இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி (பாகம் 1)

♦ ♦ ♦ ♦ ♦

சில குறிப்புகள்

நாம் மேலே தொடரும் முன் ஒருசில விஷயங்களை தெளிவுபடுத்துவது அவசியம் எனக் கருதுகிறேன். இங்கு, நாம் வரலாற்று நிகழ்வுகளை அவற்றின் போக்கிலேயே பார்க்க முற்படுகிறோம். இன்றைய மக்கள் இவற்றைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது நமக்கு முக்கியமல்ல. இறைத்தூதரின் (ஸல்) மறைவுக்குப் பிறகு உருவான அரசியல் கொள்கைகள், அவற்றின் வரலாற்றுப் பின்னணி, ஆணிவேர் போன்றவற்றைப் பற்றி நாம் பார்ப்போம்.

எனது வெள்ளிக்கிழமை உரைகளைக் கேட்போர், இதை  இன்னும் விரிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஓரிரு வருடங்களாகவே நான் இதைப் பற்றி விரிவாகவே பேசி வருகிறேன். ஏனெனில் உலக ஒழுங்கின் உச்சத்தில் இருக்கும் சில விஷமிகள், இத்தகைய அறியப்படாத வேற்றுமைகளைக் கிளறி நம்மிடையே வெறுப்பை உருவாக்க மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக, நான் இவ்விவகாரங்களில் எந்தப் பக்கம் சாய்கிறேன் என்ற கோணத்தில் இவ்வுரையை அணுகுபவர் நஷ்டமே அடைவார். இத்தகைய எண்ணங்களைக் களைந்து ஆரோக்கியமான சிந்தனையுடன் இதை அணுகுகினால் நீங்கள் பலனடைவீர்கள் என தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நாம் பேசும் பல்வேறு விஷயங்களுக்கும் பல்வேறு நியாயங்கள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இவற்றை அங்கீகரிப்பது இஸ்லாத்துக்கு விரோதமான காரியம் ஆகிவிடாது. இத்தனை வருடங்களுக்குப் பின்னரும் இவ்விஷயங்களை நாம் ஆரோக்கியமான சிந்தனையுடன் அணுகத்தவறி விட்டோம். நம் வரலாறு பிரச்சனைகளோடுதான் வளர்ந்து வந்துள்ளது. எனினும் இவற்றை சரிசெய்யும் பணியை ஏதோவொரு புள்ளியிலிருந்து துவங்கித்தான் ஆகவேண்டும். அதைத்தான் நாம் இங்கே செய்ய முற்படுகிறோம். ஷியா சிந்தனைப்பள்ளியிலிருந்து நாம் துவங்குவோம். இதைப்படிக்கும் ஷியாக்கள் இவற்றை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

ஷியாக்கள்

இவ்விவகாரங்கள் அனைத்திலிருந்தும் இமாம் அலீ தனித்து நிற்கிறார். ஷியாக்கள் என்று அழைக்கப்படுவோர் அவரை ஆதரித்தவர்கள் என்பதை நாம் அறிவோம். இமாம் அலீயின் மறைவுக்குப் பிறகு முஸ்லிம் சமூகத்தில் மூன்று விதமான வழிமுறைகள் மேலெழுந்தன. இதன் பொருள், ஏற்கனவே அவை இருக்கவில்லை என்பதல்ல. எனினும் அவரது மறைவுக்குப் பிறகு அவை வலுப்பெற்றன.

முதலாவது, ஷியா என்றழைக்கப்படும் அல் தஷய்யு ஆகும். இது பிரதானமாக அரசியல் இயக்கமாக உருவாகி, பிற்காலத்தில் மற்ற இரண்டு கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டது. இமாம் அலீயின் இல்லாமைக்கு மாற்றான ஒரு அரசியல் இயக்கமாக இது வளர்ச்சியடைந்தது. இரண்டாவதாக, மனிதனை ஆன்மீக சுத்தி செய்யும் நோக்கம் கொண்ட ‘அல் தஸவ்வுஃப்’ என்னும் வழிமுறை மேலெழுந்தது. மூன்றாவதாக அறிவு, சிந்தனை சார்ந்த ‘முஃதசிலா’ என்னும் வழிமுறை உருப்பெற்றது.

இஸ்லாமிய வரலாற்றின் பிற்காலங்களில் இம்மூன்று போக்குகளும் வீரியம் பெற்று திகழ்ந்தன. இம்மூன்றையும் நாம் இமாம் அலீயோடு தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். அதாவது அவர் உயிரோடு இருந்தபோது இம்மூன்றும் வெவ்வேறின்றி ஒரே இயக்கமாக இருந்ததைப் போலவும் அவரது மறைவுக்குப் பிறகு அவை தனித்தனி அடையாளங்கள் பெற்று வளர்ச்சியடைந்ததாகப் பார்க்கலாம். சூஃபி மற்றும் முஃதசிலாவிலிருந்து வேறுபட்டு ஷியா இருந்தது. ஷியா மற்றும் முஃதசிலாவிலிருந்து மாறுபட்டு சூஃபிக்கள் இருந்தனர்; அதேபோல், முஃதசிலாக்களும் மற்ற இரண்டிலிருந்தும் மாறுபட்டு இருந்தனர்.

‘சன்னி’களும் ‘ஷியா’க்கள்தான்!

இப்போது இங்கு ஒரு கேள்வி எழலாம். முஸ்லிம் சமூகத்தில் தோன்றிய மூன்று சிந்தனைப் போக்குகளைப் பற்றிக் கூறினோம். எனினும் இதில் ‘சன்னி’கள் விடுபட்டுள்ளனரே?! உலகெங்கும் பரந்து விரிந்து, பெரும் சமூகமாகக் காணப்படும் ‘சன்னி’களை விட்டுவிட்டோமே என்ற கேள்வி தோன்றலாம். ஆனால் உண்மை என்னவெனில் இன்று ‘சன்னி’கள் என அறியப்படுவோர், நாம் மேற்கூறிய மூன்று சிந்தனைப்பாங்குகளில் ஏதோ ஒன்றில் உள்ளடங்குவர். அவர்கள் ஷியாக்களோடு இருந்தனர் அல்லது சூஃபிகளோடு இருந்தனர் அல்லது முஃதசிலாக்களுடன் இருந்தனர். ஆனால் வருந்தத்தக்க விதத்தில், அரசுகள் ‘சன்னி’களை சொந்தம் கொண்டாடி தமதாக்கிக் கொண்டன. இன்றும் கூட இது நிகழ்வதைப் பார்க்கிறோம்.

வரலாற்றைப் பார்க்கையில் இமாம் அபூ ஹனீஃபா, இமாம் அஷ் ஷாஃபிஈ, இமாம் மாலிக் மற்றும் இமாம் ஹன்பல் ஆகியோர் அக்கால அரசுகளை எதிர்த்து நின்றனர் என்று அறிகிறோம். எனவே, நம்மீது விழுந்துள்ள வரலாற்றுச் சுமைகளை நீக்கி, அரசியல் ரீதியாகப் பார்த்தால், அவர்கள் —இமாம் அபூ-ஹனீஃபா, இமாம் ஷாஃபிஈ மற்றும் ஓரளவிற்கு இமாம் மாலிக்— தத்தம் கால இமாமுக்கு ஆதரவாக இருந்தனர் என்று கூறலாம். எனினும் மரபுகளில் ஊறிய இன்றைய மனங்களுக்கு சன்னிகளும் ஷியாக்கள்தான் என்ற செய்தியை கிரகித்துக் கொள்வது சிரமமாகவே இருக்கும். ஆகையால் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால், இத்தகைய ஷியா-சன்னி பிரிவு எந்த அர்த்தத்தையும் கொடுப்பதில்லை என்பது தெளிவாகிறது. இத்தனை காலமாக நம்மைத் தொற்றிக் கொண்ட வெறுமையை நிரப்ப நம்மிடையே தோன்றிய மரபுகளே இதற்குக் காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இமாமத்

இப்போது, ஷியாக்களுக்கான —இத்தகைய மரபுகள்  தோன்றுவதற்கு முன்னிருந்த— விளக்கத்தைப் பார்ப்போம். ஷியாக்களைப் பற்றிச் சொல்வதென்றால் பல விஷயங்கள், பல்வேறு சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் உள்ளன. எனினும் அவர்களுடைய தனியியல்பு அல்-இமாமா அல்லது இமாமத் கோட்பாடு ஆகும்.

இறைத்தூதர் (ஸல்) மறைந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் இமாம் பற்றி பொதுவாகக் கொண்டிருந்த கருத்துகளை நாம் ஏற்கனவே பார்த்தோம். இறுக்கமான மரபுகள் தோன்றுவதற்கு முன் ஷியாக்கள், இமாமத்தை எப்படிப் பார்த்தனர்? அவர்கள் கூறியதாவது, “இமாமத் என்பது அதன் செயல்படுதலில், இயக்கத்தில், பலாபலனில், பொது முஸ்லிம் சமூகத்தை எவ்வகையிலும் சார்ந்தது அல்ல”. அதாவது, தலைவர் யார், எப்படிப்பட்டவர் என்பது பற்றி மக்களின் கருத்து என்ன என்பது ஒரு பொருட்டே அல்ல. அதில் மக்களின் உள்ளீடு எதுவும் இல்லை. அது ஒரு மரபாக, சாசனமாக தொடர்ந்து வருவது.

ஒருவர் அவருக்கு முன் வந்தவரால் நியமனம் —இதற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல் ‘விசாயா’— செய்யப்படுவதாலேயே இமாம் ஆகி விடுகிறார். முழு முஸ்லிம் சமூகமும் சேர்ந்து அவரை எதிர்த்தாலும் அவர்தான் இமாம். அவர் அவருக்கு முன்னிருந்தவரால் நியமனம் செய்யப்பட்டவராக இருப்பார்; இப்படியே இது இறைத்தூதர் வரை செல்கிறது. இறைத்தூதர் இமாம் அலீயை நியமனம் செய்தார்; இமாம் அலீ ஹஸனை, ஹஸன் ஹுஸைனை என்று இது தொடர்கிறது.

தலைவரை வரையறுப்பதில் நமக்கு துணைபுரியும் குர் ஆனிய சொற்களை நாம் முன்னர் பார்த்தோம். இப்போது ஷியாக்களின் தலைவருக்கான விளக்கத்தைப் பார்க்கும்போது, ஆலோசனை (ஷூறா) விடுபட்டிருப்பது தெளிவாகிறது. இதற்கான விளக்கத்தை ஷியாக்களாகிய அவர்கள்தான் தரவேண்டும்.

எனினும், பிற்காலத்தில் முஹம்மது அல் பாக்கிருக்குப் பிறகு யார் இமாம் என்பதில் ஷியாக்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடு தோன்றியது. இங்கு ஷியா என்பது பொதுவான ஷியாக்களைக் குறிக்கும். ஏனெனில் ஷியா என்று சொன்னாலே மக்களின் பொதுப்புத்தியில் ‘இஸ்னா அஷரி’தான் (பன்னிருவர்) முக்கியமாகத் தோன்றும். எனினும் தஷய்யு என்பது அதைவிடப் பரந்த பொருள் கொண்டது. மற்ற எல்லா ஷியா பிரிவுகளைச் சார்ந்த மக்களைவிட ‘பன்னிருவர்’ ஷியா பிரிவைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கையில் மிக மிக அதிகமாக இருந்தபோதிலும், நாம் இங்கு எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நாம் கருத்துகளை, கோட்பாடுகளையே முக்கியமாகப் பார்க்கிறோம்.

இமாம் ஹுஸைனின் பேரர்களான முஹம்மது அல் பாக்கிர் இப்னு அலீ (ஸைனுல் ஆபிதீன்) மற்றும் ஸைத் ஆகியோரிலிருந்து வேற்றுமைகளும் —சிலவேளை— கசப்பான உறவுகளும் தோன்றுகின்றன. யார் இமாம் என்பது பற்றி தோன்றிய முதல் தீவிர கருத்து வேறுபாடு இதுவே ஆகும். பின்னர் —இஸ்னா அஷரி கணக்குப்படி— ஏழாவது இமாமுக்குப் பிறகு மீண்டும் யார் இமாம் என்பதில் கருத்துவேறுபாடு தோன்றியது.

இஸ்னா அஷரிகள் ஒருவரை இமாம் என்றனர். மற்றொரு பிரிவினர் —இஸ்மாயிலி ஷியாக்கள்— “இல்லை. அவரது சகோதரரான இஸ்மாயில் தான் இமாம்” என்றனர். பின்னர் மீண்டும் இஸ்மாயிலிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி, அவர்களிலிருந்து ஆகாகான் பிரிவினர் தோன்றினர். அவர்களின் தலைவர் ஷியா பிரிவில் வந்த 49ஆவது தலைவர் ஆவார். இப்போது ஆகாகானிகள், தம் அடையாளத்தை வரையறுப்பதில் உள் நெருக்கடியில் உள்ளனர். இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

இவ்வாறாக ஆரம்ப நாட்களில், ஷியாக்களையும் ஷியா அல்லாத பிற முஸ்லிம்களையும் பிரித்துக் காட்டும் முக்கியக் கொள்கையாக இமாமத் அல்லது முஸ்லிம்களின் தலைவர் குறித்த கொள்கை இருந்தது. ஷியாக்களைப் பொறுத்தவரை தலைவர் என்பவர் அவருக்கு முன்னிருந்தவரின் சாசனம் அல்லது மரபாகத் தொடர்ந்து வருகிறார். அவர் தன் கடமைகளை ஆற்றுவதற்கு முஸ்லிம் பொது மக்களின் அங்கீகாரத்தையோ ஒப்புதலையோ பெற வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், ஷியாக்களின் (மரபுகளுக்கு முந்திய) விளக்கப்படி, இமாமத் என்பது ‘ருக்ன்’ ஆகும். ‘ருக்ன்’ என்றால் அடிப்படை என்று பொருள்; அதாவது மார்க்கத்தின் அடிப்படை. இதன்படி, இமாமத் என்பது இலேசாகக் கருதப்படும் கருதுகோள் அல்ல. அது மார்க்கத்தின் அடிப்படையில், இஸ்லாத்தின் அஸ்திவாரத்தில் பின்னிப் பிணைந்தது. எனவே இறுதித்தூதரோ அல்லது மற்ற இறைத்தூதர்களோ இதை அலட்சியப்படுத்தியிருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் இமாமத் பற்றிப் பேசுவது, மக்களுக்கு நேர்வழி காட்ட வந்த இறைத்தூதர்களின் கட்டாயக் கடமை என்பது அவர்களின் கோட்பாடு. இதன் காரணமாக, இமாம் ‘மஃஸும்’ ஆக இருப்பார். அதாவது அவர் —இஸ்லாமிய சொற்பிரயோகத்தில்— பெரும் பாவங்கள் (அல் கபாயிர்) மற்றும் சிறு பாவங்களின் (அல் சகாயிர்) சுமையை சுமக்காதவராக இருப்பார்.

ஷியாக்களின் விளக்கப்படி முதல் இமாம், இமாம் அலீ ஆவார். இமாம் அலீயின் தலைமையை உறுதியாக ஏற்றுக்கொண்டவர்களுள் பிரபலமான நபித்தோழர்களும் உள்ளனர்; அறியப்படாத பல தோழர்களும் உள்ளனர். சிலரின் பெயர்களை நீங்கள் அதிகம் கேட்டிருக்கமாட்டீர்கள். எனவே சில பெயர்களை நான் இங்கே குறிப்பிடுகிறேன். அம்மார் இப்னு யாசிர், அல் மக்தாத் இப்னு அல் அஸ்வத், அபூதர் அல் கிஃபாரி, சல்மான் அல் ஃபாரிசி, ஜாபிர் இப்னு அப்தில்லாஹ், உபை இப்னு கஅஃப், ஹுதைஃபா, அபூ அய்யூப் அல் அன்சாரி, சஹல் இப்னு ஹனீஃப், அவரது சகோதரர் உஸ்மான் இப்னு ஹனீஃப், அபூ ஹைஃபான் இப்னு அத்தைஃபான், அபூ துஃபைல் இப்னு வைலா, அப்பாஸ் இப்னு அல் முத்தலிப் (இறைத்தூதரின் பெரிய தந்தை), அப்பாஸின் பிள்ளைகள் மற்றும் பனீ ஹாஷிமில் பெரும்பாலோர் இதில் அடங்குவர்.

குறைஷிக் குலத்தினுள்ளேயே இறைத்தூதர் சார்ந்திருந்த கோத்திரம்தான் பனீ ஹாஷிம். பிற்காலத்தில் இப்பட்டியலில் இப்னு ஜுபைர் கூட சேர்ந்தார் என்று சொல்லப்படுகிறது. உமைய்யா கோத்திரத்தில் பிரபலமாக அறியப்பட்ட சஈது இப்னு அல் ஆஸைக் கூட இப்பட்டியலில் காணமுடிகிறது.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி (பாகம் 3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *