ஜனாப் முஹம்மத் மார்மடியூக் பிக்தால் சாஹிப் இஸ்லாத்தின் தத்துவங் களை ஓதியுணர்ந்து, முஸ்லிமாகி, இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களின் நல்வாழ்வுக்கும் அரும்பாடுபட்ட ஆங்கிலேயப் பெரியாராகும். அசையாத மார்க்கப் பற்றும், சீரிய குண ஒழுக்கமும், நேர்மையும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கரைகாணா அன்பும் கொண்டவர் ஜனாப் பிக்தால் சாஹிப். பன்னிரண்டு மொழிகளில் வல்லுனராகவும், இலக்கிய நிபுணராகவும், தினசரிப்பத்திரிகை ஆசிரியராகவும், பள்ளிக் கூடத்தில் போதனை புரிந்த உபாத்தியாராகவும், ராஜதந்திரியாகவும், பல்வேறு துறைகளில் பணிபுரிந்த பிக்தால் பல சிறந்த நாவல்களை எழுதி உலகப் புகழ் பெற்றிருக்கிறார். திருக்குர்ஆனையும் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.
பிக்தால் 1875 ஏப்ரல் 7ஆம் தேதி லண்டனில் பிறந்தார். இவர் தந்தை சார்லஸ் கிரேஸன் பிக்தால் ஒரு பாதிரி. அவர் தமது மகனுக்கு வில்லியம் என்று பெயரிட்டார். வில்லியம் பிக்தால் சிறு வயதிலேயே புத்தி சாதுரியமும், கல்வியில் ஆர்வமும் உடையவராக விளங்கினார். ஆனால், இவர் மிகவும் பலவீன மான உடலுடையவராக இருந்தார். அதனால் அடிக்கடி நோய்வாய்ப் படுவதுண்டு. வில்லியம் பிக்தால் தமது வாலிப வயதிலேயே ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளையும் சுற்றிப் பார்த்ததுடன் பிரெஞ்சு, இத்தாலி, ஜெர்மன், டேனிஷ் மொழிகளையும் கற்றுக் கொண்டார். கீழை நாடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும், அங்குள்ள மொழிகளைக் கற்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அதிகம். கீழைநாடுகளின் சூரியப் பிரகாசமும், பேரீச்சம் பழமும், ஒட்டகங்களும், பாலையின் பரந்த மணல் வெளியும் அவர் கற்பனையில் ஒரு சுவர்க்கத்தையே கொண்டு வந்தன.
ஆகவே, வில்லியம் தமது பதினெட்டாவது வயதில் மத்தியக் கிழக்கு பிரதேசத்திலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் வேலை பெறும் நோக்கில் பரீட்சை எழுதினார். ஆனால் இவ்வேலை அவருக்குக் கிடைக்க வில்லை. எனினும் பிரிட்டிஷ் அயலுறவுத் துறையில் பெரிய வேலை பெறுவதற்கு மத்தியக் கிழக்கு நாடுகளையும், அவற்றின் மொழிகளை யும் அறிவது நல்லது என்று எண்ணிய வில்லியத்தின் தாயார், அவரைத் தம் செலவில் எகிப்திற்கு அனுப்பினார். பிக்தாலுக்கோ பிரிட்டிஷ் அயலுறவுத் துறையில் சேர்ந்து வேலை செய்ய விருப்பமில்லை. அவர் மத்தியக் கிழக்கு நாட்டு மக்களையும் அவர்கள் மொழிகளையும் அறிந்து கொள்ள இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். எகிப்தில் சிலகாலம் தங்கிவிட்டு வில்லியம் பிக்தால் சிரியா, பலஸ்தீன் முதலிய நாடுகளுக்கும் சென்றார். அங்குள்ள மக்களோடு நெருங்கிப் பழகினார். அவர்களின் மொழிகளைக் கற்றார். அவர்கள் பழக்கங்களைத் தாமும் பின்பற்றினார்.
இது சம்பந்தமாக அவருக்கு உண்டான மகிழ்ச்சியும், கருத்தும் இரு நாவல்களில் உருவெடுத்தன. அவற்றில் ஒன்று பதினான்கு பதிப்புகள் வெளிவந்ததென்றால் பிக்தாலின் நாவல் எழுதும் திறமையைப்பற்றி அதிகம் கூறத் தேவையில்லை. இந்த நாவல்கள் பிரெஞ்சு, ஜெர்மன், டேனிஷ் மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாயின. கீழை நாட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிக்தால் மீண்டும் இங்கிலாந்து சென்றார். இச்சமயம் எகிப்து அரசியல் குழப்பங்கள் நிறைந்த நாடாக இருந்தது. ஆங்கிலேயரின் அடக்குமுறையாட்சி நடைபெற்ற காலம் அது. அப்போது எகிப்தில் பிரிட்டிஷ் தூதராக இருந்த குரோமர் பிரபு பிக்தாலை அங்கு வரவழைத்து எகிப்திய மக்களின் மனப்பான்மையை விளக்கும் வேலையை அவருக்குத் தந்தார். ஆனால் பிக்தால் இதற்காகச் சம்பளம் பெற மறுத்ததோடு, ஆங்கிலேயருக்காக இரகசியப் போலீஸ் உத்தியோகம் பார்க்கமுடியாது என்றும் மறுத்துவிட்டார். இப்போது அவர் எகிப்திய மக்களின் வாழ்க்கையை வெகு நன்றாகப் புரிந்துகொண்டார். இதற்குப் பின் அவர் மனைவியும் அவரோடு சேர்ந்துகொண்டார். இந்தப் பின்னணியில் சில நாவல்களும் எழுதி வெளியிட்டார். இருவரும் எகிப்திலும், சிரியாவிலும், பாலஸ்தீனத்திலும் சுற்றுப் பயணம் செய்தார்கள். 1913-ல் பிக்தால் துருக்கிக்குப் போனார். துருக்கி மொழியைக் கற்றார். துருக்கியரின் வாழ்க்கையை நன்கு கவனித்தறிந்தார். இதை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய நாவல்தான் ‘லுகா நேரம்’ (முந்நேரம்) என்பது. அவர் நாவல்களில் கீழைநாட்டு வாழ்க்கையின் அற்புதமான விளக்கமிகுந்தது.
இதனால் கீழைநாட்டு விவகாரங்களில் அவர் ஒரு நிபுணர் என்று அறிஞர்கள் கருதினர். அமெரிக்காவில் இந்த மதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. துருக்கியிலிருந்து இங்கிலாந்து திரும்பிய சில மாதங்களில் பிக்தால் இஸ்லாத்தைத் தழுவினார்; முஹம்மத் மார்மடியூக் பிக்தால் ஆனார். ஜனாப் பிக்தால் ஏற்கனவே இஸ்லாத்தில் ஊறிப்போனவராகவும் குர்ஆன், ஹதீஸ் ஞானங்களைப் பெற்றவராகவும் இருந்தார். அரபி, துருக்கி மொழிகளைக் கற்று, அவற்றிலுள்ள மார்க்க நூற்களையெல்லாம் அவர் கற்றறிந்தார். மேலும், இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்க்கை அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தது. பிக்தால் முஸ்லிமான பிறகு லண்டனுக்கு அருகிலுள்ள ‘ஒக்கிங்’ என்ற இடத்திலுள்ள மஸ்ஜிதுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அங்கே அவர் பல பிரசங்கங்கள் (குத்பா) நிகழ்த்தியதுடன் இமாமாக இருந்து தொழுகையும் நடத்தியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து அவர் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவருடைய ஒரே மகன் சிறு வயதிலேயே காலமாகி விட்டார். பிக்தாலுக்கு வேறு குழந்தைகள் இல்லை. முதல் உலகப் போருக்குப் பிறகு துருக்கி, கிரீஸின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியபோது, முஸ்லிம் உலகின் உண்மைச் செய்திகளை வெளியிடும் நோக்குடன் லண்டனில் நிறுவப்பட்ட இஸ்லாமியச் செய்தி அலுவலக வேலைகளில் பிக்தால் பெரும் பங்கெடுத்துக் கொண்டார். இந்த நிறுவனத்திற்கு இவரே தலைவராகவும் இருந்து வந்தார். இதன் சார்பில் ‘இஸ்லாமிக் நியூஸ்’ என்று ஒரு பத்திரிக்கை வெளிவந்தது. அது இந்தியாவுக்குள் வரக்கூடாது என்று இந்திய அரசாங்கம் தடை விதித்தது. இதன் பெயர் ‘முஸ்லிம் அவுட்லுக்’ என்றும் பிறகு, ‘முஸ்லிம் ஸ்டாண்டர்ட்’ என்றும் மாற்றப்பட்டு வெளிவந்தது. எனினும் இதையும் ஆங்கில அரசாங்கம் இங்கு வரவிடவில்லை. 1920ஆம் வருஷம் ஜனாப் பிக்தால் இந்தியா வந்தார். ‘பம்பாய் கிராணிகிள்’ என்ற தினசரியின் ஆசிரியராக அமர்ந்தார். நான்கு ஆண்டுகள் அதைத் திறமையுடன் நடத்தினார். எளிய, சுருக்கமான, ஆனால் கருத்து நிரம்பிய தலையங்கங்கள் எழுதி பத்திரிகையுலகில் ஒரு புது வழியை வகுத்துக் கொடுத்தார்.
பிக்தால் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் மிகவும் கண்டிப்பானவர். தமது அலுவலகத்தில் வேலை பார்க்கும் முஸ்லிம்களும் அவ்விதமே இருக்கவேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். பிக்தால் ‘பம்பாய் கிராணிகிள்’ பத்திரிகையின் தலைமையாசிரியராக இருந்த சமயம் நடந்த ஒரு முக்கிய விவாதத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். மறு உலகில் நற்பதவி கிடைப்பதற்காக இவ்வுலகில் நற்கருமங்கள் மட்டும் செய்தால் போதுமா, அல்லது நற்கருமங்கள் செய்வதுடன், இறைத்தூதரையும் வேதத்தையும் ஒப்புக்கொள்ளவும் வேண்டுமா என்பதே அவ்விவாதம். பிக்தால் முந்திய அபிப்பிராயத்துக்கு ஆதாரம் கொடுத்து எழுதினார். மௌலானா முஹம்மது அலி ஜௌஹர் பிந்திய அபிப்பிராயமே சரி என்று எழுதினார். பிக்தால் ‘கிலாஃபத் புல்லெட்டின்’ என்ற படங்கள் நிறைந்த வார இதழ் ஒன்றையும் சிறிது காலம் வெளியிட்டு வந்தார். ‘பம்பாய் கிராணிகிளை’ விட்டு விலகிச் சிறிது காலம் ஓய்வெடுத்து வந்த அவர் 1925 ஜனவரி முதல் தேதி நிஜாம் அரசின் அழைப்பின் பேரில் ஹைதராபாத் சென்றார். ஹைதராபாத்தில் அவர் சதர்காட் என்னு மிடத்தில் இருந்த உயர்தரப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக நியமனம் பெற்றார். மாணவர்களை அடிக்காதபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையையும், அவர்களை ஒழுக்க சீலர்களாக்கும் பயிற்சி களைத் தருவதையும் அவர் நன்கு போதித்து வெற்றி கண்டார்.
1926ம் வருஷம் மலபாரில் தலைச்சேரியில் நடந்த ‘கேரள முஸ்லிம் ஐக்கிய சங்க’ மாநாட்டில் தலைமை வகித்து ஓர் அரிய சொற்பொழிவு நிகழ்த்தினார். முஸ்லிம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் எத்தகைய கல்வி போதிக்கப்பட வேண்டும் என்பதை அச்சமயம் விளக்கினார். மாப்பிள்ளை முஸ்லிம்களின் மார்க்கப் பற்றுதலும், ஒழுக்கமும் பிக்தாலை பெரிதும் கவர்ந்துவிட்டன. “மாப்பிள்ளை முஸ்லிம்களை நான் முதன்முதலில் பார்த்ததுமே இஸ்லாம் மீண்டும் உயர்நிலை யடையும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அவர்கள் அந்த அளவுக்கு நேர்மையும் உண்மையும், சூதுவாதற்ற தன்மையும், சுறுசுறுப்பும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்” என்று அவர், பின்னர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாப்பிள்ளை முஸ்லிம்கள் பிக்தால் சாஹிபின் மனதைக் கவர்ந்தது போலவே, பிக்தாலும் அவர்களுடைய மனதைக் கவர்ந்துவிட்டார். உள்ளத்திலும் நடத்தையிலும் பிக்தால் ஓர் உண்மை முஸ்லிமாக விளங்கியதே இதற்குக் காரணம். அவர் தலைமை தாங்கச் சென்ற மாநாட்டு நிகழ்ச்சிகளைக்கூட, தொழுகை நேரங்களில் பிக்தால் கண்டிப்பாக நிறுத்தி வைத்துவிட்டார். குறிப்பாக, ஒரு தீர்மானத்தை ஓர் உறுப்பினர் பாதி படித்துக் கொண்டிருக்கும் வேளையில் அஸர் தொழுகைக்கான பாங்கு சத்தம் கேட்டது. உடனே பிக்தால் அவரிடம் தீர்மானம் படிப்பதை நிறுத்தச் சொன்னார். “இன்னும் கொஞ்சம்தானே இருக்கிறது, படித்து முடித்துவிடுகிறேன்” என்றார் அவர். “பாங்கு சொல்ல ஆரம்பித்துவிட்டால் தொழுகை முடிந்தபின்பே மற்ற வேலை களை வைத்துக்கொள்ளமுடியும். வேண்டுமானால் பிறகு மீண்டும் முழு தீர்மானத்தையும் படித்துக்கொள்ளலாம்” என்று கூறி மாநாட்டு நடவடிக்கைகளை நிறுத்தி விட்டார் பிக்தால்.
1926ஆம் ஆண்டிலேயே ‘இஸ்லாமிக் கல்ச்சர்’ என்ற பெயருடன் ஓர் உயர்தர பத்திரிகையையும் பிக்தால் ஆரம்பித்தார். இது மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வெளிவரும் பத்திரிகை. இதற்கு நிஜாம் அரசு ஆதரவு அளித்தது. இஸ்லாமியக் கலைப்பண்பின் பல்வேறு அம்சங் களையும் விளக்கிக் காட்டுவதுதான் இப்பத்திரிகையின் நோக்கம். சுமார் பத்து ஆண்டுகள் இவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த இப்பத்திரிகை உன்னதமான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அறிவு விருந்தையும் அள்ளி நல்கிற்று. இப்பத்திரிகையின் சந்தாதாரர்களில் எழுபது சர்வகலாசாலைகளும் இருந்தன எனில் இதன் சிறப்பைப்பற்றி அதிகம் கூறத்தேவையில்லை. இப்பத்திரிகையின் ஆங்கில நடை மிகவும் உயர்ந்ததாக இருந்தது. இதனால் பல அறிஞர்களுடைய கட்டுரை களையும் பிக்தாலே திருத்தி உயரிய நடையிலாக்கி வெளியிட்டிருக்கிறார். ஒரு வெளியீட்டில் பிக்தால் எழுதிய கட்டுரையில் ஒன்பது மொழிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன என்று அவர் நண்பர் ஒருவர் கூறுகிறார். 1927 ஜனவரியில் பிக்தால் சென்னை நகருக்கு வந்தார். சென்னையின் வள்ளலும் சமூக ஊழியருமான ஜமால் முஹம்மது ஆங்கிலம் கற்கும் முஸ்லிம் மாணவர்கள் மார்க்க ஞானமே இல்லாமல் வழிதவறி விடுவதைத் தடுத்து, அவர்களிடையே இஸ்லாத்தைப் பற்றிய உண்மை யான அறிவைப் பரப்ப ஓர் திட்டம் வகுத்தார். அதன்படி ஆண்டு தோறும் புகழ்பெற்ற முஸ்லிம் பேரறிஞர்களில் ஒருவரைச் சென்னைக்கு அழைத்து வந்து இஸ்லாத்தைப் பற்றி பல சொற்பொழிவுகள் நிகழ்த்தும் படிச் செய்தார். இதற்காக ஜமால் முஹம்மது பல்லாயிரக் கணக்கில் பணம் செலவு செய்தார். ‘இஸ்லாத்தைப் பற்றிய சென்னை சொற் பொழிவுகள் கமிட்டி’ என்று ஒன்றையும் இதற்கென ஏற்படுத்தினார். முதன்முதலில் 1925ஆம் ஆண்டில் இறைத்தூதர் அவர்களின் குண ஒழுக்க மேம்பாட்டை விளக்கி மௌலானா செய்யிது சுலைமான் நத்வி சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். 1927இல் இஸ்லாமிக் கலைப்பண்பைப்பற்றி பிக்தால் எட்டு சொற் பொழிவுகள் நிகழ்த்தினார். 1930இல் மகாகவி அல்லாமா இக்பால் ‘முஸ்லிம்களுடைய கருத்துகளில் புனர் நிர்மாணம்’ எனும் பொருள் பற்றித் தமது பிரசித்தி வாய்ந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1927இல் பிக்தால் செய்த பிரசங்கங்கள் கோகலே ஹாலில் நடந்தன. முதல் நாளன்று கூட்டத்துக்கு ஸர் ஸி. பி. ராமசாமி ஐயர் தலைமை வகித்தார். பிக்தால் இங்கு செய்த எட்டு சொற்பொழிவுகள்தாம் இந்நூலில் எட்டு அத்தியாயங்களாகத் தரப்பட்டுள்ளன.
பிக்தாலுக்கு இஸ்லாத்தின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை, மார்க்க விஷயங்களில் அவருக் கிருந்த ஆராய்ச்சி, நெடுங்காலச் சிந்தனை, ஆழ்ந்த ஞானம், பரந்த அறிவு, பல தரப்பட்ட நீண்ட அனுபவங்கள் யாவற்றையும் ‘இஸ்லாமியக் கலைப் பண்பில்’ தெளிவாகக் காணலாம். இச்சொற்பொழிவுகள் பின்னர் நூலுருவில் வெளியிடப்பட்டு அந்நூல் பல பதிப்புகள் அச்சாயிற்று. இதைப் பரப்புவதில் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் எடுத்துக்கொண்ட பெருமுயற்சி குறிப்பிடத்தக்கது. பிக்தால் சென்னைக்கு வந்திருந்த சமயம், தான் திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உத்தேசித்திருப்பதை ஹாஜி ஜமால் முஹம்மது சாஹிபிடம் கூறினார். அதுவரை வெளிவந்த எந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் அவருக்குத் திருப்தி தரவில்லை. அதனால் ஒரு நல்ல குர்ஆன் மொழிபெயர்ப்பின் அவசியத்தை உணர்ந்த அவர் தமது விருப்பத்தைச் சென்னை வள்ளலிடம் கூறினார். அது வெளியாக முப்ப தாயிரம் ரூபாய்வரை செலவாகும் என்றும் தெரிவித்தார். ஹாஜி ஜமால் முஹம்மது தாமே அத்தொகையைத் தந்துதவுவதாக வாக்களித்தார். பின்னர் 1928ஆம் ஆண்டு திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பூர்த்தி செய்வதற்காக நிஜாம் அரசு அளித்த இரண்டு வருட விடுமுறையில் பிக்தால் லண்டனுக்குப் புறப்பட்டார். அவர் கொழும்பு வழியாகச் செல்ல, சென்னை வந்தார். அச்சமயம் ஹாஜி ஜமால் முஹம்மது திருக் குர்ஆன் மொழிபெயர்ப்பு முழுமையாகப் போகும் செய்தியை அறிந்து மகிழ்ந்தவராகத் தாம் வாக்குக் கொடுத்தபடி முப்பதாயிரம் ரூபாயையும் தரத் தயார் என்றும், அதை அப்போதே பெற்றுக்கொள்ளலாமென்றும் கூறினார். பிக்தால் விரும்பியிருந்தால் அத்தொகையை உடனே பெற்றுக் கொண்டிருக்கலாம். அன்றைய நாளில் முப்பதாயிரம் ரூபாய் என்றால், இன்றைய ரூபாய் மதிப்பில் மூன்று நான்கு மடங்கு அதிகமாக்கிப் பார்க்க வேண்டிய தொகைதான். ஆனால், பிக்தாலின் நேர்மையைக் கவனி யுங்கள்! “இந்த வேலையைச் செய்து முடிக்க சம்பளத்துடன் விடுமுறை பெற்றிருக்கிறேன். மேலும் இதை அச்சிட்டு வெளியிட வண்டனில் உள்ள ஒரு பிரசுர நிலையமே முன் வந்திருக்கிறது. எனவே எனக்கு அந்தப் பணம் தேவையில்லை” என்று கூறிவிட்டார் பிக்தால். ஹாஜி ஜமால் முஹம்மது, பிக்தாலை ஒரு இறை நேசரின் அந்தஸ்திலிருப்பவர் என்று குறிப்பிட்டதுண்டு. லண்டனில் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை முடித்துக்கொண்டு அவர் எகிப்து சென்றார். அங்குள்ள அறிஞர்கள் அவர் மொழிபெயர்ப்பைப் பரிசீலனை செய்தனர். குறிப்பாக அல்அஸ்ஹர் சர்வகலாசாலையில் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த ஷேக் முஸ்தபா அல் மாராகி அதைப் பரிசீலித்துப் பல திருத்தங்கள் கூறினார். அவற்றிற்கேற்ப மொழிபெயர்ப்பை அமைத்துக்கொண்ட பின், 1930ஆம் வருடம் லண்டனிலும் நியூயார்க்கிலும் ஒரே சமயத்தில் பிக்தாலின் மொழி பெயர்ப்பு வெளியாயிற்று. அதன்பின், ஒரு பக்கம் அரபி மூலமும், அதன் எதிர் பக்கம் மொழிபெயர்ப்புமாக ஹைதராபாத் அரசால் வெளியிடப் பட்டது. இதுவரை ஆங்கிலத்தில் வெளிவந்த திருக்குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் பிக்தாலுடையது பல வழிகளிலும் சிறந்தது என்பது பலருடைய கருத்து. நேரடியானதாகவும், சரியான பதப்பிரயோகங்கள் உடையதாகவும், குழப்பமில்லாததாகவும் உள்ள மொழிபெயர்ப்பு அவருடையது. இந்த மொழிபெயர்ப்புக்குப் பெயர் தருவதிலும் பிக்தால் மிகுந்த எச்சரிக்கையும் பக்தியும் காட்டியிருப்பதைக் குறிப்பிடாமலிருக்க முடியவில்லை. இறை வேதமான திருக்குர்ஆனை வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பதென்பது இயலாத காரியம், அதன் கருத்தைத்தான் தரலாம் என்பது அவர் அபிப்பிராயம். எனவே தமது மொழி பெயர்ப்புக்கு, ‘மகிமை பொருந்திய குர்ஆனின் கருத்துரை’ என்றே பெயர் தந்திருக்கிறார். பிக்தால் மீண்டும் ஹைதராபாத் திரும்பி வந்து ‘இஸ்லாமிக் கல்ச்சர்’ பத்திரிகையை நடத்தி வந்தார். அத்துடன் நிஜாமின் சிறிய சகோதரர் சாஹிப்ஜாதா பாஸாலத் ஜங்கின் கண்காணிப்பு ஆலோசகராகவும், ஹைதராபாத் சமஸ்தானத்தின் செய்தித் துறை தலைவராகவும், நிஜாமின் புதல்வர்கள் ஐரோப்பியப் பயணம் செய்தபோது அவர்கள் பாதுகாவல ராகவும் இருந்திருக்கிறார். முன்னாள் துருக்கி கலீஃபா சுல்தான் அப்துல் மஜீதுகான் பிக்தாலிடம் மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார். எனவே நிஜாமின் இரு புதல்வர்களுக்கு இந்த கலீஃபாவின் குடும்பத்தில் திருமணம் நடக்க ஏற்பாடு செய்தவர்களுள் பிக்தால் தலையானவராக விளங்கினார்.
1935ஆம் ஆண்டு பிக்தால் தமது பதவியை விட்டு விலகி லண்டன் சென்றார். அங்கிருந்தவாறே அவர் ‘இஸ்லாமிக் கல்ச்சர்’ பத்திரிக்கையின் ஆசிரியர் வேலையைச் செய்து வந்தார். தமது ஓய்வு நேரத்தில் ஆலம்கீர் ஔரங்கஜேப்பின் ஆட்சிக் காலத்தைப் பின்னணியாகக் கொண்டு ‘புழுதியும் மயிலாசனமும்’ என்ற பெயரில் ஒரு நாவல் எழுதி அதை வெளியிடத் தயார் செய்து கொண்டிருந்தார். 1936ஆம் வருடம் அவர் இங்கிலாந்திலுள்ள கார்ன்வால் மாகாணத்தில் வசித்து வந்தார். அப்போது நமது கலைப்பண்பு நூலில் உள்ள கட்டுரைகளை அவர் திருத்திச் சரிசெய்து கொண்டிருந்தார். இச்சமயம் ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கு ரசனையாக இருக்கும் முறையில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் நூலுருவில் ஆக்கவேண்டும் என்று தென் இந்தியா முஸ்லிம் கல்விச் சங்க நிர்வாகக் கமிட்டி (இதன் அன்றைய தலைவர் ஹாஜி ஜமால் முஹம்மது) ஒரு தீர்மானம் செய்தது. இவ்வித நூலை எழுதத் தகுந்தவர் பிக்தாலே என்று முடிவு செய்து ஹாஜி ஜமால் முஹம்மது அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன்படி எழுதித் தருவதாக பிக்தாலும் பதில் எழுதினார். ஆனால், அக்கடிதம் சென்னை வருமுன் 1936 மே மாதம் 18ஆம் தேதி இரவு முஹம்மத் மார்மடியூக் பிக்தால் மறு உலகடைந்து விட்டார். அச்செய்தி உடனே தந்தி மூலம் ஹாஜி ஜமால் முஹம்மதுக்குக் கிடைத்தது. பிக்தால் உயிர் பிரியும் இரவில் இந்த ‘இஸ்லாமியக் கலைப்பண்பு’ நூலிலுள்ள கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்தாராம். அதில் கடைசி பகுதியில் வரும் இந்த வசனத்தைத்தான் அவர் கடைசியாகத் திருத்தி முடித்திருந்தார்.
நன்மை செய்து கொண்டு எவன் தன் சித்தத்தை அல்லாஹ்விடம் முற்றிலும் சரணடையச் செய்து விடுகிறானோ, அவனுக்கு அவன் செய்யும் நன்மையின் கூலி அவன் இறைவனிடம் உண்டு. அவனை யொத்தவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துயர் அனுபவிக்கவும் நேராது. (2:112) இஸ்லாம் மீண்டும் உன்னத நிலையை எய்த வேண்டும்; முஸ்லிம்கள் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும் என்ற ஆர்வம் மிகக்கொண்டிருந்த பிக்தால் அவர்களுக்கு, எல்லாம் வல்ல இறைவன் மறு உலகில் உயரிய பதவியைக் கொடுத்தருள்வானாக!