எனது ஹஜ் (2) – சையது முஹம்மது

Posted on

எனது ஹஜ் (1)

♣ ♣ ♣ ♣ ♣

வரலாற்றுத் தலங்கள்

முதன்முதலாக கஅபாவை பார்க்க செல்கிறோம் என்ற மகிழ்ச்சியுடன் 14-06-23 அன்று மற்றவர்களுடன் அங்கு சென்றேன். அங்கு சென்றவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அங்கு சுற்றி கட்டப்பட்டுள்ள பெரும்பெரும் கட்டிடங்கள் ‘என்னைப்பார், என்னைப்பார்’ என்று துருத்திக் கொண்டு கண்முன் நின்றன. ஊரிலே இருக்கும் போது இருந்த இறை நினைவுகூட எனக்கு இங்கு இல்லை. கடுமையான கவனச்சிதறல் ஏற்பட்டது. இருப்பது போதாதென்று சுற்றி இன்னமும் ஏராளமான கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்கு திரும்பினாலும் மிகப் பெரும் கிரேன்கள் தெரிகின்றன.

அல்லாஹ்வின் அத்தாட்சிகளான (2:158) சஃபா, மர்வா குன்றுகள் எங்கே என்று பார்த்தால் அவற்றை கட்டிடங்களில் மூழ்கடித்திருக்கிறார்கள். தரைதளத்தில் ஆறு அடி உயரத்தில் சுமார் 50 சதுர அடி சுற்றளவில் ஒரு பாறை தெரிகிறது. அதுதான் ‘சஃபா’ குன்று. அது முதல் தளத்தில் சுமார் 20 சதுர அடி சுற்றளவில் சில அடிகள் உயரத்தில் தெரிகிறது. நடுவில் உள்ளதை உடைத்து எடுத்துவிட்டார்கள். ‘மர்வா’ குன்றுக்கும் இதே கதிதான்.

முதன்முதலில் இறைச்செய்தி இறங்கிய ஹிரா குகை அமைந்துள்ள அந்த மலை, இறைத்தூதரும்(ஸல்) அபூபக்கரும்(ரழி) மதீனாவுக்கு செல்லும்போது எதிரிகளிடம் இருந்து தற்காக்க மறைந்திருந்த தவ்ர் குகை உள்ள மலை, அரஃபாவில் இறைத்தூதர் உரை நிகழ்த்தியகுன்று (ஜபலுர் ரஹ்மா), மக்காவில் அன்னை கதிஜா அடக்கம் செய்துள்ள இடம், ஜின் பள்ளிவாசல் எங்கும் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு கூட இல்லாமல் துடைத்து வைத்துள்ளார்கள்.

மதினாவிலும் அன்னை பாத்திமா, இமாம் ஹசன், மூன்றாம் கலீபா உஸ்மான் இன்னும் எண்ணற்ற நபித்தோழர்கள் அடக்கம் செய்யப்பட்ட பொது அடக்கத்தலத்திலும் (ஜன்னத்துல் பஹீ) எந்த குறிப்புகளும் இல்லை. ஆனால் ஹரமின் வாசல்களுக்கு கிங் அப்துல் அஜிஸ் கேட், கிங் அப்துல்லாஹ் கேட் என்று பெயர் வைப்பதற்கு அவர்கள் வெட்கப்படவில்லை.

பிறை

18-06-23 துல்ஹஜ் பிறை பார்த்து விட்டதாகவும் 27-06-23 ஆம் தேதி அரஃபா தினம் என்றும் சவூதி அரசு அறிவித்தது.

மக்கா நேரப்படி 18-06-23 அன்று காலை 07.41க்குத்தான் புதிய பிறை (New moon) தொடங்குகிறது. மக்கா நேரப்படி சூரியன் மறையும் நேரம் மாலை 07.05 ஆகும். 07.30 வரை அந்தி நேரம் (dusk) ஆகும். பிறை மறையும் நேரம் மாலை 07.35 ஆகும். அந்த நேரத்தில் வளர்பிறையின் அளவு 0.4 ஆகும். அதை கண்களால் பார்க்க இயலாது. சக்திவாய்ந்த தொலைநோக்கி கொண்டுதான் பார்க்க முடியும். ஆனால் ‘பிறை பார்க்கப்பட்டு விட்டது’ எனக்கூறி ஹஜ்ஜை அறிவித்தார்கள்.

இஸ்லாமிய மாதம் சூரியன் மறைந்ததில் இருந்து கணக்கிடப்படும். அதிலிருந்து அடுத்த நாள் சூரியன் மறையும் வரை ஒரு நாள். இரவு முதலில், பகல் இரண்டாவது. துல் ஹஜ் 8, 9, 10, 11, 12 ஹஜ்ஜுக்குரிய காலங்கள் ஆகும். 13 ஆம்தேதி விருப்புரிமை (option) ஆகும்.

மினா, முஜ்தலிஃபா, அரஃபா மைதானங்களில் தலா 3 மெட்ரோ இரயில் நிலையங்கள் கட்டியுள்ளனர். “எங்களுக்கு 2ஆவது இரயில் நிலையம் என்றும் மற்றதில் பயணிக்க முடியாது” என்றும் கூறினார்கள்.

மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு கையில் அணியும் பட்டி ஒன்றை கொடுத்தார்கள். அதைக் காண்பித்தால்தான் ரயிலில் பயணிக்க முடியும். ஒரு பட்டியிலே ஒருவர்தான் செல்ல முடியும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், ஒருவர் தவறவிட்டு விட்டால் அடுத்தவர் ‘எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்’ எனக் கூறி செல்ல முடியாது. ஆகவே பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி முஅல்லிமின் ஆட்கள் கொடுத்தார்கள்.

பின்பு மினா கூடாரத்தில் தங்குவதற்காக பட்டி ஒன்றை “கம்ப்யூட்டரில் ஸ்கிரீன் செய்தால்தான், உள்ளே செல்ல இயலும்” என்றுக் கூறி கொடுத்தார்கள்.

துல்ஹஜ் 8 – மினா

துல்ஹஜ் 8 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகுதான் மினா செல்ல வேண்டும். ஆனால் முதல் நாள் இரவே எங்களை கிளம்பச் சொல்லி முஅல்லிமின் ஆள் வற்புறுத்தினார். எனவே அஸீஸியாவில் நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்திலேயே ஹஜ்ஜுக்கான இஹ்ராம் உடை அணிந்து கொண்டு அனைவரும் தயாரானோம்.

25-06-23 அன்று இரவு 11.00 மணிக்கு எங்களை பஸ் மூலம் அழைத்துச் சென்றார்கள். பஸ் 12.00 மணிக்கு மினா மைதானம் சென்றடைந்தது. எங்களுடைய சர்வீஸ் சென்டர் எண் 25 ஆகும். கூடார எண் 27 ஆகும். கூடாரத்தின் உள்ளே சென்றபோது எனக்குள் திகில் பரவியது.‘என்ன இவ்வளவு நெருக்கடியாக இருக்கிறது’ என எனக்குள் திகில் பரவியது.

கபரஸ்தானில்கூட 2.5/6 என்ற அளவில் குழி வெட்டுவார்கள். மேலும் அங்கே லக்கேஜ்கள் இருக்காது. அல்லது ஆடு மாடுகளை அடைக்கும் பட்டி போல எனக்கூறலாமா? அவற்றை இவ்வளவு நெருக்கமாக அடைக்க மாட்டார்கள். அவை மூச்சு திணறி இறந்து விட்டால் நட்டமாகிவிடும். அவை பட்டிகளில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும். அல்லது கேரளாவுக்கு அடிமாடுகளை லாரியிலே நிறுத்தி அடுக்கி வைத்து கொண்டுச் செல்வார்களே. அதுபோல என்று கூறலாமா?

அங்கு ஒரு ஹாஜிக்கு அவர்கள் ஒதுக்கிய இடம் 1.5க்கு 5.5 சதுர அடிகள்தாம். அதை அவர்கள் எப்படி கணக்கிட்டார்கள்?

அந்த முகாமில் கீழே சிவப்புக் கம்பளம் விரித்திருந்தார்கள். அதற்கு மேலே மெத்தை போட்டிருந்தார்கள். அந்த மெத்தையின் அளவு ஒன்றைக்கு ஆறு ஆகும். அந்த மெத்தை ஸ்பாஞ்சுகளால் செய்யப்பட்டது. அது முக்கால் அடி உயரம் கொண்டதாக இருந்தது. அதை இரண்டாக மடிக்க முடியும். நீள வாக்கில் அரை அடி, இரண்டரை அடி, ஒன்றரை அடி, ஒன்றரை அடி என நான்கு foldகளாக அது இருந்தது. அரைக்கு ஒன்றரை என உள்ளதை மடித்து தலையணை போல வைத்து விட்டார்கள். எனவே அவர்கள் ஒரு ஹாஜிக்கு மினா கூடாரத்தில் ஒதுக்கிய இடம் 8.25 சதுர அடிகள் ஆகும். இரயிலில் பெர்த் உள்ளதல்லவா அதே அளவு.

இந்தியாவில் இருந்து வரும் போது 20 + 20 கிலோ என்ற 2 சூட்கேஸ்கள், ட்ராலி வைத்த் ஏழு கிலோ கை லக்கேஜ் ஓன்று கொண்டு சென்றிருந்தோம். ஹஜ் கமிட்டி ஒரு பேக் கொடுத்திருந்தார்கள். ஹாஜிகள் தங்களுடைய இரண்டு சூட்கேஸ்களையும் அஸீஸியாவில் உள்ள தங்கள் அறையிலேயே வைத்துவிட்டு கை லக்கேஜையும் ஹஜ் கமிட்டி கொடுத்த பேக்கையும் எடுத்து வந்திருந்தார்கள். நானும் அவ்வாறே ட்ராலி வைத்த கை லக்கேஜ், ஹஜ் கமிட்டியில் கொடுத்த ஒரு பேக் இரண்டையும் கொண்டு சென்றிருந்தேன்.

அரஃபா தினத்தன்று அணிய புது இஹ்ராம் ஆடை, இஹ்ராமில் இருந்து வெளியான உடன் அணியும் உடை, கைலி, துண்டு வைத்திருந்தேன். கண்ணாடி, சில பிஸ்கட் பாக்கெட்டுகள், குடை,  சிறிய தொழுகை விரிப்பு போன்றவற்றை வைத்திருந்தேன். எல்லோரும் இப்படித்தான் வந்திருந்தார்கள். இவை ஏழெட்டு கிலோ எடை வந்து விடும். இப்படித்தான் ஹஜ் கமிட்டியினர் வழிகாட்டுதல் கொடுத்திருந்தார்கள்.

இந்த எட்டு சதுர அடியில்தான் லக்கேஜ்களையும்  வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கால் நீட்டிக் கொள்ள முடியும். அல்லது படுத்துக் கொண்டு காலை மடக்கிக் கொள்ள வேண்டும். நடப்பதற்குக்கூட அவர்கள் இடம் வைக்கவில்லை. பின்னர் எப்படி நடந்து செல்வது? அடுத்தவர் மெத்தையில் ஏறித்தான் செல்ல வேண்டும்.

எல்லா இடங்களிலும் அந்த மெத்தைகளைப் போட்டிருந்தார்கள். அந்த மெத்தைக்கு கீழே உள்ள கம்பளங்களே போதுமானவை. அந்த மெத்தையை ஏன் போட வேண்டும்? அந்த மெத்தைகளை எடுத்து விட்டால் தாராளமாக இருக்கும் அல்லவா? அந்த மெத்தைகளை எடுத்துவிட்டால் ஹாஜிகள் என்ன செய்வார்கள்? லக்கேஜை வைப்பார்கள், கால் நீட்டி படுப்பார்கள். குறைந்தபட்சமாக பதினைந்து சதுர அடிகள் எடுத்துக்கொள்வார்கள். அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தான் இந்த மெத்தைகள்.

♣ ♣ ♣

நடப்பதற்குக்கூட அவர்கள் இடம் வைக்கவில்லை. மெத்தையின் மீதுதான் நடந்து செல்ல வேண்டும். படுத்திருப்பவர்களிடம் “கொஞ்சம் காலை நகர்த்திக் கொள்ளுங்கள், கொஞ்சம் கையை நகர்த்திக் கொள்ளுங்கள்” என்று சொல்லி நடக்க வேண்டும். அல்லது மெத்தையைக் கொஞ்சம் தூக்க முடிந்தால் தூக்கி விட்டு அல்லது யாராவது ஒருவரை பிடித்துக் கொண்டு நடந்து செல்வர். அந்த மெத்தையில் தான் காலை வைத்து ஏறி தடுமாறி விழப்போய் சில சமயங்களில் விழுந்து அவர்கள் வெளியே சென்று வந்தார்கள். இந்தக் களேபரங்களுடன் சிறிது நேரம் தூங்குவதற்குள் காலை 4.10க்கு பஜ்ர் தொழுகைக்கான பாங்கு சொன்னார்கள்.

உளு செய்வதற்காக சென்றால் அங்கு ஒரு மிகப் பெரும் கூட்டம் இருந்தது. கழிவறையிலேயே ஒரு ஷவர் வைத்திருந்தார்கள். ஆகவே அது குளியலறையும்கூட. அது 2க்கு 4 அளவு கொண்டதாக இருந்தது. ஒரு சுவருக்கு இந்தப் பக்கம் ஆண்களுக்கும் அந்தப்பக்கம் பெண்களுக்கும் என்று இருந்தது. அங்கு பெரும் கூட்டமாக இருந்தது. எல்லோரும் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கழிவறைக்கு முன்னாலும் பலர் நின்றுக் கொண்டிருந்தார்கள். உளு செய்யும் இடத்தில் ஒரு பெரும் கூட்டம் இருந்தது. நாற்பது பேருக்கு ஒரு கழிவறை என கணக்கிட்டேன்.

கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றால் பல கூடாரங்களைக் கடந்து செல்ல வேண்டும். எதிரில் ஆண்களும் பெண்களும் வந்துக் கொண்டிந்தார்கள். ஆகவே வரிசையாக செல்வது போல செல்ல வேண்டும்.ஆகவே ஒருவர் சென்றுவிட்டு உளு செய்துவிட்டு வருவதற்கு ஒரு மணி நேரம் ஆனது. இரவு படுக்கும்போதே இடநெருக்கடியால் ஹாஜிகளுக்குள் உரசல்கள் ஏற்பட்டன. பெண்களுக்கும் இதே நிலை தான். இந்தப்பக்க கூடாரத்திலே ஆண்கள், அந்தப்பக்க கூடாரத்திலே பெண்கள். வெளியே சென்றுவிட்டு வந்தபின் காலணிகளை கையில் எடுத்துக் கொண்டு வந்து தங்கள் மெத்தைக்கு அருகில் வைத்தார்கள். அவற்றை கூடாரத்தின் வெளியே விட இடமில்லை.

எங்கு தொழுவது? அந்த மெத்தையை தூக்கி கூடாரத்தின் கம்பியில் போட்டுவிட்டு அந்த இடத்தில் நான்கு ஐந்து பேர் கொண்ட சிறுசிறு ஜமாஅத் ஆக தொழுதார்கள்.

இரு புறமும் சாலைகள். அதன் குறுக்கே வரிசையாக ஏழு, எட்டு கூடாரங்கள். 300 பேர் கொண்டது எங்கள் கூடாரம். ஒரு வரிசையில் ஏழு கூடாரங்கள் எனவே 2,100 பேர். அதுபோல எதிர் வரிசையில் 7 எனவே 2,100. இந்த இரு வரிசைக்கும் நடுவில் நடக்க, பாத்ரூம் செல்ல மூன்றடி இடம் விட்டிருந்தார்கள்.

அந்த மூன்றடியில் தான் பல்லாயிரம் ஹாஜிகளும்  வேண்டும்; வர வேண்டும். ஆண்களும் செல்ல வேண்டும். பெண்களும் செல்ல வேண்டும். பெண்களுக்கு என்று தனியாக வழி எதுவும் கிடையாது. எதிர் கூடாரத்தில் இருந்து பெண்கள் வருவார்கள். இந்த கூடாரத்தில் இருந்து ஆண்கள் வருவார்கள். அந்த மூன்றடியில் தான் அவர்கள் செல்ல வேண்டும்; திரும்ப வேண்டும். அவர்கள் ஹஜ் செய்வதற்காக வந்திருக்கிறார்கள். அவர்கள் ஐந்து வேளை உளு செய்ய செல்ல வேண்டும்; தொழ வேண்டும்.

♣ ♣ ♣

காலை எட்டு மணிக்கு ஒரு கவரில் பேக் செய்யப்பட்ட மூன்று ரொட்டி கொடுத்தார்கள். அதற்கு வேகவைத்த பருப்பு (தால்) கொடுத்தார்கள். அது சப்பாத்தி அல்ல. அதில் தயாரிப்பு தேதி, date of expiry கண்களுக்குத் தெரியாதபடி இருந்தது. அதில் ஒன்றை மட்டும் சாப்பிட முடிந்தது. அவ்வளவு சுவையற்றதாக ‘தவிட்டு ரொட்டி’ என்பார்களே அதுபோல இருந்தது.

இரண்டு நாட்களுக்குப்பின் பக்கத்து கூடாரத்தில் இருந்த ஒருவரிடம் பேசிக் கொண்டு இருந்தபோது அவர் உற்சாகமாகக் கூறினார்: முதல் கொடுத்த ரொட்டி தேதி expiry thethi முடிந்து 17 நாட்கள் ஆகியிருந்தது. நாங்கள் அவற்றையெல்லாம் அள்ளிக் கொண்டுபோய் கொடுத்தவர்களிடம் காண்பித்தோம். அவர்கள் அதை வாங்கிக்கொண்டு புதியதைக் கொடுத்தார்கள்” என்றார். அப்படியென்றால் முதல் நாள் நாங்கள் சாப்பிட்டது..

மதிய உணவிற்கு பாசுமதி அரிசியில் நெய் சோறு மாதிரி ஒன்றையும் ஒரு கறி குழம்பும் பொட்டலமாகக் கொடுத்தார்கள். அவர்கள் சோறை முக்கால் வேக்காட்டிலேயே இறக்கி விடுகிறார்கள். அது பார்வைக்கு நன்றாகவும் சாப்பிட சிரமமாகவும் இருந்தது. மாலையில் ஒரு கேனில் டீயைக் கொண்டு வந்து வைத்தார்கள். ‘மினா’வில் இருந்த நாட்களில் இதமான ஒரு விஷயம் அந்த டீ தான்.

ஹஜ் வழிகாட்டும் நிகழ்ச்சிகளில் மினா கூடாரங்கள் குறித்து ஒரு செய்தியாகக் கூறியிருந்தார்கள். இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும் என்று பாடம் எடுத்திருந்தார்கள். மனிதர்களின் அற்பத்தனத்தால், பேராசையால் ஏற்படும் இந்தத் துன்பங்கள் சகிக்க முடியாதவை ஆகும்.

எனக்கு மூச்சுத் திணறியது. என்னால் கூடாரத்திற்குள் இருக்க முடியவில்லை. வெளியே சென்று சாலையில் உட்காரலாம் என்று பார்த்தால், பின் கதவை லாக் செய்திருந்தார்கள். ‘லாக்’ என்றால் பெரிய சங்கிலி போட்டு பூட்டு போட்டு அல்ல. நம்மூரில் ட்யூப் லைட் கட்டுவதற்கு ஒரு பிளாஸ்டிக் பட்டி இருக்கிறதல்லவா? அதுப்போல ஒரு டேப் போட்டு இறுக்கி வைத்திருந்தார்கள். ஆகவே வெளியே போக முடியவில்லை. இரவு கொண்டு வந்து கூடாரத்தில் அடைத்தவுடன் பின் கேட்டை பூட்டியிருந்தார்கள்.

முன் கதவு, பின் கதவு என்றெல்லாம் இல்லை. இரு புறமும் சாலைகள். நடுவில் குறுக்குவாட்டில் இரு பக்கமும் கூடாரங்கள். அவற்றிற்கு இரு பக்கமும் வாசல்கள். எனவே ஒரு அடையாளத்திற்காக முன்கதவு, பின்கதவு என்று கூறுகிறேன்.

மாலை 7 மணிக்கெல்லாம் “அரஃபாவுக்கு செல்ல வேண்டும். ‘எல்லோரும் கிளம்புங்கள்” என்று முஅல்லிமின் ஆள் கை மைக்கிலே அறிவிப்பு செய்தார். அரஃபா மைதானத்திற்கு நாளைக் காலை பஜ்ர் தொழுத பின்புதானே செல்ல வேண்டும். இப்போது என்ன? என்று பேசிக்கொண்டோம்.

“1ஆம் நம்பர், 2ஆம் நம்பர் சர்வீஸ் சென்டரில் உள்ளவர்களை அழைத்து சென்று விட்டார்கள். இப்போது 17ஆம் நம்பர் சர்வீஸ் சென்டரில் உள்ளவர்களை அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள்” என்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நாங்கள் இருந்தது 25ஆவது சர்வீஸ் சென்டர்.

“காலையில் வந்தால் நீங்களாகத் தான் வந்து கொள்ள வேண்டும்” என்றார்கள். முஅல்லிமின் ஆளுக்கும் ஹாஜிகள் சிலருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன. எனினும் கூடாரத்தில் இருந்த பெரும்பாலான ஹாஜிகள் கிளம்பி விட்டார்கள். கிளம்பியவர்களுக்கு இரவு உணவு கொடுக்கவில்லை. நாங்கள் சிலர் கிளம்பவில்லை. அந்த அமளிகள் முடிய இரவு 12 மணி ஆனது.

துல்ஹஜ் 9 – அரஃபா

காலையில் பஜ்ர் தொழுதபின் ட்ராலி வைத்த hand லக்கேஜை மினா கூடாரத்திலேயே வைத்துவிட்டு ஹஜ் கமிட்டியில் கொடுத்த பேக்கில் இஹ்ராம் உடை, துண்டு, சில ஸ்நாக்ஸ் பொருட்களை எடுத்துக் கொண்டேன். அஸீஸியாவில் என்னுடன் அறையில் உடன் தங்கியிருந்த அப்துல் மாலிக், அப்துல்லாஹ் என்ற இரண்டு ஹாஜிகளுடன் நான் சாலையில் நடக்க ஆரம்பித்தேன்.

பல்வேறு கூடாரங்களில் இருந்து ஹாஜிகள் வெளியே வந்துக் கொண்டு இருந்தார்கள். இப்போது நாங்கள் மினா 2 மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும். எப்படி செல்வது? எல்லோரும் செல்லும் திசையில் நாங்களும் சென்றோம். ஒரு நீண்ட சாலையில் நாங்கள் சென்றுக் கொண்டிருந்தோம். பல ஆயிரம் மக்கள் முன்னும் பின்னுமாக வந்துக் கொண்டிருந்தனர். ஒரு பெரிய மேம்பாலத்தில் ஏறி இறங்கினோம்.

அங்கு சீருடை அணிந்த அரசு படையினர் மக்களை தடுத்து நிறுத்தினார்கள். எங்களுக்கு முன்பும் ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை தடுத்திருந்தார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைப் பார்த்தோம். பகுதி பகுதியாகத் தடுத்து நிறுத்தியிருந்தார்கள். பல்வேறு மேம்பாலங்கள் வழியாக மக்கள் வந்து இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே நேரம் ஆக ஆக எண்ணிக்கை பல ஆயிரங்களாக ஆகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேரம் நாங்கள் நடந்திருக்கிறோம், அல்லது நின்றிருக்கின்றோம். நாங்கள் கடந்த தூரம் 3 கி.மீ. இருக்கும். எட்டு மணிக்கு நாங்கள் மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்கப்பட்டோம். அது கால் மணி நேரத்திலேயே அரஃபா 2 என்ற ரயில் நிலையத்திற்கு வந்து விட்டது. மினா 2 மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து அரஃபா 2 இரயில் நிலையம் 14 கி.மீ. தூரம் இருக்கலாம்.

பின்பு இரயில் நிலையத்தில் இறங்கி கூடாரம் இருக்கும் பகுதிக்கு நடக்க ஆரம்பித்தோம். இப்போது வெயில் ஏறத் தொடங்கியிருந்தது. சர்வீஸ் சென்டர் 24, சர்வீஸ் சென்டர் 26 என்று போர்டு பிடித்துக் கொண்டு முன்னே சென்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களெல்லாம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களை பின்பற்றி விசாரித்துக் கொண்டே சென்றோம். சுமார் 4 கி.மீ. தூரம் நடந்து பத்து மணியளவில் நாங்கள் அரஃபாவில் கூடாரங்கள் இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

இப்போது நாங்கள் கேரளா, தமிழ்நாடு ஹாஜிகள் உள்ள இடத்திற்கு வந்துவிட்டோம். வழியில் ஒரு ஒரு சமையலறையில் ரொட்டியும் பருப்பும் (தால்) கொடுத்தார்கள். அதே தவிட்டு ரொட்டி தான். டீ வைத்திருந்தார்கள். கேரள வாலண்டியர்கள் தண்ணீர் பாட்டில்களை வழங்கிக் கொண்டிருந்தனர்.

அரஃபாவில் நாங்கள் ஒவ்வொரு கூடாரமாக சென்றோம். எல்லாம் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தன. கூடாரங்களில் நுழைந்து அங்குள்ளவர்களிடம் இஹ்ராம் நிலையில் வாக்கு வாதங்களில் ஈடுபட விரும்பவில்லை. ஓரிடத்தில் புது அட்டைப் பெட்டிகள் கிடந்தன. அவற்றில் நல்லதாக மூன்றை எடுத்துக் கொண்டு எங்காவது நிழல் கிடைத்தால் போட்டு உட்கார்ந்துக் கொள்ளலாம் என்று தேடி ஒரு ஊசி இலை மர நிழலில் அமர்ந்தோம். இலைகளின் இடுக்கு வழியாக வெயில் எங்கள் மீது பட்டுக் கொண்டிருந்தது.

மணி 11 ஆகிவிட்டது. வெயில் ஏறத் தொடங்கி நிழல் சுருங்கத் தொடங்கி விட்டது. இதற்கு மேல் இங்கிருக்க முடியாது. எதிர் வெயில் ஆகிவிடும். ஆகவே நாம் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே அஸீஸியாவில் எங்களுக்கு அறிமுகமான ஒருவர் எங்களை கடந்து சென்றார். அவரிடம் “நீங்கள் எந்த கூடாரத்தில் உள்ளீர்கள்?” என்றேன். “1 ஆம் நம்பரில்” என்றார். “அங்கு இடம் இருக்கிறதா?” என்றேன். “இடமில்லை, ஆனால் நீங்கள் வாருங்கள், பார்த்துக் கொள்ளலாம்” என்றார். நாங்கள் அந்த அட்டைகளை அங்கேயே வைத்துவிட்டு அந்த கூடாரத்திற்குச் சென்றோம்.

கூடாரத்திற்குள் ஏற்கனவே நெரிசலாக இருந்தது. ஏர் கூலர் ஓடிக் கொண்டிருந்தது. ஏறக்குறைய 200 பேர் இருந்தனர். 2.5க்கு 6 அடி என்ற அளவில் மெல்லிய மெத்தைகள் போட்டிருந்தார்கள். இது ஒருவருக்கான அளவு அல்ல. பைகளை வைத்து விட்டு நாங்கள் அமர்ந்தோம். அப்போது எங்களை அழைத்தவர் ‘குளிக்கப் போகிறீர்களா?’ என்றார். அங்கு பக்கத்தில் இருந்த ஒரு பாத்ரூமில் அதுதான் டாய்லட் ஏராளமானவர்கள் வரிசையில் வெயிலில் நின்றுக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பக்கமோ இதைவிட மோசம். 110 டிகிரி வெயிலில் அரஃபா தினத்தில் ஹாஜிகள் குளிப்பதற்கு போதுமான ஏற்பாடுகள் இல்லை.

அவர் தொலைவில் உள்ள ஒரு இடத்தைக் கூறி “நீங்கள் அங்கு செல்லுங்கள், அங்கு கூட்டம் இருக்காது. நான் அங்கு தான் சென்றேன். நீங்களும் செல்லுங்கள்” என்றார். நாங்கள் பையை அங்கேயே வைத்து விட்டு நாங்கள் இருவரும் 1 கி. மீ. தொலைவில் உள்ள அந்த இடத்திற்கு சென்றோம். போக வர 2 கி .மீ. அங்கும் ஹாஜிகள் இருந்தார்கள். ஆனால் கூட்டமில்லை. அங்கு ஒரு பிளாஸ்டிக் டப்பா கிடந்தது. அந்த டப்பாவில் பிடித்து தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன்.

வரும்போது 1.30 மணி ஆகி இருந்தது. வழியில் சமையலறையில் இரண்டு உணவுப் பொட்டலம் கொடுத்தார்கள். அதில் சோறும் கொஞ்சம் கறியும் இருந்தது. குழம்பு இல்லாமல் சாப்பிடுவது கஷ்டமாக இருந்தது. வீணாகி விடக் கூடாது என்பதற்காக மிகக் கஷ்டப்பட்டும் அதில் பாதியைக் கூட என்னால் சாப்பிட முடியவில்லை. ஆகவே அதைக் கொண்டுப் போய் போட்டு விட்டேன்.

♣ ♣ ♣

மாலை 3.30 மணிக்கெல்லாம் “முஜ்தலிஃபாவிற்கு செல்ல வாருங்கள், வாருங்கள்” என்று வெளியே மைக்கில் அறிவிப்பு செய்துக் கொண்டிருந்தார்கள். கூடாரத்திற்கு வரவில்லை. மக்களும் கிளம்பி சென்று கொண்டிருந்தார்கள்.

மக்ரிப் நேரம் வரை தங்கிவிட்டு, நேரம் வந்தவுடன் மக்ரிப் தொழுகாமல் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அதுபோலவே 7.45 மணிக்கு கூடாரத்தில் இருந்து கிளம்பினோம். அப்போதும் கூடாரத்தில் சிலர் இருந்தனர். ‘இப்போது சென்றால், நின்று நின்று செல்ல வேண்டியது இருக்கும். அதனால் நாங்கள் பின்னால் வருகிறோம் ‘ என்று கூறினார்கள். அஸீஸியாவில் என்னுடன் அறையில் இருந்த அப்துல் மாலிக், முஹம்மது யூசுஃப் என்ற ஹாஜிகளுடன் நடக்க ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு கூடாரத்தில் இருந்தும் மக்கள் வந்து சேர ஆரம்பித்தார்கள். அதுபோல சர்வீஸ் எண் 24, சர்வீஸ் எண் 26 என்ற அட்டையுடன் நின்று கொண்டிருந்தார்கள். ஆகவே நாங்கள் கூட்டத்தில் நின்றோம். எங்களுக்கு முன்னால் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்கள். அதற்கு முன்னால் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அதற்கு முன்னால் என்று கண்களுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் பகுதிபகுதியாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். நாங்கள் நின்ற சில நேரத்தில், எங்களுக்கு பின்னாலும் மக்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

ஆண்களும் பெண்களும் பல்லாயிரக்கணக்கில் நின்றுக் கொண்டேயிருந்தோம். கொஞ்சம் நகர்ந்தது. பின்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. பின்பு கொஞ்சம் நகர்ந்து மீண்டும் நிறுத்தப்பட்டது. இப்படியே நாங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தோம். அப்படியிருந்தும் நாங்கள் கடந்து வந்த தொலைவு அரைக் கிலோ மீட்டர் தான் இருக்கும். கண்ணுக்கு எட்டிய தொலைவில் அரஃபா இரண்டு மெட்ரோ இரயில் நிலையம் தெரிந்தது. அந்த பல ஆயிரக் கணக்கான மக்களிலே ஆண்கள், பெண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் இருந்தார்கள். இந்த ஹாஜிகளுக்கு இரவு உணவு வழங்கப்படவில்லை.

மெட்ரோ இரயில் வெகு நேரமாக வரவில்லை என்பதை நாங்கள் கவனித்தோம். இப்படியே நாங்கள் நிறுத்தி நிறுத்தி வைக்கப்பட்டு மெட்ரோ ரயிலில் நாங்கள் ஏற அனுமதிக்கப்பட்ட போது மணி இரவு 1 ஆகும். நின்று, நடந்து நாங்கள் கடந்த தூரம் 1 கி.மீ. மட்டுமே ஆகும்.

காலையில் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து நாங்கள் தங்கியிருந்த கூடாரத்திற்குச் செல்ல 4 கி.மீ. நடந்ததாகக் கூறினேன். இப்போது 1 கி.மீ. தான் எனில் காலையில் எங்களை சுற்றிப் போக வைத்திருக்கிறார்கள். இப்படி சுற்றவிட்டது இந்த வருட ஹஜ்ஜில் இந்திய ஹாஜிகளுக்கு கொடுக்கப்பட்ட ‘சிறப்பு துன்பம்’ ஆகும்.

ஒரு ரயிலில் இரண்டாயிரம் பேர் பயணிக்க முடியும். அந்த ரயில் 10 நிமிடத்திலேயே முஜ்தலிஃபா 2 இரயில் நிலையத்திற்கு வந்து நின்று விட்டது. அதாவது 7 கி.மீ தொலைவு மெட்ரோ இரயிலில் பயணிப்பதற்காக 5 மணிநேரம் ஆயிரக்கணக்கான மக்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் நாங்களும் நின்றோம். அந்த 7 கி.மீ. தொலைவு நடந்தே போயிருக்கலாமே என கேள்வி எழும். நடந்து செல்வதா, மெட்ரோ இரயிலில் செல்வதா, பஸ் அல்லது டாக்ஸியில் செல்வதா என்பதையெல்லாம் நாங்கள் முடிவு செய்யும் நிலையில் இல்லை. அதை அவர்கள்தாம் முடிவு செய்கிறார்கள்.

அந்த இரயில் அதற்குமேல் போகவில்லை. அதில் இருந்த கடைசி ஹாஜி வரை இறங்கும்படி கூறினார்கள். இரயில் நிலையத்தில் யாரையும் நிற்பதற்கு கூட அனுமதிக்கவில்லை. பின்பு எங்கு உட்காருவது?

‘எல்லா, எல்லா’ என்று யூனிஃபார்ம் அணிந்த அந்த அரசுப்படை இளைஞர்கள் விரட்டினார்கள். அதற்கு ‘சீக்கிரம்’, என்றோ ‘போங்க’ என்றோ அர்த்தமிருக்கலாம். சில சமயங்களில் ‘எல்லா ஹாஜ்’ என்கிறார்கள். அல்லது ‘ஹாஜ், ஹாஜ்’ என்று விரட்டினார்கள்.

♣ ♣ ♣ ♣ ♣

எனது ஹஜ் (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *