இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on
imam-al-asi

இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி (பாகம் 2)

இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி (பாகம் 3)

இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி (பாகம் 4)

♦ ♦ ♦ ♦ ♦

இமாம் முஹம்மது அல் ஆஸியின் (மேலே படத்தில்) ஆங்கில உரையை மொழிபெயர்த்து, படிக்க எளிதாக இருப்பதற்காக நான்கு பாகங்களாகப் பிரித்துள்ளோம்.

உரையாற்றிய நாள்:  04-12-2007

YouTube link: Islamic History / Ahl Tashayyu School of Thought

இமாம் அல் ஆஸியின் ஆங்கில உரையை இங்கே கிளிக் செய்தும் கேட்கலாம்.

♦ ♦ ♦ ♦ ♦

பாகம் – 1

இறைத்தூதர் முஹம்மது நபியின் (ஸல்) மறைவுக்குப் பிறகு இஸ்லாமிய சமூகத்தில் பலவிதமான சிந்தனைப் பாங்குகள் உருவாயின. அவற்றை அரசியல் (political), கோட்பாடு (doctrinal) மற்றும் சட்டவியல் (jurisprudential) ரீதியான போக்குகள் என வகைப்படுத்தலாம். இவற்றை அரபியில் மதாஹிப் சியாசியா, மதாஹிப் இஃதிகாதிய்யா, மதாஹிப் ஃபிக்ஹிய்யா என்பர்.

தலைமை

இறைத்தூதரைத் தொடர்ந்து வந்த காலங்களில் சில பாரதூர அரசியல் விளைவுகள் ஏற்பட்டன. அவற்றை ஆராய்கையில் முஸ்லிம்கள் அனைவரும் தங்களுக்கு ஒரு தலைவர் அல்லது இமாம் தேவை என்பதில் ஒருமித்த கருத்தில் இருந்ததை அறிகிறோம். அறிஞர்களின் மொழியில் கூறுவதானால்,  ஒரு இமாம் கட்டாயம் தேவை (வுஜுப் அல் இமாமா) அது ஒரு கடமை (வாஜிப்) என்பதில் முஸ்லிம்கள் ஒத்த கருத்து கொண்டுள்ளனர். எனினும் அத்தலைவரின் பண்புகளை வரையறுப்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

மொத்த சமூகத்துக்கும் ஒரேயொரு இமாமா அல்லது இரண்டு இமாம்கள் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. தொலைவு என்ற அளவீட்டின் அடிப்படையில் இவ்வாதம் முன்வைக்கப்படுகிறது. அதாவது ஒரே பகுதியில் அல்லது ஒரே விதமான பௌதீகத் தன்மை கொண்ட நிலவரம்பில் இரு இமாம்கள் இருத்தல் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்றே தெரிகிறது. எனினும் மிகத்தொலைவான — 1000 அல்லது 2000 மைல்களுக்கு அப்பாலுள்ள —  ஒரு பகுதியின் நிலை என்ன? அங்கு மற்றொரு இமாம் இருக்கலாமா? இங்குதான் கருத்துவேறுபாடு எழுகிறது.

இமாமைக் கொண்டிருப்பதிலுள்ள வேறுசில கூறுகள் என்னவெனில் அவர் குறைஷிக் குலத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டுமா? மேலும், தவறு செய்யும் இயல்புடைய ஒருவர் முஸ்லிம்களின் தலைவராக முடியுமா? அல்லது அத்தலைவர் தவறுகள், பிழைகளுக்கு அப்பாற்பட்டவராக, தவறான மதிப்பீடுகளே செய்யாதவராக இருக்க வேண்டுமா? அதாவது ஒருவர் இமாமாகத் தகுதி பெறுவதற்கு ‘மஃஸும்’ ஆக இருக்க வேண்டுமா?

இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது தலைவருக்கான மேற்கூறப்பட்ட பண்புகள் குறித்து முஸ்லிம்களை ஒற்றைக் கருத்தில் இணைக்கும்படியான உறுதியான ஒரேயொரு திருக்குர்ஆன் வசனம் அல்லது ஹதீஸ் கூட இல்லை. முஸ்லிம்களின் தலைமை பற்றி நிலவும் கருத்துகள் அனைத்தும் ஓரளவு சரியானவையே. ஒரு இமாமுக்குரிய தகுதிகள் என இதுவரை நாம் கொண்டிருந்த கருத்துகள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் நியாயமானவையே. வருந்தத்தக்க விதத்தில் சமகாலம்வரை அத்தகைய நியாயங்களை வரலாற்றின் ஒளியில் நாம் பார்க்கத் தவறி விட்டோம்.

முஸ்லிம்களின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து திருக்குர்ஆனில் தேட முற்பட்டால் நமக்கு மூன்று சொற்கள் கிடைக்கின்றன. இவை தலைவருக்கான விளக்கத்தை வரையறுக்க உதவுகின்றன.

முதலாவது, நீதி (அத்ல் அல்லது அதாலத்). பரிசுத்தமும் உயர்வும் மிக்க அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்: ‘இதிலு ஹுவ அக்ரமு லித் தக்வா’ —‘நீதியைக் கொண்டு ஆட்சி புரியுங்கள். ஏனெனில் அது இறைபிரக்ஞையோடு இருப்பதற்கு இணையானது’.

இரண்டாவது, ஆலோசனை (ஷூறா). பொதுவாக, ஷூறா ‘ஆலோசனை’ என மொழிபெயர்க்கப்படுகிறது. எனினும் அசலில் ஷூறா என்பது, முடிவெடுக்கும் விஷயத்தில் தலைவரையும் தாண்டியுள்ள மக்களின் பங்களிப்பைக் குறிக்கும். அவர்கள், பொதுமக்களாக இருக்கலாம் அல்லது பொதுமக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலராக இருக்கலாம். அதாவது மனிதர்களிலிருந்து பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களையும் —இஸ்லாமிய சட்டவியல் கலைச்சொல்படி— ‘அஹ்ல் அல் ஹல் வல் அக்த்’ என அழைக்கப்படுபவர்களையும் உள்ளடக்கியது.

‘அஹ்ல் அல் ஹல் வல் அக்த்’ எனப்படுவோர், இஸ்லாமிய சமூகத்தில் சமூகப் பொறுப்புகள் கொண்ட மேயர் அல்லது அரசு ஊழியர் போன்றோரைக் குறிக்கும். இது பற்றி தெளிவுபடுத்தும் அல் குர்ஆனின் வசனம், ‘வ ஷாவிர்ஹும் ஃபில் அம்ர் —அவர்களை முடிவெடுக்கும் விஷயத்தில் பங்கு பெறச் செய்வீராக’.

மூன்றாவது சொல்லானது, கட்டுப்படுதல் (அத் தா’அ). இதைக் குறிப்பிடும் குர்ஆனிய வசனம்: ‘வ அதீவுல்லாஹ வ அதீவுர் ரசூல வ வுலில் அம்ரி மின்கும் —அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இன்னும் அவனுடைய தூதருக்கும் இன்னும் உங்களில் அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள்’.

 இம்மூன்று சொற்களும் ஏவல் பொருளில் இருப்பதைக் கவனிக்கவும். மேலும் நுணுக்கமாகப் பார்க்கையில், ‘இதிலு’ என்பது பொதுமக்களை சுட்டுகிறது. நீதி நிலைநாட்டப்படுவது பொதுமக்களின் மீது பொறுப்பாகும். எனினும் ‘ஷாவிர்ஹும்’ (ஆலோசித்தல்) என்பது தலைவருக்கு உரியது. ‘அதீவு’ (கட்டுப்படுதல்) மீண்டும் பொதுமக்களின்பால் திரும்புகிறது.

இங்கு மற்றொரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறேன். இச்சொற்களை தலைவருக்கான தகுதிகள் எனத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். தனிமனித விஷயங்கள், போர், இயற்கை நியதி என பல விஷயங்களைப் பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது. அந்த வரிசையில் அரசாங்கம், தலைவர் போன்ற விஷயங்களை விளக்குவதற்கு குர்ஆனின் உதவியை நாடினால் அதிலுள்ள இச்சொற்கள் நமக்கு உதவுகின்றன என்பதுதான் இதன் கருத்து. இது போல மேலும் பிற சொற்கள் இருந்தால் என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அவற்றை என் தொகுப்பில் சேர்த்துக் கொள்கிறேன்.

இறைத்தூதர் மறைந்த தினத்தன்று —அந்த நாள் ‘யவும் அத்தகீஃபா’ என்று அழைக்கப்படுகிறது— முஸ்லிம்களின் தலைமை பற்றி பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சிலர், முஸ்லிம்களின் தலைவர் ‘அன்சார்’களிலிருந்தே வரவேண்டும் எனக் கூறினர். ‘அன்சார்’ என்போர் இறைத்தூதருக்கு ஆதரவளித்த மதீனாவாசிகள். அவர்கள் இல்லையெனில் இஸ்லாமிய அதிகார மையம் உருவாகியே இருக்காது. எனவே அன்சாரிகளிலிருந்தே அடுத்த தலைவர் வரவேண்டும் என்றனர் ஒரு சாரார். இது ஓரவஞ்சனையுடன் கூடிய வாதம் அல்ல. இதில் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது.

மற்றொரு சாரார், முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பு (இமாமா அல்லது கிலாஃபா) ‘முஹாஜிரீன்’களிடமே இருக்க வேண்டும் என்றனர். ‘முஹாஜிரீன்’ என்போர் இவ்வுலகில் இஸ்லாமிய அமைப்பை உருவாக்குவதற்கு பெரும் துன்பங்களைச் சகித்துக் கொண்டோராவர். இவர்கள் அன்சார்களைவிட பல வருடங்களுக்கு முன்னரே தங்களை நிரூபித்துக் காட்டியவர்கள். எனவே இவ்வாதத்திலும் ஒரு அடிப்படை நியாயம் உள்ளது. மேலும் சிலர் முஸ்லிம்களின் தலைவர் குறிப்பாக குறைஷிக் குலத்திலிருந்தே வரவேண்டும் என்றனர். இவ்வாதத்தை முன்வைப்போர், “முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு குறிப்பாக குறைஷிகளுக்கே உரியது” எனக் கூறும் இறைத்தூதரின் ஹதீஸை மேற்கோள் காட்டுகின்றனர். எனினும் குறைஷ் என்பது ஒற்றைக் கருத்து கொண்டு ஒரே கோத்திரமாக இருக்கவில்லை.

குறைஷிகளில் இறைத்தூதரை ஆதரித்தோரும் இருந்தனர்; அவரை எதிர்த்தோரும் இருந்தனர். இன்னும் சொல்லப் போனால், இறைத்தூதருக்கு எதிராக எழுந்த மூர்க்கமான எதிர்ப்பு குறைஷிகளிடமிருந்துதான் வந்தது. எனவே குறைஷிகளிலிருந்தே தலைவர் வரவேண்டும் என்போரும் ஒரு நியாயத்துடனேயே தம் கருத்தை முன்வைக்கின்றனர். ஏனெனில் மக்கள் தங்கள் கோத்திரத்தைச் சார்ந்தவர்களையே எதிர்ப்பதென்பது சாதாரண விஷயம் அல்ல. இறைத்தூதரை ஆதரித்த குறைஷிகள், தங்கள் குடும்பம், உற்றார் உறவினர், கோத்திர அமைப்பு என எல்லாவற்றையும் எதிர்த்து நின்றனர்.

உஸ்மான் ஆட்சி காலம்

சில வருடங்கள் தாண்டி உஸ்மானின் காலத்தில் வாழ்ந்த முஹாஜிரீன் மற்றும் அன்சார்களை இப்போது பார்ப்போம். முஸ்லிம்கள் மிகக் கவனமாகப் பார்க்க வேண்டிய காலகட்டம் இது. அபூபக்கர் மற்றும் உமருடைய காலத்தில் முதல் தலைமுறை முஸ்லிம்களின் —இறைத்தூதரின் தோழர்கள் என கருதப்பட்டோர்— மீது சில கறாரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவர்களில் பெரும்பாலோர் அப்போது மதீனாவில் வசித்தனர். மதீனாவிலிருந்து வெளியேறுவதில் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதற்கு தகுந்த காரணமும் இருந்தது. வெறுமனே, ‘உங்களை இங்கேயே இருக்கச் செய்ய வேண்டும், வீட்டுக் காவலில் அடைத்து வைக்க வேண்டும், நீங்கள் எங்கும் செல்லக்கூடாது’ என்ற ரீதியில் அக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

நாம் பேசும் ஒவ்வொரு விஷயத்துக்கும் தகுந்த நியாயம் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அம்மக்கள் சில பிரத்தியேகமான சிறப்பு அம்சங்களை பெற்றிருந்தனர். அவர்கள் இறைத்தூதரோடு வாழ்ந்தவர்கள், இறைத்தூதரின் பொன்மொழிகளைக் கேட்டவர்கள், அவரோடு பத்ர், உஹத் போர்களில் பங்குபெற்றவர்கள், குர்ஆனையும் ஹதீஸையும் மனனம் செய்தவர்கள், பிற முஸ்லிம்களால் மிகுந்த மரியாதையோடு நடத்தப்படுபவர்கள். அவர்கள் மதீனாவிலுருந்து வெளியே சென்று தூரதேசங்களில் வசித்தால், அங்கு அவர்களைச் சுற்றி ஒரு அதிகார மையம் உருவாகும் அச்சம் இருந்தது. ஏனெனில் அவர்கள் ‘பிரபலங்கள்’. இன்றைய மொழியில் சொல்வதானால், அவர்கள் அதிகாரமிகுதியால் சீர்கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இதைத் தவிர்ப்பது எப்படி? இதற்காகத்தான் அவர்கள் மீது அத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் உஸ்மான் ஆட்சிக்கு வந்தபின்னர் அக்கட்டுப்பாடுகளை தளர்த்தினார். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று தங்கலாம் என்றார். இதைப் பயன்படுத்தி அவர்களும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தங்கினர். பொதுவாக இஸ்லாமிய ராணுவத்தில் பங்குபெறுவதை காரணம் காட்டி அவர்கள் பிற பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர்.

ஹிஜாஸின் மக்கா மற்றும் மதீனாவை விட அவர்கள் சென்ற ஈராக், ஷாம், மிஸ்ர் (எகிப்து) போன்ற பகுதிகள் வளர்ச்சியடைந்த பகுதிகளாக இருந்தன. அங்கு அவர்கள் முன்னேறிய வாழ்க்கையையும் நவீனத்தையும் கண்டனர். எனினும் அவர்கள் —பெரும்பாலோர்— மாசற்றவர்களாக இருந்த காரணத்தினால் அங்கு சென்றவுடன் அதிகார மையத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. அத்தகைய நோக்கமும் அவர்களுக்கு இருக்கவில்லை. எனினும் அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் செல்வம் சேர்க்க ஆரம்பித்தனர். பின்னர் இஸ்லாமிய அரசாங்கத்தில் அவர்களது தலையீடு ஏற்படும் நிலைக்கு அச்செல்வம் அவர்களை இட்டுச் சென்றது.

இந்த மாற்றம் பல பத்தாண்டுகள் அல்லது நூற்றாண்டு காலமாக நடந்ததன்று. இது அவர்களின் வாழ்நாளிலேயே நிகழ்ந்தது. இது குறித்த அபூதரின் வார்த்தைகள் கவனிக்கப்பட வேண்டியவை. இறைத்தூதரின் காலத்திலிருந்த தோழர்கள் இப்போது —உஸ்மானின் தாராளவாதக் கொள்கைகள் அமலுக்கு வந்த பின்— எவ்வாறு உருமாறினர் என்பதை அவர் இவ்வாறு கூறுகிறார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இங்கு நடந்த சம்பவங்களை என்னால் நம்ப முடியவில்லை. அவை இறை வேதத்திலும் இல்லை அவனது தூதரின் வழிகாட்டலிலும் இல்லை. சத்தியம் அழிந்து அசத்தியம் மீண்டும் தலைதூக்குவதை நான் பார்க்கிறேன். உண்மையாளர் ஒருவர் —அரசாங்கத்தின் கொள்கை காரணமாக— பொய்யரைப் போல் பார்க்கப்படுவதையும், இறைபிரக்ஞை இல்லாத சுயநலத்தையும்  காண்கிறேன். செல்வம் சுருட்டப்படுவதையும் பார்க்கிறேன்.” எனினும் அபூதர் அதிகமாக பேசப்படுபவர் அல்ல. இன்று பள்ளிவாசல்களில் உரையாற்றுபவர்கள் அபூதரைப் பற்றி பேசுவதே இல்லை.

உஸ்மான் ஆட்சி காலத்தில் மற்றொரு அரசியல் புதுமையும் அரங்கேறியது. இறைத்தூதர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த இரு தலைவர்களின் வழிமுறையில் முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பை வகிப்பதாக எடுத்த உறுதிமொழிக்கு மாறாக, உஸ்மான் தன் உற்றார் உறவினர்களுக்கு அரசாங்கப் பதவிகளை வாரி வழங்கினார். இது எந்த அளவுக்குச் சென்றது எனில் ச’அது இப்னு அபி சுஹ்ரா என்ற அவரது உறவினர் ஒருவருக்கு உயர் அரசாங்கப் பதவியை அவர் கொடுத்தார். இந்நபர் முஸ்லிமாக இருந்து நிராகரித்து மீண்டும் முஸ்லிமாக மாறியவர். இப்படிப்பட்ட ஒருவருக்கு எப்படி இஸ்லாமிய அரசாங்கத்தில் பதவி கொடுக்க முடியும்? இறைத்தூதரோ, அபூபக்கர் மற்றும் உமரோ இவ்வாறு செய்யவில்லை. எனினும் உஸ்மான் காலத்தில் இது நிகழ்ந்தது. இதுவும் —இன்றளவும் முஸ்லிம்களை பீடித்திருக்கும்— பிரிவினைக்கு வழிவகுத்த பிரச்சனைகளுள் ஒன்று. இஸ்லாமிய வரலாற்று நூல்களில் எங்கோ பொதிந்து கிடக்கும் அரிய செய்திகளை தேடி எடுத்து நான் உங்களுக்குச் சொல்லவில்லை. இவை எல்லாமே பிரபலமான இஸ்லாமிய நூல்களில் உள்ள செய்திகளே.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி (பாகம் 2)

1 thought on “இஸ்லாமிய வரலாறு – 01 / அஹ்லுத் தஷய்யு சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி”

  1. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே
    மிகவும் எளிமையான வார்த்தைகள்
    ஆழமான கருத்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *