இஜ்திஹாத் – குலாம் சர்வர், ஹஸ்புல்லாஹ் ஹாஜி

Posted on
பக். 48 ₹ 20

இஸ்லாத்தில் குர்ஆன், சுன்னா மட்டுமே அடிப்படையான நிலையான இறுதியான மூலங்களாகும். இந்த மூலங்களை இடம்,காலம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீட்சி செய்யும் செயல் வழக்கிற்குப் பெயரே இஜ்திஹாத். இஸ்லாத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் இஜ்திஹாத் விறுவிறுப்பாக நடந்து வந்துள்ளது என்பதற்கு அக்காலகட்டத்தில் இயற்றப்பட்ட ஏராளமான சட்ட (ஃபிக்ஹ்) ஆக்கங்கள், உரைகள், மறுஉரைகள், நடந்தேறிய விவாதங்கள், தோற்றம் கண்ட பற்பல சிந்தனைப் பிரிவுகள் ஆகியன சான்று பகர்கின்றன. இவ்வனைத்திற்கும் பின்னால், இறைச்சட்டத்தை புதுப்பொலிவுடன் மிளிரச் செய்ய வேண்டும் எனும் உயிரோட்ட உணர்வு இயங்கியது புலனாகிறது. இஸ்லாமிய சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் விரிவடைந்து சென்றதன் விளைவாக புதுப்புது விதமான சமூக, பொருளாதார, பண்பாட்டு, ஒழுக்க, அரசியல் சக்திகளும் பிரச்சனைகளும் அலைகடலாக எழுந்து முஸ்லிம் சமுதாயத்தை திணறடிக்கச் செய்த சமயத்தில் சமுதாயம் இருவித தீர்வுகளுக்குத் தள்ளப்பட்டது. ஒன்று, பதறிப்போய் மிரண்டு தமது இறந்த காலத்திய வழக்கில் தஞ்சம் தேடி அதிலேயே உறைந்து விடுதல். மற்றொன்று, தமது அசல் இலட்சியங்களையே விட்டுக்கொடுத்து புதுவித சக்திகளுக்குப் பணிந்து வளைந்து விடுதல்.

முஸ்லிம் சமுதாயம் இவ்விரு நிர்ப்பந்தங்களுக்கும் பலியாகாமல் மூன்றாவது வழிமுறையொன்றை கையாண்டது. தன்னம்பிக்கையோடு புதிய சக்திகளை எதிர்கொண்டது. தமது சொந்த —குர்ஆன், சுன்னாவின் அடிப்படையிலான— இலட்சியங்கள் மற்றும் நெறிகளுக்குப் பொருந்துமாறு ஈர்த்தல், ஜீரணித்தல், புறக்கணித்தல், மாற்றியமைத்தல் ஆகியவை அடங்கிய முற்போக்கான புத்தாக்கச் செயல்பாட்டில் (Positive Creativity) ஈடுபட்டு சவால்களை சமாளித்தது. சமுதாயத்தின் இவ்வாக்கப்பூர்வமான முயற்சியை சாத்தியப்படுத்தியது அறிஞர்களின் உழைப்பே. இவர்கள் புதிய காரணங்களையும் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்கங்களையும் கருத்தில் கொண்டு குர்ஆனின் போதனையையும் இறைத்தூதரின் சுன்னாவையும் புத்தாக்கப்பூர்வமாக விரிவுபடுத்தி வியாக்கியானம் அளித்தனர். மாறிய, புதிய நிலைமைகளில் சமுதாயம் சுதந்திரமாகச் செயல்பட ஓர் சிந்தனைக் கட்டமைப்பை உருவாக்கி தந்து கொண்டு இருந்தனர். இஜ்திஹாத்- இஜ்மா- இஜ்திஹாத் எனும் செயல் தொடரின் வாயிலாக சுன்னாவை வாழவைத்து முன்னெடுத்துச் சென்றனர்.

இச்செயல்பாடு தளர்வடைந்து ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இஜ்திஹாதின் விஸ்தீரணம் சிறுகசிறுக குறுகலடைந்ததும், சமுதாயம் பழைய வழிகாட்டுதல்கள், சட்ட விதிகளில் உறைந்து போய்விட்டதும் வரலாற்று உண்மை. வரலாறு நெடுக அவ்வபோது அறிஞர் பெருந்தகைகள் சிலர் தங்களது ஆக்கப்பூர்வமான பணிகளால் இச்சிந்தனை உறைவை உருக்கி சமுதாயத்திற்கு புத்துயிரூட்டியுள்ளனர். இவர்களில் மிகப் பிரகாசமானதோர் எடுத்துக்காட்டு இமாம் கஸ்ஸாலியின் சீடரான இப்னு துமார்த் ஆவார். இமாம் அவர்கள் தொடங்கி வைத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் உருவாக்கம். இவரே, முதன்முதலில் குர்ஆனை மொழிபெயர்ப்பு செய்து ஓர் உன்னத நூதனத்தை அறிமுகப்படுத்தினார்.

நவீன யுகத்தில் வாழ்வின் அனைத்து —சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல— களங்களிலும் அடியோடு மாற்றம் ஏற்படுத்திய ஐரோப்பிய ஏகாதிபத்தியம் முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்தன் விளைவாக முஸ்லிம் சமுதாயம் மீண்டும் திணறடிக்கப்பட்டிருக்கிறது. மேற்சொன்ன அதே இரண்டு விளிம்புநிலைத் தீர்வுகளுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிர்ப்பந்தத்தைத் தடுத்து, மூன்றாவது —இஜ்திஹாது— வழிமுறையின் மூலம் சுன்னாவை வாழவைக்க கடந்த ஒரு நூற்றாண்டாக பிரயத்தனங்கள் நடப்பதும் நாம் அறிந்ததே. இந்த பேரியக்கத்தின் ஓர் சிறு துளியாகவே வெளிவருகிறது இந்நூல். ஆயினும், தமிழ் கூறும் நல்லுலகில் சற்றே துளிர்விடத் துவங்கியுள்ள ‘இஜ்திஹாத் சிந்தனா உணர்வை’ உசுப்பியெழுப்ப உதவும் நூலாக அமையும் என நம்புகிறோம். வல்ல அல்லாஹ் இம்முயற்சியை ஏற்று சீர்படுத்துவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *