இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 1)

♦ ♦ ♦ ♦ ♦

நிராகரிப்பும் கைதுறத்தலும்

கவாரிஜ்களுக்கு வேறுவிதத்தில் விளக்கமளிக்க முற்பட்டால், அவர்கள் இமாம் அலீ மீது நிராகரிப்பாளர் (குஃப்ர்) பட்டத்தை சூட்டியவர்கள் என்று கூறலாம். அவர்கள் அதோடு நிற்கவில்லை. அவரை ‘பரா’அ’ செய்தனர். ‘பரா’அ’ செய்வதென்பது ஒருவரை கைதுறப்பது ஆகும். அதாவது அவர்கள் இமாம் அலீயிடம் “உங்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, நீங்கள் எங்கள் தலைவரும் அல்ல; நாங்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்களும் அல்ல. உங்களிடமிருந்து நாங்கள் முழுமையாக விலகிக் கொண்டோம்” என்றனர். மேலும் உஸ்மான், தல்ஹா, ஸுபைர் மற்றும் பிற எல்லா உமைய்யா ஆட்சியாளர்கள் குறித்தும் இவ்வாறே கூறினர். ஏனெனில் உமைய்யாக்கள் காலத்தில்தான் இவர்கள் வீரியத்தோடு செயல்பட்டனர். அதன் பிறகு வந்த அப்பாஸிகள் காலத்தில் கவாரிஜ்களின் வீரியம் குறைந்து விட்டது. அவர்களின் கண்ணோட்டத்தில் அவர்களுடையது மிக நீண்ட நெடிய போராட்டமாக  இருந்தது. அதில் பலர் கொல்லப்பட்டனர். அவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. உமைய்யாக்களின் ஆட்சி முடிவுக்கு வரும் தருவாயில், கவாரிஜ்களின் வீரியம் மிக்க —சிலரின் கூற்றுப்படி வன்முறை நிரம்பிய— எதிர்ப்பும் வலுவிழந்திருந்தது.

அதேவேளை, அவர்கள் புரட்சியாளர்களாக —இவ்வாறு அழைக்கப்படுவதை அவர்கள் விரும்புவார்கள் என நினைக்கிறேன்— இருந்த போதிலும் ஆட்சியாளர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். உமைய்யாக்களிலேயே மிகச் சிறந்தவரும் நீதியான ஆட்சியாளருமான உமர் இப்னு அப்துல் அஸீஸிடம் ஒருமுறை கவாரிஜ்கள் வந்து, “நாங்கள் உங்களிடம் சில விஷயங்களைக் குறித்து பேச வேண்டும்” என்றனர். அவரும், “சரி. இதன் மூலம் நாம் ஒரு சமாதானத்திற்கு வரலாம்” என்றார். பேச்சுவார்த்தையின் போது கவாரிஜ்கள், “நீங்கள் உங்களுக்கு முன் ஆட்சிபுரிந்த எல்லா உமைய்யா ஆட்சியாளர்களையும் கைதுறக்க வேண்டும். அவர்களிடமிருந்து முற்றிலும் விலகி உங்களுக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அறிவிக்க வேண்டும்” என்றனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், “அவர்கள் செய்த பல செயல்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இயற்றிய பல சட்டதிட்டங்களை நான் ஏற்கனவே ரத்து செய்துள்ளேன். நீதி குறித்தும் நான் அக்கறையோடு இருக்கிறேன். எனினும், கைதுறப்பது போன்ற விஷயங்களில் நான் பங்கெடுக்க விரும்பவில்லை” என்றார். அதற்கு கவாரிஜ்கள், “அப்படியெனில் நீங்களும் அவர்களைப் போன்றவரே. கிட்டத்தட்ட நீங்களும் மற்றொரு நிராகரிப்பவர் (காஃபிர்)” என்றனர்.

கவாரிஜ்களுக்கு முன் முஸ்லிம்களைப் பார்த்து பிற முஸ்லிம்கள் ‘நீங்கள் நிராகரிப்பவர்கள்’ என பரவலாகக் குற்றம் சுமத்தியது இல்லை. எனினும் வரலாற்று நூல்களில் காணப்படும் ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. உஸ்மானுக்கு எதிரான கலகம் உச்சத்தை அடைந்த போது அவரது எதிர்ப்பளர்கள் மத்தியில் ஒரு வாசகம் பரவலானது: ‘உக்துலூ ந’ஃபலன் ஃபகத் கஃபர் (ந’ஃபலைக் கொன்றுவிடுங்கள் ஏனெனில் அவர் நிராகரிப்பாளர் (காஃபிர்) ஆகி விட்டார்’). ‘ந’ஃபல்’ என்பது புத்தி சீர்கெட்டு எல்லா நிகழ்வுகளிலிருந்தும் தொடர்பறுந்து இருக்கும் ஒருவரைக் குறிக்க பயன்படும் சொல். எனினும் இவ்வாசகம் உஸ்மானுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த மக்களுள் ஒரு சிலருக்கு மத்தியில் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. அது —கவாரிஜ்களைப் போல— ஒரு கொள்கையாகவோ அல்லது சிந்தனைப் பள்ளியாகவோ வளரவில்லை.

அடுத்து, அபூ பக்கர் காலத்தில் நிகழ்ந்த ‘ஹுரூப் அர் ரித்தா’ போர் பற்றியும் தெளிவுபடுத்துவது அவசியம் எனக் கருதுகிறேன். இதன் பொருள் ‘இஸ்லாத்தைத் துறக்க முயற்சிப்பவர்களுக்கு எதிரான போர்’ ஆகும். இதை நிராகரிப்பாளர்களாக மாறிவிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான போர் என்ற ரீதியில்தான் பலரும் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் அம்மக்கள் கூறியது இதுதான்: “நாங்கள் எல்லா விஷயங்களிலும் முஸ்லிம்கள்தான். எனினும் இஸ்லாமிய அரசுக்கு பொருளாதார பங்களிப்பை மட்டும் செலுத்த மாட்டோம்”. இவர்கள் விஷயத்தில் ‘சமயத் துறப்பு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனினும் இச்சொல் இஸ்லாத்தின் சமூக, சிவில், அரசியல், கொள்கைசார் அர்த்தங்களை உள்ளடக்கியதாக இல்லை. இது வெறும் மதரீதியான, நம்பிக்கை சார்ந்த அர்த்தத்தை மட்டுமே பிரதிபலிக்கிறது. ஆனால் அம்மக்கள் இஸ்லாத்தின் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் எதையும் துறக்கவில்லை. மாறாக அவர்கள் அவற்றை உறுதிப்படுத்தினர். அவர்கள் “நாங்கள் நோன்பு நோற்போம், ஹஜ் செய்வோம், பிற எல்லா கடமைகளையும் செய்வோம். ஆனால் இஸ்லாமிய அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய செல்வத்தை மட்டும் வழங்க மாட்டோம்” என்றனர். இதற்கெதிராகத்தான் அவர்களை எதிர்த்து போர் தொடுக்கப்பட்டது. ஏனெனில் பொருளாதாரக் கொள்கையும் இஸ்லாத்தின் முக்கிய அங்கம் ஆகும். அம்மக்களை கட்டுப்படுத்தாவிட்டால், மிக விரைவில் இஸ்லாத்தை ஒவ்வொன்றாக நிர்மூலமாக்கி விடக் கூடும். எனினும், ‘இவர்கள் நிராகரிப்பவர்கள் (காஃபிர்). வாருங்கள்! இவர்களைக் கொன்றுவிடுவோம்’ என்று யாருமே அழைப்பு விடுக்கவில்லை. அபூ பக்கர் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் இப்படித்தான் இதை புரிந்து வைத்திருந்தனர்.

அதீதம்

பிரெஞ்சுப் புரட்சி பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் மூன்று குறிச்சொற்கள் பயன்படுத்தப்பட்டன: சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவம். அதேபோல கவாரிஜ்களும் மூன்று குறிச்சொற்களை பயன்படுத்தினர். அவை ஈமான்(நம்பிக்கை), நான் முன்னர் குறிப்பிட்ட சொற்றொடரான ‘லா ஹுக்ம இல்லா லில்லாஹ் (அல்லாஹ்வுடையதன்றி வேறு எந்த ஆட்சியும் இல்லை)’. மற்றும் ‘அத் தபர்ரு மினல் லாலிமீன்’ (எல்லா நீதியற்ற ஆட்சியாளர்களையும் ஒடுக்குமுறையாளர்களையும் கைதுறப்பது)’. இதை ஒரு இணைச் செய்தியாகவே இங்கே குறிப்பிடுகிறேன்.

பிரெஞ்சுப் புரட்சியின் போது ஆத்திரக்காரர்களான ஜாகோபின்கள் அக்குறிச்சொற்களை முன்னெடுத்துச் சென்றனர். அச்சொற்களை தீவிரப் பொருளில் புரிந்து கொண்டு தங்களோடு கருத்து வேறுபட்ட அனைவரையும் சரமாரியாக கொன்று குவித்தனர். கவாரிஜ்களும் கிட்டத்தட்ட இதையேதான் செய்தனர். தம் குறிச்சொற்களை அவற்றின் நேர்ப்பொருளில் புரிந்து கொண்டு, தம்மோடு கருத்து வேறுபட்டவர்களை தாக்கி அவர்களின் ரத்தத்தைச் சிந்தினர். அச்சொற்களின் ஆழ்ந்த அர்த்தங்களை அவர்கள் புரிந்து கொண்டவர்களாக இருக்கவில்லை; அவற்றை மேம்போக்காகவே பார்த்தனர். கருத்து வேறுபாடு கொண்டவர்களைக் கொல்வது அவர்களுக்கு மிகச் சாதாரணமாக இருந்தது. அதில் அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை; கொஞ்சமும் சிந்திக்காமல் மனசாட்சியின்றி எளிதாக இக்கொலைகளை கடந்து செல்பவர்களாக இருந்தனர்.

நம்மால் இயன்றவரை விருப்பு வெறுப்பின்றி இவர்களைப் பற்றி வாசித்து புரிய முயற்சித்தால், இவர்கள் தியாகம் செய்வதில் மனக்கிளர்ச்சி அடையும் ஒருவகையான மக்கள் என அறிய முடிகிறது. சாதாரண மனிதர் ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றி, “நான் இது பற்றி யோசித்து சொல்கிறேன்” என்று கூறினால், இவர்களைப் பொருத்தவரை ‘யோசிப்பது’ என்பதே கிடையாது; ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்றிருந்தால் அதைச் செய்துதான் ஆக வேண்டும்; அவர்கள் அதைச் செய்தே தீருவார்கள்; அதைச் செய்வதற்கு தியாகம் தேவைப்பட்டால், ‘இருந்துவிட்டுப் போகட்டும்’ என்பதே அவர்களின் இயல்பாக இருந்தது. அவர்கள், மரணத்தின்பால் கிட்டத்தட்ட மனவயப்பட்டவர்களாக இருந்தனர்; மரணிக்க விரும்பினர். சவால்களையும் அபாயங்களையும் சந்திக்க நேர்ந்தால் விருப்பத்தோடு அவற்றை சந்திப்பவர்களாக இருந்தனர். ஏதாவது ஒரு விஷயம் குறித்து ‘இது சவால் மிக்கது; அபாயம் நிறைந்தது’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அது அவர்களை அதைவிட்டும் விலக்குவதை விடுத்து அதன்பால் அவர்களை ஈர்த்தது; அதைச் செய்ய அவர்களை தூண்டியது.

இன்று, அபாயமான மலைக்குன்றுகளில் ஏறுவதையும் ஆபத்தான சறுக்குகளில் சறுக்குவதையும் மரணத்தையும் பொருட்படுத்தாமல், அதனால் ஏற்படும் சிலிர்ப்புக்காக விரும்பும் சில மக்களைப் போலத்தான் அவர்களும் இருந்தனர். ஒரு ஆளுநரைக் கொல்லும் சவாலை எடுத்துக் கொண்டால், அவரைச் சுற்றி பாதுகாவலர்கள் அதிகம் இருப்பதால் அது ஆபத்தானது என்று ஒருவர் நினைத்தால், அவர்களைப் பொருத்தவரை அந்த ஆபத்துதான் அவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இதுவிஷயத்தில் அவர்கள் கிட்டத்தட்ட மனநோய் பீடித்தவர்கள் போலவே இருந்தனர்.

இன்றைய உலகின் சில நிகழ்வுகளை இந்தச் சம்பவங்கள் உங்களுக்கு நினைவூட்டக்கூடும். இத்தகைய செயல்களையும் பாத்திரங்களையும் இன்றும் நீங்கள் காணலாம். அல் அந்தலூஸில் வாழ்ந்த சில கிறிஸ்தவர்களையும் இது நினைவூட்டுகிறது. முஸ்லிம்கள் ஐபீரியாவில் (இன்றைய ஸ்பெய்ன் மற்றும் போர்ச்சுகல்) ஆட்சிபுரிந்த போது, சில கிறிஸ்தவர்கள் தங்கள் மத விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் உயிரைக் கொடுத்தாவது நிரூபிக்க வேண்டும் என்று உந்தப்பட்டனர். அதற்காக அவர்கள் இறைத்தூதரை (ஸல்) வசைபாடத் துவங்கினர். அன்று அங்கு வாழ்ந்த கிறித்தவர்கள் மத்தியில் அது ஒரு சமூகப் போக்காகவே மாறியது. இறைத்தூதரை இழிவு படுத்துவது, அவரை சபிப்பது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத புதுப்புது அவச்சொற்களால் அவரை தூற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இக்குற்றத்திற்கு மரணதண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே அவர்கள் இதைச் செய்தனர். இறைத்தூதரை சபிக்கும் குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் அன்று இருந்த போதும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே படவில்லை.

“நாங்கள் எங்கள் நம்பிக்கையை நிரூபிக்க வேண்டும். அதற்காக இறைத்தூதரை இழிவு படுத்துவோம். தண்டனை பற்றியெல்லாம் நாங்கள் கவலைப் படவில்லை”, என்றனர். அவ்வாறு சிலர் தண்டிக்கவும் பட்டனர். இதன் தீவிரத்தை சில வரலாற்று நூல்கள் இவ்வாறு விவரிக்கின்றன: அந்த மக்கள் நீதிபதியின் முன்னால் நிறுத்தப்படும் போது, குற்றத்தை உறுதி செய்து மரணதண்டனை விதிப்பதற்காக அவர்களின் சபித்தலையும் இழிசொற்களையும் அவர் கேட்டாக வேண்டும். அவர்களின் வசைச்சொற்கள் உளறல்கள் என்று கருதப்படும் அளவிற்கு இருந்தன. அவர்களை பைத்தியக்காரர்கள் என்று தவறாக கருதிவிடுவோமோ என்று அஞ்சி அந்த நீதிபதி தன் விரல்களால் காதுகளை பொத்திக் கொள்வார். ஏனெனில் பைத்தியக்காரர்களுக்கு மரணதண்டனை அளிக்க முடியாதல்லவா?

இப்போது இவர்களுக்கும் கவாரிஜ்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையைப் பார்த்தால், அவர்களும் இத்தகைய சில பண்புகளை வெளிப்படுத்தியதை நாம் பார்க்கலாம். கவாரிஜ்களும் மரணத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் கொள்கை விசுவாசத்தை நிரூபிக்க விரும்பினர். அவர்களிடமிருந்த மற்றொரு பண்பு, முஸ்லிம் சமூகத்தின் பொதுக்கருத்தை வெல்ல நினைத்தது. அன்று —குறிப்பாக அப்பகுதியில்— வாழ்ந்த முஸ்லிம்களின் பொதுக்கருத்து இமாம் அலீ மீது அனுதாபம் கொண்டதாக இருந்தது. இதை எதிர்க்கும் நோக்கத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இமாம் அலீயை அவர்கள் சபிக்கத் துவங்கினர். இதன்மூலம் முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் இமாம் அலீக்கு இருக்கும் ஆதரவை தகர்க்க நாடினர். இதை அவர்கள் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினர். அவர்கள் ஈராக்கிற்கு வெளியே பிற பகுதிகளுக்குச் செல்லும் போது, அப்பகுதி மக்கள் உஸ்மானுக்கு பரிவிரக்கம் காட்டுவதைக் கண்டால் அவரையும் சபிப்பர். இன்னும் ஒரு படி மேலே சென்று யாரெல்லாம் இமாம் அலீ மற்றும் உஸ்மானை நல்லவர்கள் என்று நம்புகிறார்களோ, அவர்கள் அனைவரும் நிராகரிப்பவர்கள் (முஷ்ரிக்) என்றனர். தம் கருத்தோடு ஒத்துப் போகாத மக்கள் மீது நிராகரிப்பு (குஃப்ர்) அல்லது இணை வைப்பு (ஷிர்க்) என்னும் வார்த்தைகளை தகுந்த காரணமின்றி திட்டமிட்டு பிரயோகிக்கும் போக்கை நாம் மீண்டும் காண்கிறோம்.

இவர்களின் தன்மையை விளக்குவதற்கு, அன்று நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்க விரும்புகிறேன். ஒருமுறை கவாரிஜ்கள் அப்துல்லாஹ் இப்னு கப்பாப் இப்னு அல் அரத் என்பவரை எதிர்கொள்ள நேர்ந்தது. இவர் இறைத்தூதருக்கு நெருக்கமான முக்கியமான தோழர் ஒருவரின் மகனாவார். அவருடன் கருவுற்றிருந்த அவரது மனைவியும் இருந்தார். கவாரிஜ்கள் அவரை விசாரிக்கத் தொடங்கினர். அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர். முதலில் “அபூ பக்கரை பற்றி நீர் என்ன நினைக்கின்றீர்?” எனக் கேட்டனர். அதற்கு அவர் தன் மனசாட்சிப்படி “அவர் மீது குறையெதுவும் இல்லை” என பதிலளித்தார். பின்னர் “உமர் பற்றி நீர் என்ன நினைக்கின்றீர்?” எனக் கேட்டனர். அதற்கும் அவர் உமரைப் பற்றி நல்லதையே கூறினார். பின்னர் அவர்கள் “உஸ்மானின் முதல் ஆறு வருட ஆட்சியில் அவர் குறித்து உம் கருத்து என்ன?” எனக் கேட்டனர். அதற்கும் அவர் “எல்லாம் நல்லதுதான்” எனப் பதிலளித்தார். பின்னர், “உஸ்மானின் இறுதி ஆறு வருடங்களில் அவர் பற்றி உம் கருத்து என்ன?” என்றனர். அதற்கும் அவர், “அதுவும் நல்லதுதான்” என்றார். அவர்களுக்கிடையே நடந்த உரையாடலின் சாரத்தை மட்டுமே நான் கூறுகிறேன். பின்னர் அவர்கள், “சரி. மத்தியஸ்தத்திற்கு முன் இமாம் அலீ பற்றி உம் கருத்து என்ன?” எனக் கேட்டனர். அதற்கும் அவர் நற்கருத்தையே பதிலாக அளித்தார். பின்னர் அவர்கள் மீண்டும், “மத்தியஸ்தம் முடிந்த பிறகு இமாம் அலீ பற்றி நீர் என்ன நினைக்கின்றீர்?” எனக் கேட்டனர். அதற்கவர் “அவர் மீது நான் குறை எதுவும் காணவில்லை” என பதிலளித்தார். பின்னர் கவாரிஜ்கள், “அப்படியா?! இதுதான் உம் கருத்தா?”, எனக் கேட்டு அவரை அருகிலிருந்த ஆற்றங்கரையோரம் இழுத்துச் சென்று படுகொலை செய்தனர். அவர்கள் அவரது மனைவியையும் விட்டுவைக்கவில்லை. அவரையும் கொன்று, வயிற்றைக் கிழித்து உயிரற்ற கருவை வெளியே எடுத்தனர். ஆரோக்கியமாக சிந்திக்கும் எவரும் ‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமோடு இப்படியா நடந்து கொள்வார்? இது வரம்பு மீறிய செயல்’ என்றே எண்ணுவார்.

பின்னர் சிறிது தூரம் நகர்ந்து வந்த அவர்கள் கிறிஸ்தவர் ஒருவரை சந்தித்தனர். நடந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டிருந்த அவர் அதிர்ந்து போயிருந்தார். “உங்களுக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள், “நீர் பயந்துவிட்டீரா?” எனக் கேட்டனர். அவர், “நிச்சயமாக. சரி, உங்களுக்கு என்ன வேண்டும்” என மீண்டும் கேட்டார். அவர்கள் “உம் மரத்திலிருந்து சில பேரீத்தம் பழங்கள் வேண்டும்”, என்றனர். பயத்தில் உறைந்து போயிருந்த அவர், “இதோ முழு மரத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார். அதற்கு அவர்கள் “இல்லை. முழு மரத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால்? என்ன சொல்ல வருகிறீர்?” என்றனர். பின்னர் “நீர் யார்?” எனக் கேட்டனர். அவர், “நான் ஒரு கிறிஸ்தவன்” எனப் பதிலளித்தார். அதற்கு அவர்கள், “நல்லது. நீர் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் பாதுகாப்பில் (அஹ்ல் அத் திம்மா) உள்ளவர். “உம்முடைய மரத்திலிருந்து பழுத்த பழங்களை மட்டும் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். அதற்கான விலை என்ன என்று சொல்லும். அதைக் கொடுத்து விடுகிறோம்” என்றனர். இதற்கு மேல் அவர் அவர்களிடம் விவாதித்திருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். ‘என்ன விந்தையான மனிதர்கள் இவர்கள். இப்போதுதான் ஒரு அப்பாவி முஸ்லிமையும் அவரது மனைவியையும் கொன்று போட்டனர். எனக்கோ இவ்வளவு மரியாதையா’ என அவர் நினைத்திருப்பார். நேரெதிராக மாறியிருக்கும் இன்றைய சூழலில், சில முஸ்லிம்கள் பிற முஸ்லிம்களை நடத்தும் விதமும் ‘பாதுகாப்பில் உள்ளவர்களை’ அவர்கள் கருதும் விதமும் நம் நினைவுக்கு வருகிறது. இவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் ஸியோனிசவாதிகளுக்கும் ‘பாதுகாப்பில் உள்ளவர்’ என்ற அந்தஸ்த்தை அளிக்கின்றனர். ஆனால் நிலத்தில் உழும் பாமர கிறிஸ்தவரைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்வதில்லை.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *