக்குவதற்கான களம் அதிகாரப் பசி கொண்ட அபூ சுஃப்யானின் கோத்திரத்துக்கு அகலத் திறந்துவிடப்பட்டது.

♦ ♦ ♦ ♦ ♦

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றல்: யாருடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் பேரில்? (பாகம் 2) – டாக்டர் பர்வேஸ் ஷாஃபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *