ஹமீத் அல்கர்

பேராசிரியர் ஹமீத் அல்கர், 1940-ல் இங்கிலாந்தில் பிறந்தார். இவர் பிறப்பாலன்றி, இஸ்லாத்தைத் தெரிவால் தழுவியவர். இளமையில் இருந்தே மொழிகள் மீது பேரார்வம் கொண்டிருந்த அல்கர், உயர்நிலைப் பள்ளியில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மானிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். கல்லூரியில் சேர்வதற்கு முன்பான ஒரு வருடத்தை, அவர் ஜெர்மனியின் ஃபிரெய்பர்க் பல்கலைக்கழகத்தில் கழித்தார். கேம்பிரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரியில் கீழை மொழிகளில் (அரபி, பார்சி) இளங்கலைப் பட்டப்படிப்பை (1958-1961) நிறைவுசெய்தார். அதன் பிறகு, தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான புலமைப் பரிசிலைப் பெற்றார். ஈரானுக்குச் சென்ற அல்கர், பாரசீக இலக்கியம் மற்றும் ஈரானிய வரலாறு தொடர்பான பாடநெறிகளை நிறைவுசெய்தார். அவர் தனது முனைவர் பட்டத்துக்கெனப் பணியாற்றத் திட்டமிட்டிருந்தார். எனினும், அவர் தெஹ்ரானிலிருந்த வருடங்களில் (1961-62) ஈரானில் பெரும் கொந்தளிப்பானதொரு சூழல் நிலவியது. தெஹ்ரான் பல்கலைக்கழகம் மீது மன்னர் ஷாவின் படையினர் நடத்திய பிரபலமான தாக்குதலை நேரில்காணும் மறக்கவியலாத அனுபவத்தைப் பெற்றார். இதனால், பல்கலைக்கழகப் படிப்பைக் கைவிட்டு, ஓராண்டு முழுக்க ஈரானில் பலவிடங்களுக்கும் சுற்றுப்பயணங்கள் செய்து, ஈரானில் நிலவிய சமூக-அரசியல் நிலைமைகளைப் புரிந்துகொள்ள முயன்றார்.

பிறகு, அல்கர் தனது முனைவர் பட்டத்துக்காக கேம்பிரிட்ஜுக்குத் திரும்பினார். ஈரானில் வாய்க்கப்பெற்ற மேற்கண்ட அனுபவத்தால் உந்தப்பெற்ற அவர், தனது ஆய்வுத் தலைப்பினைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஷியா அறிஞர்களது அரசியல் பாத்திரம் பற்றியதாக (ஈரானில் மதமும் அரசும், 1785-1905: கஜர் காலத்தில் உலமாக்களின் பாத்திரம்) அமைத்துக் கொண்டார்; 1965-ல் முனைவர் பட்டத்தை நிறைவுசெய்தார். அவர் பெர்க்லீயில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அண்மைக் கிழக்கு ஆய்வுகள் துறையில், கடந்த நாற்பத்தைந்து வருடங்களாய்ப் (1965-2010) போதனைப் பணியாற்றி சமீபத்தில் ஓய்வுபெற்றிருக்கிறார். அவர் பல்கலைக்கழகத்தில் அரபி-ஃபார்சி-துருக்கிய இலக்கியம், இஸ்லாமிய வரலாறு, தஃப்சீர், இஸ்லாமியக் கலாச்சாரம், சூஃபிசம், ஷியாயிசம், இஸ்லாமியப் புத்தாக்க இயக்கங்கள் என்று ஒரு பரந்த வீச்சிலான பாடநெறிகளை ஒழுங்குசெய்து வந்தார்; மேற்கூறிய துறைகளில் புலமைமிகு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். பாரசீக-துருக்கிய உலகின் இஸ்லாமிய வரலாறே அல்கரின் பிரதான ஆய்வு வெளியாய்த் திகழ்ந்து வந்திருக்கிறது. குறிப்பாக, கடந்த இரு நூற்றாண்டுகால ஈரானிய ஷியாயிசமும் நக்ஷ்பந்திய்யா சூஃபி மரபும் அவரது சிறப்பார்வ வெளிகளாய் விளங்குகின்றன.

ஹமீத் அல்கர், மத்திய கிழக்கு மொழிகளிலும் (அரபி, ஃபார்சி, நவீன மற்றும் உஸ்மானியத் துருக்கிய மொழி) அரை டஜன் ஐரோப்பிய மொழிகளிலும் பாண்டித்யம் பெற்றுத் திகழ்கிறார். அவர் முஸ்லிம் உலகு நெடுகச் செய்த ஏராளமான பயணங்களும், அவரது புலமையைச் செறிவாக்கி இருக்கின்றன. ஈரான், துருக்கி, ஆஃப்கன் மற்றும் பால்கன் பிரதேச நாடுகளின் வரலாறு தொடர்பாக ஏராளமாய் எழுதிவருகிறார். அவர் Encyclopedia Iranica-க்கு நூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளைப் பங்களிப்புச் செய்திருக்கிறார். சுயமாய் நூல்கள்-ஆய்வுரைகள் எழுதுவதோடு இமாம் குமைனி, அலீ ஷரீஅத்தி, சைய்யித் குதுப், பதியுஸ்ஸமான் சஈத் நூர்சி, சைய்யித் முஜ்தபா மூசவி லாரி, சைய்யித் மஹ்மூது தாலிகானி போன்ற முக்கிய இஸ்லாமிய ஆளுமைகள் பலரது ஆக்கங்களையும் மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார்.

2001 முதல், இஸ்லாமிய மனித உரிமைகள் கமிஷனின் (லண்டன்) ஆலோசகராய் இருந்துவருகிறார். 1988 முதல், தஃப்சீர் அல்-மீஸான் மொழியாக்கப் பணித்திட்டத்தின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்து வருகிறார். கலிஃபோர்னியா நீதிமன்றங்கள் முன் கொணரப்படும் இஸ்லாமியச் சட்டம் மற்றும் வழக்காறு தொடர்பான வழக்குகளில் பல்வேறு அரசு மற்றும் உள்ளூர் முகவாண்மைகளின் ஆலோசகராய் இருந்துவருகிறார். மலேஷியாவின் இஸ்லாமியக் கல்வியியல், அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (ISESCOˆ) வழங்கும் கலை-இலக்கியச் சாதனைக்கான ஃபராபி விருதினைப் (2009) பெற்றிருக்கிறார்; தெஹ்ரான் பல்கலைக்கழம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்திருக்கிறது.