இஸ்லாமிய வரலாறு – 05 / முஃதசிலா சிந்தனைப் பள்ளி – இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 05 / முஃதசிலா சிந்தனைப் பள்ளி (பாகம் 2)
இஸ்லாமிய வரலாறு – 05 / முஃதசிலா சிந்தனைப் பள்ளி (பாகம் 3)
♦ ♦ ♦ ♦ ♦
இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். படிக்க எளிதாக இருக்கும் பொருட்டு மூன்று பாகங்களாகப் பிரித்துள்ளோம். Abu Uthman என்ற யூடியூப் சேனலில் அவருடைய மற்ற உரைகள் உள்ளன – மொழி பெயர்ப்பாளர்.
உரையாற்றிய நாள்: 01-04-2008
YouTube Link: Islamic History Mutazilah School of Thought
♦ ♦ ♦ ♦ ♦
(பாகம் 1)
முற்காலத்தில் இஸ்லாத்தில் கருத்தியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகள் தோன்றி வளர்ந்ததற்கு சிறந்த சான்றாக முஃதசிலா சிந்தனைப் பள்ளியை கூறலாம். இது உமைய்யா ஆட்சி காலத்தில் தோன்றி, அப்பாஸி காலத்தில் செழித்தோங்கி அதிவேக வளர்ச்சி கண்டது. முஃதசிலாக்களின் பொற்காலம் பாக்தாதை ஆண்ட அல் மஃமூன், அல் முஃதசிம் மற்றும் அல் வசிக் ஆகிய அப்பாஸிய மன்னர்களின் ஆட்சி காலம் ஆகும். (நான் இவர்களை மன்னர்கள் என்றே குறிப்பிடுகிறேன். கலீஃபாக்கள் என்று அழைக்கப்படுவதற்கு இவர்கள் தகுதியற்றவர்கள்). சுமார் இருநூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்திய முஃதசிலாக்களின் காலத்தில் பல்வேறு வாதங்களும் விவாதங்களும் நடைபெற்றன. இந்தப் பகுத்தறிவுவாத சிந்தனைப் பள்ளியின் காரணமாக முஸ்லிம்களிடையே சிந்தனை ரீதியான பிரிவினைகள் ஊடுருவின.
தோற்றம்
முஃதசிலாவின் தோற்றம் குறித்து மூன்று வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இமாம் அல் ஹசன் ஆட்சியைத் துறந்து முஆவியாவிடம் அதிகாரத்தை ஒப்படைத்த சூழலில் முஃதசிலா தோன்றியதாக ஒரு கருத்து நிலவுகிறது. அப்போது அரசியல் நடவடிக்கைகளைத் துறந்து தத்துவம், கொள்கை, கோட்பாடுகள் போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்தும் அறிவுசார் போக்கு உருவானது. அன்று அம்மக்கள் அதற்குமேல் எதுவும் செய்ய முடியாமல் அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டிருக்கக் கூடும். இத்தகைய சூழலில் முஃதசிலா சிந்தனைப் பள்ளி தோன்றியது என்று சிலர் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் முர்ஜியா சிந்தனை தோன்றிய அதே சூழலில் முஃதசிலாவும் தோன்றியது என்று கூறுகின்றனர். அதாவது உஸ்மான் ஆட்சி காலத்தில் சஃது இப்னு அபீ வக்காஸ், அப்துர் ரஹ்மான் இப்னு அபூ பக்கர் மற்றும் அப்துல்லாஹ் இப்னு உமர் போன்றோர் வெளிப்படுத்திய அரசியல் சார்பின்மை என்ற பின்னணியில் முஃதசிலா சிந்தனை தோன்றியதாகக் கூறுகின்றனர்.
மூன்றாவதாக, வாசில் இப்னு அதா எனும் அறிஞர் காலத்தில் இந்த இஸ்லாமிய அறிவுசார் சிந்தனைப் பள்ளி தோன்றியது என்ற கருத்தும் நிலவுகிறது. தெற்கு ஈராக்கின் பஸ்ரா நகரில் வாழ்ந்த அல் ஹசன் அல் பஸ்ரியின் மாணவரான வாசில் இப்னு அதா, முதல் முஃதசிலாவாக கருதப்படுகிறார். அங்குள்ள ஒரு பள்ளிவாசலில் ஹசன் அல் பஸ்ரி வகுப்பு (ஹலகா) நடத்திக் கொண்டிருந்தார். அன்று பள்ளிவாசல்கள்தான் பள்ளிக்கூடங்களாகவும் கல்வி நிறுவனங்களாகவும் திகழ்ந்தன. கல்வி கற்க விரும்பும் மக்கள் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு அறிஞர்கள் நடத்தும் வகுப்புகளில் தம்மை இணைத்துக் கொள்வர். இப்படியாக அல் ஹசன் அல் பஸ்ரி பிரபலமான அறிஞராகவும் வாசில் இப்னு அதா அவருடைய பிரபலமான மாணவராகவும் இருந்தார்.
அப்போது மீண்டும், பெரும்பாவங்கள் செய்த முஸ்லிம்களை (முர்தகிப் அல் கபீரா) எப்படி வகைப்படுத்துவது என்ற கேள்வி எழுந்தது. இவர்களை நிராகரிப்பாளர்கள் என்று அழைக்க முடியாது. அதே சமயம் இவர்கள் நம்பிக்கையாளர்களும் அல்ல என்று வாசில் இப்னு அதா கூறினார். இவ்வாறு இவர்கள் விஷயத்தில் தன் ஆசிரியரோடு கருத்து வேறுபாடு கொண்டு அவரிடமிருந்து பிரிந்து தனியாக வகுப்பு நடத்தத் துவங்கினார். (இதிலிருந்து அன்று பல கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் பள்ளிவாசல்களில் கருத்துச் சுதந்திரம் இருந்ததை அறிய முடிகிறது.)
“பெரும்பாவங்களைச் செய்யும் முஸ்லிம், நம்பிக்கையாளருக்கும் (முஃமின்) நிராகரிப்பாளருக்கும் (காஃபிர்) இடைப்பட்டவர் ஆவார்” என்று வாசில் இப்னு அதா கூறினார். இஃதிசால் என்றால் ‘விலகிச் செல்லுதல்’ என்று பொருள். ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த வகுப்பிலிருந்து விலகிச் சென்று தனியாக வகுப்பு நடத்தியதால், இவரைப் பின்பற்றியவர்கள் ‘முஃதசிலாக்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.
கோட்பாடு
முஃதசிலா கோட்பாடு பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக இருந்தது: ஓரிறைக் கொள்கை (தவ்ஹீத்), நீதி (அத்ல்), சுவனம் குறித்த இறை வாக்கு மற்றும் நரகம் குறித்த அவனது எச்சரிக்கை (அல் வஅத் வ அல் வஈத்), பெரும்பாவம் செய்த முஸ்லிம் குறித்த இடைப்பட்ட நிலை (மன்ஸில பைனல் மன்ஸிலதைன்) மற்றும் நன்மையை ஏவி தீமையை தடுப்பது (அம்ர் பில் மஃரூஃப் வ நஹீ அனில் முன்கர்).
முஃதசிலாக்கள் ஈராக்கில் அதிகமாக இருந்தனர். அவர்களுள் பலர் பாரசீகப் பின்னணி கொண்டவர்களாகவும் இருந்தனர். எனவே அரேபியர்கள் போலன்றி அறிவுசார் செயல்பாடுகளில் ஏற்கனவே ஈடுபட்டிருந்ததோடு அவர்கள் யூத கிறிஸ்துவர்களோடும் தொடர்பில் இருந்தனர். பிற்காலத்தில் அவர்கள் தங்கள் சிந்தனைப் பள்ளியை தோற்றுவித்து தத்துவ விவாதங்களில் ஈடுபட்டபோது அவர்களின் இந்தப் பின்னணி அவர்களுடைய இஸ்லாமிய தத்துவ வியாக்கியானங்களில் செல்வாக்கு செலுத்தியது.
முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய பல்வேறு கோட்பாட்டு ரீதியான வித்தியாசங்களுள் ஒன்று ‘அல்லாஹ்வை பார்க்க முடியுமா?’ என்ற கேள்வி தொடர்பானது. அரபியில் இது ‘ருஃயதுல்லாஹ்’ என்று சொல்லப்பட்டது. இன்று ஒரு சில இடங்களில் இது குறித்து பேசப்படுகிறது என்றாலும் முஸ்லிம்களை பிளவுபடுத்தும் அளவுக்கு இது வளரவில்லை. இதற்காக நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவோம். ஆனால் அன்று இது தொடர்பாக முஸ்லிம்கள் மத்தியில் தீவிர வாதப் பிரதிவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. முஃதசிலாக்கள், ‘அல்லாஹ்வை பார்க்க முடியாது’ என்றனர். மேலும் அல்லாஹ்வின் பண்புகள் அவனுடைய சாராம்சத்திலிருந்து தனித்து நிற்பதில்லை என்றனர். அதாவது ‘அவை இரண்டும் ஒன்றுதான்; வெவ்வேறானவை அல்ல’ என்றனர்.
மேலும் அவர்கள் ‘குர்ஆன் படைக்கப்பட்டது’ என்றனர். கிட்டத்தட்ட கிறிஸ்துவத்தின் திரித்துவக் கொள்கையால் ஏற்பட்ட பிரச்சனைகள் போல இதுவும் பிற்காலத்தில் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. கிறிஸ்துவர்கள், ‘கடவுள் ஒருவர், ஒன்றில் மூவர் அல்லது மூன்றில் ஒருவர்’ என்று நிகழ்த்திய விவாதங்கள் அவர்களை பல பிரிவுகளாக கூறுபோட்டது. அது போலவே முஸ்லிம்களும் ‘குர்ஆன் படைக்கப்பட்டது’ என்றும் ‘படைக்கப்படாதது’ என்றும் நிகழ்த்திய விவாதங்கள் அவர்களை பிளவுபடுத்தும் அளவு தீவிரத்தன்மை கொண்டிருந்தது. எனினும் அது அந்த அளவுக்கு வளர்ந்து செல்லவில்லை. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். எப்படியாயினும் —தங்கள் கருத்துக்களால் மக்கள் மத்தியில் சிலசமயம் செல்வாக்கோடும் சிலசமயம் செல்வாக்கு இழந்தும் காணப்பட்ட— முஃதசிலாக்கள், ‘குர்ஆன் படைக்கப்பட்டது (அல் குர்ஆனு மஃஹ்லூக்)’ என்றனர்.
முஃதசிலாக்களும் சட்டவியல் அறிஞர்கள் மற்றும் நபிமொழி வல்லுநர்களும்
முஃதசிலாக்களுக்கும் —அபூ ஹனீஃபா, ஷாஃபி போன்ற— சட்டவியல் அறிஞர்கள் (ஃபுகஹா) மற்றும் நபிமொழி வல்லுநர்களுக்கு (முஹத்திசீன்) இடையே ஒருவித போட்டி நிலவியது. அவர்களுக்கிடையே சொற்போரே நிகழ்ந்தது எனலாம். சட்டவியல் அறிஞர்களும் நபிமொழி வல்லுநர்களும் முஃதசிலாக்களை ‘இஸ்லாத்துக்கு முந்தைய தத்துவங்கள் மற்றும் யூத, கிறிஸ்துவ இறையியல் கொள்கைகளின் தாக்கத்துக்கு அளவுக்கு அதிகமாக ஆட்பட்டவர்களாகக்’ கருதினர். எனவே இந்த இருதரப்பினருக்கும் இடையே ஒருவித இறுக்கம் இருந்து கொண்டே இருந்தது.
மறுபுறம், இஸ்லாத்தின் மையநீரோட்ட அறிஞர்கள் இஸ்லாத்தைப் புரிந்து அதற்கு விளக்கம் அளித்த விதத்தில் முஃதசிலாக்கள் பிரச்சனை கண்டனர். குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் ஆய்வு செய்வதில் சிந்திக்கும் ஆற்றலுக்கு சட்டவியல் அறிஞர்களும் நபிமொழி வல்லுனர்களும் அளித்த முக்கியத்துவத்தைவிட, முஃதசிலாக்கள் மனித அறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர்.
முஃதசிலாக்கள் குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் பகுத்தறிவு அடிப்படையில் விளக்கம் அளித்ததால், சிலவேளை முஸ்லிம் அல்லாதவர்களும் முஸ்லிம் எதிர்ப்பாளர்களும் கூட, முஸ்லிம்களாகத் தோன்றி முஃதசிலாக்களின் போர்வையில் வாதங்களை முன்வைத்து இஸ்லாத்தை கீழறுக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட நிகழ்வுகளையும் வரலாற்றில் காண முடிகிறது. எனவே சில சட்ட அறிஞர்கள், ‘முஃதசிலாக்கள் நம்பகமற்றவர்கள்’ என்றும் ‘வழக்குகளில் அவர்களின் சாட்சியத்தை ஏற்கக் கூடாது’ என்றும் கூறினர். இன்னும் சிலர் முஃதசிலா தலைவரை (இமாம்) பின்பற்றி நடைபெற்ற தொழுகை செல்லுபடியாகாது என்றும் அவர் பின்னால் நின்று தொழுதவர்கள் மீண்டும் தொழுகை செய்ய வேண்டும் என்றனர். இன்னும் சிலரோ அவர்களை ‘ஸனாதிகாக்கள்’ என்றனர். ‘ஸனாதிகா’ என்பது மத நிந்தனையாளர்களை குறிக்க பயன்படுத்தப்படும் சொல். ஆக முஃதசிலாக்கள் மத நிந்தனையாளர்களாகக் கருதப்பட்டனர்.
முஃதசிலாக்களும் ஷியாக்களும்
சில இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள், முஃதசிலாக்களை ஷியாக்கள் என்றும் கருதுவதில்லை; சன்னிகள் என்றும் கருதுவதில்லை. அவர்கள் முஃதசிலாவை சுயாதீன கொள்கை கொண்ட தனி சிந்தனைப் பள்ளியாகப் பார்க்கின்றனர். இன்னும் சிலர், முஃதசிலாக்களை ஷியாக்கள் என்றும் ஆனால் அவர்கள் தங்களை அப்படி வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்றும் கூறுகின்றனர். வாசில் இப்னு அதாவும் இமாம் ஸைதும் —கிட்டத்தட்ட சொந்த சகோதரர்கள் போல— நெருக்கமாக இருந்தனர். இதைக் காரணம் காட்டி ஆதிக்க வர்க்கம் முஃதசிலாக்களை ‘ரகசிய ஷியாக்கள்’ என்று குற்றம் சாட்டியது.
மேலும், தஷய்யு சிந்தனை தன்னுள்ளேயே தேறிய மெய்யியல் போக்கை கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்றை கவனிக்கும் போது அதற்கான காரணம் விளங்குகிறது. முஆவியா அரபு தேசியவாதத்தைத் தூண்டி அரேபியாவில் வாழ்ந்தவர்களை கிளறினார். இமாம் அலீ மற்றும் அவர் நடத்திய அரசியல் எதிர்ப்பியக்கத்தின் ஆதரவாளர்கள், பெரும்பாலும் அரேபியாவுக்கு வெளியே இருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவரும் புதிதாக இஸ்லாமிய வட்டத்துக்குள் வந்த பகுதிகளைச் சார்ந்தவர்கள். தலைமுறைகளாக தங்களுக்கென கொள்கை கோட்பாடுகளை வகுத்திருந்த இவர்கள், முஸ்லிம்களாக மாறியவுடன் ஒரே நாளில் அக்கருத்துகள் அவர்களை விட்டு அகன்று விடாது. அவர்களின் சிந்தனை, எழுப்பும் கேள்விகள் என எல்லாவற்றிலும் அதன் தாக்கம் இருக்கும். எனவே சன்னி சிந்தனையை விட தஷய்யு சிந்தனையில், இன்று ‘மெய்யியல்’ என்று அறியப்படும் அறிவியல் ஆழமாக வேரூன்றி இருந்தது.
கண்மூடி பின்பற்றுதல்
முஃதசிலாக்களை பிற முஸ்லிம்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது எது? அவர்கள், கண்மூடி பின்பற்றும் கொள்கையான ‘தக்லீத்’ கொள்கையை ஆதரிக்கவில்லை. தக்லீத் என்பது பெரும்பான்மை மக்களான சராசரி முஸ்லிம்கள் குர்ஆன், நபிமொழி மற்றும் தலைவர்களின் அபிப்பிராயங்களைக் கற்று அவற்றிலிருந்து தம் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்கள் குறித்து சட்டதிட்டங்களை பெற முடியாதவர்களாக இருப்பின், அவர்கள் ஏதாவது ஒரு அறிஞரைப் பின்பற்றி அவர் சொல்வதைக் கேட்டு நடக்கும் முறை ஆகும். இந்த அணுகுமுறை முஸ்லிம்களின் சிந்தனைத் திறனை மட்டுப்படுத்தும் என்று கூறி முஃதசிலாக்கள் இதை ஆதரிக்கவில்லை.
முஃதசிலாக்கள் கூறியவற்றின் சாராம்சத்தை உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். சராசரி முஸ்லிம்களிடம் ‘நீங்கள் முடிவெடுப்பதற்கு வேறு ஒருவரை பின்பற்ற வேண்டும்’ என்று கூறினால் அது அவர்களை மனதளவில் சோம்பலாக்கிவிடும். முஸ்லிம்கள் சோம்பேறிகளாக இருக்க முடியாது. சிந்திப்பது நம் கடமை. இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் பகுத்தறிவுக் கூறுகளுக்கு முக்கியத்துவம் அளித்த முஃதசிலாக்கள் கண்மூடி பின்பற்றுவதை எதிர்த்தனர்.
எனினும் சில சூழ்நிலைகளில் சில முஸ்லிம்கள் பல்வேறு காரணங்களால் போதுமான புரிதலை ஏற்படுத்த முடியாதவர்களாகவோ, பகுத்தறிய இயலாதவர்களாகவோ, ஆய்வுகள் மேற்கொள்ள முடியாதவர்களாகவோ இருப்பின், அத்தகைய சூழல்களில் மட்டும் வழுவாக கண்மூடி பின்பற்றுவது அனுமதிக்கப்பட்டது என்றனர். எனினும் இது தினசரி இஸ்லாமிய சமூக வாழ்வின் மையநீரோட்டத்தின் அங்கம் ஆக முடியாது என்று தெளிவாகக் கூறினர்.
வளர்ச்சிப் பின்னணி
முஃதசிலா என்பது முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய முதல் பெரும் அறிவுசார் செயல்பாட்டின் தொடக்கம் என்பதை நினைவில் கொள்க. இந்த இஸ்லாமிய அறிஞர்களும் மேதைகளும் மேதாவிகளும் இன்றைய ஈராக்கின் தெற்குப் பகுதியிலுள்ள பஸ்ரா, கூஃபா, பாக்தாத் நகரங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கு அவர்களுக்கு பல்வேறு மெய்யியல் கொள்கைகள் (Philosophies), மதங்கள் மற்றும் சித்தாந்தங்களின் அறிமுகம் கிடைத்தது. இந்த மதங்களும் சித்தாந்தங்களும், கொள்கைகளும் பிரத்தியேகமாக தமக்கே உரிய பகுத்தறிவுக் கோட்பாடுகளை பெற்றிருந்தன. இவர்களின் வாதங்களுக்கு முஸ்லிம்கள் எதிர்வினை ஆற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.
அல்லாஹ்விடமிருந்து வந்த நேர்வழியையும், தூதரையும், வேதத்தையும் பெற்றுள்ள முஸ்லிம்கள், அப்பகுதியில் வாழும் ஸொரொஸ்ட்ரியனிச (Zoroastrianism) சமயத்தவரை, (ஸொரொஸ்ட்ரியனிசமும் கிறிஸ்துவமும் கலந்த சமயமான) மானி சமயத்தவரை (Manichean), கிறிஸ்துவர் அல்லது யூதரை சந்திக்க நேர்ந்தால் அவர்களோடு தங்கள் கொள்கைகளை விவாதிக்க வேண்டும் என முஃதசிலாக்கள் விரும்பினர். பிற கொள்கைகளைச் சார்ந்தவர்களிடம் வெறுமனே ஒரு சில குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டிவிட்டு கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல், அவர்கள் எப்படி அறிவைப் பயன்படுத்தி தங்கள் கொள்கை கோட்பாடுகளை முன்வைக்கிறார்களோ அதேபோல முஸ்லிம்களும் அறிவைப் பயன்படுத்தி தங்கள் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முன்வைப்பதுதான் பொறுப்பான செயல் எனக் கருதினர். ஆக இந்தச் சுயாதீன பகுத்தறிவுச் சிந்தனைப் பள்ளியை வார்த்தெடுத்ததில் அதன் புவியியல் அமைவிடமும் காரணமாக இருந்தது.
♦ ♦ ♦ ♦ ♦