இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 2)

இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 3)

இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 4)

இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 5)

♦ ♦ ♦ ♦ ♦

இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். படிக்க எளிதாக இருக்கும் பொருட்டு ஐந்து பாகங்களாகப் பிரித்துள்ளோம்  – மொழி பெயர்ப்பாளர்.

உரையாற்றிய நாள்: 08-01-2008

YouTube link: Islamic History / Al Khawarij School of Thought

இமாம் அல் ஆஸியின் ஆங்கில உரையை இங்கே கிளிக் செய்தும் கேட்கலாம்.

♦ ♦ ♦ ♦ ♦

(பாகம் 1)

முன்னுரை

முந்திய அத்தியாயத்தில் அல் தஷய்யு எனப்படும் ஷியா சிந்தனைப்பள்ளி துவங்கிய காலகட்டத்தை நம்மால் இயன்றவரை அறிந்து கொள்ள முயற்சி செய்தோம். இந்த அத்தியாயத்தை துவங்குவதற்கு முன் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் பல்வேறு நம்பிக்கைகளை மனதில் ஏற்றிக் கொண்டு அவற்றை கேள்விக்கு உள்ளாக்காமலேயே வளர்ந்து வந்துள்ளோம். ஆனால் இங்கு என்னுடைய உரைகளை கேட்க வருமுன், நீங்கள் உங்களை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் கேள்விப்படாத பல விஷயங்களை கேட்பதற்குத் தயாராக வர வேண்டும். இதற்கு பழகிக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இது நம் அனைவரின் பணியையும் எளிதாக்க உதவும்.

இந்த அத்தியாயத்தில் வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் சட்டவியலாளர்களால் அல் கவாரிஜ் என்று அழைக்கப்படும் இயக்கம் முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய வரலாறை பார்க்க இருக்கிறோம். நம் தொடர் உரையின் இப்பகுதி ஒருவிதத்தில் எளிதானது. ஏனெனில் தங்களை காரிஜீகள் என்று கூறிக்கொள்ளும் மக்கள் யாரும் நம்மிடையே இல்லை.

தன்னை ஒரு ‘ஷியா’ அல்லது ‘சன்னி’ என்று கூறிக்கொண்டு காலங்காலமாக அச்சொற்கள் ஏற்றுள்ள பல்வேறு அர்த்தங்களையும், இன்றுவரை அவை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் அர்த்தங்களையும் ஏற்று நிற்கும் ஒருவரைப் போலன்றி, யாரும் சாராத ஒரு இயக்கத்தைப் பற்றி பேசுவது எளிதானது. முஸ்லிம்களாகிய நம் பொது வரலாற்றின் ஒரு அங்கமாக தோன்றிய இவர்கள் ‘ஷியா’வும் அல்ல ‘சன்னி’யும் அல்ல. எனவே முந்திய அத்தியாயத்தைவிடவும் பின்வரும் அத்தியாயங்களை விடவும் இது எளிதானது என்று கருதுகிறேன்.

தோற்றம்

கவாரிஜ் என்றால் ‘எதிர்ப்பவர்’ என்று பொருள். இதற்கு ‘கிளர்ச்சியாளர்’ அல்லது ‘போராளி’ என்றும் பொருள் கொள்ளலாம். எனவே இம்மூன்று சொற்களையும் ஒன்றிணைத்து வரும் அர்த்தத்தை கவாரிஜ் எனும் சொல்லின் பொருளாகக் கொள்ளலாம். இவர்கள் எப்படி தோன்றினார்கள்? இவ்வகை முஸ்லிம்களை நமக்கு அளித்த வரலாற்று நிகழ்வுகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம். அந்நிகழ்வுகளின் நுணுக்கமான விவரங்களை நாம் காண வேண்டியுள்ளது.

முஸ்லிம்களில் இரு பிரிவினர் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரில் ஈடுபட்ட சிஃப்பீன் போரை நினைவில் வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். இஸ்லாமிய வரலாற்று நூல்களைப் படித்தால் அவை கூறுவது இதுதான்: ‘அப்போரில் ஈடுபட்ட ஒரு அணி இமாம் அலீயுடையது; மற்றொன்று முஆவியாவுடையது’. இது ஓரளவிற்கு உண்மையென்றாலும் சிறிது சிந்தித்தால் இதை இரு ஆளுமைகளுக்கிடையிலான போர் என்ற வகையில் சுருக்கிவிட முடியாது என்பது தெளிவாகும். அதையும் தாண்டி இது சமூகத்தின் இரு அரசியல், பொருளாதார போக்குகளுக்கிடையேயான மோதலாக இருந்தது.

சமூகத்தில் பலவகை மக்கள் உள்ளனர். சிலர் தங்களை தேசியவாதிகள் என்றும், உயர் அந்தஸ்து உடையவர்கள் என்றும் அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்றும் கருதுவர்; மேலும் சிலர் தங்களை இவற்றுக்கு அப்பாற்பட்டவராக கருதுவர். இத்தகைய இரு அணியினர்தான் சிஃப்பீனில் போரில் ஈடுபட்டனர். ஒரு அணிக்கு முஆவியா தலைமை தாங்கினார்; மற்றொன்றிற்கு இமாம் அலீ தலைமை தாங்கினார். எனினும், இவ்வரலாறை மீளாய்வு செய்வதில் நாம் செய்யும் தவறு என்னவெனில், இதை இரு ஆளுமைகளுக்கிடையிலான மோதல் என்ற வகையில் சுருக்கிவிடுகிறோம். இது உண்மைதான் என்றாலும் அதையும் தாண்டி, அது இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல் என்றோ, இரு பொருளாதாரக் கொள்கைகளுக்கு இடையேயான மோதல் என்றோ நம் பார்வையை விசாலமாக்கத் தவறிவிட்டோம். இது விஷயத்தில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

சிஃப்பீனில் இவ்விரு ஆளுமைகளும் தம் படையினரோடு சேர்ந்து போர் செய்து கொண்டிருந்தனர். போர்சூழல் முஆவியா அணிக்கு பாதகமாக திரும்பிக் கொண்டிருந்தது. அவர்கள் தோல்வியடையப் போவதை உணர்ந்தனர். அவர்களின் வீழ்ச்சி மிக அருகில் இருந்தது. அப்போது அவர்களின் இரண்டாம் நிலை தலைவரான அம்ர் இப்னு ஆஸ் எனும் நபரின் அறிவுறுத்தலின்படி ஒரு தந்திர உக்தியை கையாண்டனர். அவர்கள் இவ்வாறு கூறினர், “நாம் ‘மசாஹிஃப்’களை (காகிதத்தில் எழுதப்பட்ட திருக்குர்ஆனின் பிரதிகளை) உயர்த்திப்பிடித்துக் கொண்டு நம்மிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கு இதன் மூலம் மத்தியஸ்தம் செய்ய அழைப்பு விடுப்போம்”.

சிலர் இவ்வாறு கூறலாம், “பாருங்கள்! எப்படி இவர் அம்ர் இப்னு ஆஸை ‘நபர்’ எனக் குறிப்பிடுகிறார்!” என்று. எனினும் நிகழ்வுகளின் போக்கில், இச்சம்பவம் நிகழ்ந்த கணப்பொழுதில், இவரை இவ்வாறு குறிப்பிடுவதே பொருத்தமானது எனக் கருதுகிறேன். நாம் அவர் வாழ்வில் நிகழ்ந்த பிற நிகழ்வுகளையோ அல்லது அவரது முந்திய பிந்திய செயல்களையோ கருத்தில் கொள்ளவில்லை. இங்கு நாம் பல நுணுக்கமான விவரங்களைத் தவிர்த்துவிட்டு கவாரிஜ்கள் தோன்றிய நிகழ்வுகளை மட்டுமே கூறுகிறோம். இப்போது வரை கவாரிஜ்கள் என்ற ஒரு குழுவினர் உருவாகியிருக்கவில்லை. இந்தத் தந்திர உக்தியை அவர்கள் பிரயோகித்தபின் நிகழ்ந்த சம்பவங்கள் நம் கவனத்தைக் கோருகின்றன. இங்கிருந்துதான் இமாம் அலீயின் படையில் மிகப் பெரிய பிளவு ஏற்படவிருந்தது.

இமாம் அலீ போர் அடிப்படையிலேயே இப்பிரச்சனைக்கு முடிவு கட்ட விரும்பினார். எனினும் அவரது படையில் இருந்தவர்கள் வேறு விதமாக எண்ணினர். உயர்த்தப்பட்ட குர்ஆன் பிரதிகளை பார்த்தவுடன் அவர்கள் “நம் பிரச்சனைகளுக்கு குர்ஆனின் அடிப்படையிலேயே தீர்வு காண வேண்டும்; திருக்குர்ஆனுக்கு முக்கியத்துவம் அளித்து அதனைக் கொண்டு மத்தியஸ்தம் செய்வதுதான் பொருத்தமானது” என்றனர். இமாம் அலீயின் அணியில் இது பிளவை ஏற்படுத்தியது. போர்சூழலில் இப்பிளவின் தன்மையை உணர இமாம் அலீக்கு அதிக அவகாசம் இருக்கவில்லை. எனினும் அவரது படையிலிருந்த பெரும்பாலானவர்கள் மத்தியஸ்தத்திற்கு உடன்பட்டதை அவர் சரியாகவே புரிந்து கொண்டார். அதனால் வேறு வழியின்றி இமாம் அலீயும் அதற்கு இசைவு தெரிவித்தார்.

இங்கு நாம் ஒரு கணம் நின்று ஏன் இமாம் அலீ பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு இசைவு தெரிவித்தார் என்று சிந்திக்க வேண்டும். நான் வாசித்த எந்த வரலாற்றாசிரியரும் இக்கேள்விக்கு ஏற்புடையதான ஒரு பதிலை தரவில்லை. இமாம் அலீ எதிரிகளுக்கு முடிவுகட்ட விரும்பினார். ஆனால் அவரது படையிலிருந்த பெரும்பாலோர் அதை விரும்பவில்லை. இதை உணர்ந்த அவர், அவர்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டார். இது போர்சூழலில் அவர் மீது திணிக்கப்பட்ட கருத்து. இதுபற்றி அதிகம் சிந்திக்காத ஒருவர் இவ்வாறு கேட்கக் கூடும்: “பெரும்பான்மை மக்களின் கருத்து இமாமைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லையே?! அவர்களின் கருத்துக்கு ஏன் இமாம் இசைவு தெரிவிக்க வேண்டும்?!” என்று. இத்தகையவர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்: “பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு ஏன் இமாம் அலீ சம்மதம் தெரிவித்தார்?”

எனினும் வேறு சில மக்கள், “இல்லை, இது சரியல்ல. எதிரிகள் தோற்கடிக்கப்படும் வரை நாம் போரைத் தொடர வேண்டும்” என்றனர். ஆனால் இக்கருத்து பெரும்பான்மைக் கருத்தோடு ஒத்துப் போகவில்லை. இதை உணர்ந்த இமாமும் மத்தியஸ்தம் செய்யும் முடிவை ஏற்றுக் கொண்டார். நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் கிட்டத்தட்ட இது அவர் மீது திணிக்கப்பட்ட முடிவு; அவரது சிறந்த அறிவுக்கு ஏற்பற்ற ஒரு முடிவு; விருப்பமின்றி எடுக்க நிர்பந்திக்கப்பட்ட முடிவு. நடைபெற்றுக் கொண்டிருந்த போரின் திசைக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு. பிற்காலத்தில் கவாரிஜ்களாகத் தோன்றி இஸ்லாமிய வரலாற்றில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் இம்மக்கள் அதிக அளவில் இல்லையென்றாலும் அவர்களின் தோற்றத்தைத் துவக்கிய அரசியல் அல்லது கோட்பாட்டுக் கணம் இதுதான்.

வளர்ச்சி

இத்தகைய மக்கள் தங்கள் சிந்தனையை வளர்த்தெடுப்பதற்கு, பின்னர் நடந்த ஒரு சம்பவமும் காரணமாயிற்று. இப்போதுவரை இவர்கள் இமாம் அலீயின் அணியிலேயே உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவும். நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவங்களுக்கு அவர்கள் பராமுகமாக இல்லை. அதாவது, அவர்கள் இமாம் அலீயின் இராணுவ, அரசியல் முயற்சிகளில் ஒன்றியிருந்தனர். பின்னர், மத்தியஸ்தம் செய்வதற்கு முன்னிலை வகிப்பவரின் (முஹக்கிம்) தெரிவு பற்றிய கேள்வி எழுந்தது. மத்தியஸ்த (தஹ்கீம்) கொள்கைக்கு உடன்பட்டபின், இவ்வணியை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது, எதிர் அணியை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற கேள்வி எழுந்தது. இமாம் அலீயின் அணியைப் பொருத்தவரையில், அவர் தன் சார்பாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸை நியமிக்க விரும்பினார். ஆனால் அதிக எண்ணிக்கையில் இருந்த மற்றொரு கூட்டத்தினர், “இல்லை, நாங்கள் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டோம். நம் சார்பாக அபூ மூசா அல் அஷ்அரிதான் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும்” என்றனர். மீண்டும் இமாம் அலீ பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு சம்மதம் தெரிவிக்க நிர்பந்திக்கப்பட்டார்.

இங்குதான் இவ்வகை மக்களின் சிந்தனையில் எதிர்மறையான எண்ண ஓட்டங்கள் தோன்றின. நிகழ்வுகள் தவறான திசையில் செல்வதாக அவர்கள் கருதினர். உறுதியான கோட்பாடாக அல்லாமல், வெறும் கருத்துப் படிவங்களாக அப்போது அவை உருப்பெற்றன. ஒருபுறம் இமாம் அலீ —தனக்கு உடன்பாடில்லாத— மத்தியஸ்தம் செய்யும் முடிவை ஏற்றுக்கொள்வதையும், மறுபுறம் தனக்கு உடன்பாடற்ற பிரதிநிதியை நியமனம் செய்வதையும் அவர்கள் அவதானித்தனர். இங்கு நாம் மீண்டும் அதே கேள்வியை முன்வைக்கிறோம்: தன் பக்கம் இருக்கும் மக்களின் எண்ணங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பளிக்காத ஒரு இமாம், தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பார். இவ்விரு விஷயங்களிலும், “நான் இவர்களின் கருத்தை நிராகரிக்கிறேன்” என்று இமாம் அலீ கூறியிருக்க முடியும். ஆனால் நிகழ்வுகள் அவ்வாறு நகரவில்லை. கவாரிஜ்களின் தோற்றத்தை, இத்தகைய உள்ளார்ந்த இயங்கியல்களோடு நாம் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.

தங்கள் நிலையை இறுக்கமாக்கிக் கொண்டு பின்னாட்களில் கவாரிஜ்களாக உருவாக இருக்கும் இத்தகைய மக்களுள் பெரும்பாலனவர்கள், மத்தியஸ்தத்தை விரும்பியவர்களோடு இருந்தனர். எனவே, இமாம் அலீக்கும் முஆவியாவுக்கும் இடையில் நடந்த தீர்மானகரமான போரின் போது, அவர்கள் இருபக்கமும் இருந்ததைக் காணலாம். அதாவது, சிலர் போர் தொடர வேண்டும் என விரும்பினர்; சிலர் போரை நிறுத்த விரும்பினர். இவர்கள்தான் பின்னாட்களில் “இது பெரும் குற்றமும் தவறும் ஆகும். முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் இது” என்றனர். எனினும் ஆரம்பத்தில் அவர்கள் இதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. பின்னர் இவர்கள் இமாம் அலீயிடம் வந்து, “நாங்கள் தவறு செய்துவிட்டதாக நினைக்கிறோம். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. மத்தியஸ்தத்திற்கு நாங்கள் உடன்பட்டிருக்கக் கூடாது. அதற்கு உடன்பட்டதால் நாங்கள் நிராகரிப்பவர்களாகி (காஃபிர்) விட்டோம்” என்றனர். இப்போதெல்லாம் சில முஸ்லிம்களால் பிற முஸ்லிம்களுக்கு எதிராக இச்சொல் சரளமாக பயன்படுத்தப்படுவதை நினைத்துப் பாருங்கள்.

வரலாற்றில் முதன்முறையாக ‘காஃபிர்’ என்னும் சொல் அலட்சியமாகப் பயன்படுத்தப்படுவது இந்தச் சம்பவத்தின் போதுதான் என்பதை கவனத்தில் கொள்ளவும். இங்குதான் நிராகரிப்பின் (குஃப்ர்) அடிப்படையில் ஒருவரை குற்றம் சாட்டுவதும் அவமதிப்பதும் இத்தகைய மக்கள் மத்தியில் நடைமுறைக்கு வருகிறது. அவர்கள் மேலும் தொடர்ந்தனர்: “நாங்கள் தவறிழைத்துவிட்டோம். அந்தக் கணத்தில் நிராகரிப்பவர்களாகி விட்டோம். எங்கள் தவறுகளுக்கு வருந்தி உளமாற அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (தவ்பா) கோரிவிட்டோம். நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்”. அதாவது இவர்கள் இமாம் அலீயை நிராகரிப்பவர் எனக் குற்றம் சுமத்தி, எப்படி அவர்கள் பாவமன்னிப்பு கோரினார்களோ அதேபோல் அவரையும் மன்னிப்பு கோர நிர்பந்தித்தனர்.

கொள்கை

நடந்தவற்றையெல்லாம் பார்த்தபின் சிஃப்பீனின் சவால் மிக்க, இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தோன்றிய இம்மக்களின் முழக்கம் “லா ஹுக்மா இல்லா லில்லாஹ்” என்பதாக இருந்தது. ‘அல்லாஹ்வுடையதன்றி வேறு எந்த ஆட்சியும் இல்லை’ என்று பொருள்படும் இவ்வாக்கியத்தை அவர்கள் திரும்பத் திரும்ப முழங்கிக் கொண்டே இருந்தனர். அதாவது ‘யாரும் தன்னை ஆட்சியாளர் அல்லது சட்டத்தை நிர்வகிப்பவர் என்று கோர முடியாது. மனிதனன்றி அல்லாஹ்தான் அதைச் செய்ய முடியும். மனிதர்களாகிய நமக்கு ஆட்சியில் பங்கு அறவே இல்லை’ என்பதே அவர்களின் முழக்கமாக இருந்தது. இது அபத்தமான கருத்து என்பதில் சந்தேகம் இல்லை.

சட்டம் என்ற ஒன்று இருந்தால் அதை நிர்வகிப்பவர்களும் இருக்கத்தான் வேண்டும். சட்டம் தனித்து நின்று தாமாக செயல்படப் போவதில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களும் இருக்க வேண்டும். அக்கால அரசியல் சூழலில் அவர்களின் நிலையை இந்த முழக்கம் தெளிவுபடுத்தியது. அதாவது, “அலீ இப்னு அபூதாலிப், முஆவியா இப்னு அபூ சுஃப்யான், அம்ர் இப்னு ஆஸ் அல்லது அபூ மூஸா அல் அஷ்அரி என யாருக்கும் ஆட்சி அதிகாரத்தில் எந்தப் பங்கும் இல்லை. அல்லாஹ்தான் இதை விதித்தான்; இவ்விஷயத்திலும் மற்ற எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வே தனது விதியை செயல்படுத்துகிறான்” என்றனர்.

சிஃப்பீனில் தொடங்கி இமாம் அலீயின் மரணம் வரை, அவர்கள் அவரோடு மோதல் போக்கையே கையாண்டனர். இமாம் அலீ பள்ளிவாசலில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது எழுந்து நின்று அவரை இடைமறிப்பர்; ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குழுமியிருக்கும் போது அவர்கள் முன்னிலையிலேயே அவரை எதிர்த்துப் பேசுவர். மேலும் சில அறிவிப்புகளின்படி இமாம் அலீ தொழுகையில் தலைமை தாங்கும் போது (இமாமத்) கூட இடையூறு செய்வர்; தொடர்பில்லாத விஷயங்களைச் சொல்லியோ அல்லது குறுக்கே நடந்து திரிந்தோ தொழுகைக்கு இடையூறு செய்வர். ஏதாவது செய்து இமாம் அலீயின் தலைமையை செல்லாததாக்க முயற்சி செய்வர்.

இவ்விஷயங்களை நாம் புரிந்து கொள்வது மிக மிக அவசியம். ஏனெனில் இது வெறும் வரலாறு மட்டுமல்ல. நாம் வரலாறை ஆய்வு செய்கிறோம் என்றாலும் இன்று கூட நாம் இத்தகைய நிகழ்வுகளை பார்க்க முடிகிறது. ஒரு தலைவர் அல்லது இஸ்லாமிய இயக்கம் அல்லது இஸ்லாமிய அரசு செயல்படும்போது, ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்தில் இஸ்லாமியத் தலைமை எடுக்கும் முடிவை சிலர் எதிர்ப்பதும், பின்னர் எப்படி முஸ்லிம்களின் உளவியல் உள்ளுக்குள்ளாக தமக்கெதிராக திரும்புகிறது என்பதையும் நாம் பார்க்கிறோம். இந்த வரலாறிலும் இதுதான் நடந்தது. முஸ்லிம் உளவியலின் ஒரு பகுதி தனக்கெதிராகவே திரும்பியிருந்தது. இந்த வரலாறை படித்து ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து புரிந்து கொள்ளவில்லையெனில் நாம் வேறு என்னதான் செய்யப் போகிறோம்?

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 02 / அல் கவாரிஜ் சிந்தனைப் பள்ளி (பாகம் 2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *