ஸஃபர் பங்காஷ்

டாக்டர் ஸஃபர் பங்காஷ் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை, லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில் பொறியியல் பட்டம் பெற்றவர். தற்போது கனடாவில் வசித்து வருகிறார். குறிப்பிடத்தக்க ஒரு இஸ்லாமிய இயக்க இதழியலாளர்; அரசியர் அவதானி-விமர்சகர். இஸ்லாமியச் செயல்பாட்டாளர். சமகால இஸ்லாமியச் சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் (ICIT) தற்போதைய இயக்குனர். இஸ்லாமிய இயக்க விவகாரங்கள் தொடர்பான பகுப்பாய்வுகளிலும் செயற்பாடுகளிலும் முனைப்போடு ஈடுபட்டுவரும் ஒரு முஸ்லிம் சிந்தனையாளர் குழுமம் தான் இந்த ICIT. யார்க் பிராந்திய இஸ்லாமிய சமூகத்தின் (ISYR) தலைவராக இருந்து வருகிறார். கிரசண்ட் இன்டர்நேஷனல் செய்திப் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் முஸ்லிம் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் துணை இயக்குனர். டாக்டர் கலீம் சித்தீக்கி நிறுவிய முஸ்லிம் பாரளுமன்றத்திலும் (பிரிட்டன்) அங்கம் வகித்திருக்கிறார். முஸ்லிம் ஒற்றுமைக்கான குழுவின் நிறுவனர். இவர் ஸியோனிசத்துக்கு எதிராகவும், கனடிய அரசாங்கத்தின் ஸியோனிச ஆதரவுப் போக்குக்கு எதிராகவும் உறுதியான குரலெழுப்பி வருபவர். பாகிஸ்தானின் அரசியல்-சமூகக் களங்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைக் கூர்ந்து அவதானித்து விமர்சித்து வருபவர். ஃபலஸ்தீன விடுதலையை ஆதரித்துப் பேசியும் எழுதியும் வருபவர்.

சமகால விவகாரங்கள் பற்றி கிரசண்ட் இன்டர்நேஷனல் செய்திப் பத்திரிக்கையில் வெளிவரும் இவரது விமர்சனக் கட்டுரைகள் மிகவும் துல்லியம் நிறைந்தவை. இவர் தற்போது சீறாவின் அரசியல் கோணங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். கொழும்பு (இலங்கை, 2000/2002), கராச்சி (பாகிஸ்தான், 2000), பிரடோரியா (தென்னாப்பிரிக்கா, 2001) போன்ற சர்வதேச நகரங்களில் நடத்தப்பெற்ற சீறா மாநாடுகளிலும், பிரடோரியாவில் (தென்னாப்பிரிக்கா, 2000) நடத்தப்பெற்ற இமாம் குமைனி நினைவு மாநாட்டிலும், ஒட்டாவாவில் (கனடா, 2000) நடத்தப்பெற்ற கலீம் சித்தீக்கி நினைவு மாநாட்டிலும் பங்குபெற்று ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருக்கிறார்.