இஸ்லாமிய வரலாறு – 13 / ஹம்பலி சிந்தனைப் பள்ளி (பாகம் 2)
Posted onஇஸ்லாமிய வரலாறு – 13 / ஹம்பலி சிந்தனைப் பள்ளி (பாகம் 1)
♣ ♣ ♣ ♣ ♣
குர்ஆன் குறித்து எழுந்த இப்பிரச்சனையை பின்வரும் கேள்விகள் மூலம் வெளிப்படுத்தலாம்: குர்ஆன் அல்லாஹ்வின் ஒரு அங்கமா? அதாவது அது அல்லாஹ்வைப் போல என்றென்றுமாக இருந்ததா? இனிமேலும் நிலைத்திருக்குமா? அல்லது அல்லாஹ்தான் குர்ஆனை இல்லாமையிலிருந்து படைத்தானா? வேறு வார்த்தைகளில் சொன்னால், குர்ஆன் இல்லாத காலம் என்று எப்பொதாவது இருந்ததா?
இப்பிரச்சனை இவ்வளவு தீவிரமாக இருந்தபோதும் யாரும் மற்றவர்களை ‘இறை மறுப்பாளர்’ என்று அழைக்கவில்லை. இது முஸ்லிம்களை பிளவுபடுத்திய, அவர்களுக்குள் மனச்சங்கடங்களை ஏற்படுத்திய தீவிரமான பிரச்சனையாக இருந்தது. எனினும் ‘இதை நம்பாதவர்கள் நிராகரிப்பவர்கள் (காஃபிர்கள்)’ என்று இறையியல் கோட்பாடாகச் சொல்லும் அளவுக்கு இது செல்லவில்லை. பிரச்சனை உக்கிரமாக இருந்த போது, அதிகாரப்பூர்வ கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களின் குடிமை உரிமைகள் பறிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. ஆனால் அவர்களின் இஸ்லாமியப் பண்பு பறிக்கப்படவில்லை. இதற்குக் காரணம், பிற முஸ்லிமகள் மீது இறைமறுப்புக் குற்றச்சாட்டு சுமத்திவிட்டு யாரும் தப்பிவிட முடியாது என்ற அளவில் மக்கள் அன்று பண்பட்டிருந்தனர் என்று கருதுகிறேன்.
கிறிஸ்துவர்கள்தான் இப்பிரச்சனையை முதலில் கிளப்பினர் என்று பார்த்தோம். ஆனால் இன்றைய கிறிஸ்துவர்கள் இதை —ஏதோ காரணத்துக்காக—எழுப்புவதில்லை. பல கிறித்துவ செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிலையங்கள் இருக்கின்றன. அரபு மொழியிலும் பல தொலைக்காட்சிகள் உள்ளன. பிற மொழிகளிலும் ஒன்றிரண்டு இருக்கலாம். அவற்றில் வேறு பல பிரச்சனைகள் பேசப்படுகின்றன. ஆனால் இப்பிரச்சனையை அவர்கள் பேசி நான் கேட்டதில்லை. இப்போது அவர்கள் இனவாதப் பிரச்சனைகளை எழுப்புவதில் மும்முரமாக உள்ளனர் போலும். எனினும் இப்பிரச்சனையை அவர்கள் எதிர்காலத்தில் கிளப்பவே மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. எனவே கவனமாக இருங்கள்.
இமாம் அஹ்மது ஏழ்மை நிலையில் வாழ்க்கையை கழித்தார். இதை அடிக்கோடிட்டு குறித்துக் கொள்ளுங்கள். அவர் பெற்றிருந்த கண்ணியமான மனநிலை, வாழ்வாதாரத்துக்காக அவரை உழைக்கத் தூண்டியது. பொருளாதார உதவிகள் ஏதேனும் வந்தால்கூட அதை அவர் ஏற்க மாட்டார். அவர் அதிகாரவர்க்க அமைப்பில் அங்கம் வகிக்கவும் மறுத்துவிட்டார்; அரசாங்க உதவிகள் எதையும் அவர் பெறவில்லை. இவ்விஷயத்தில் அவர் அபூ ஹனீஃபாவை போலவே இருந்தார். சுவாரசியமாக, இருவரும் ஈராக்கை மையமாகக் கொண்டு இயங்கினர். இருவரும் தம்கால அரசாங்கத்தோடு எத்தகைய தொடர்பும் இருந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர்.
சமகால அரசாங்கங்கள் விஷயத்தில் சட்டவியலாளர்கள் என்ன நிலைப்பாட்டை எடுத்தனர் என்று பார்த்தோம். ஒரு பக்கம் அபூ ஹனீஃபா மற்றும் அஹ்மது இப்னு ஹம்பல் இருந்தனர். அரசாங்கம் என்று வந்தபோது அவர்கள் எந்தவிதத்திலும் தம்மை அதில் தொடர்புபடுத்திக் கொள்ள விரும்பவில்லை. மறுபுறம் இமாம் ஷாஃபியி போன்றோர் இருந்தனர். ‘இந்த அரசாங்கத்தில் பதவி வகித்து என் துறையில் என்னளவில் நீதமாக நடக்க முடியுமாயின் —அவ்விடத்தில் வேறொருவர் வந்து மக்களோடு அரசியல் ஆட்டம் ஆடுவதைவிட— அப்பொறுப்பை நான் ஏற்று முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவேன்’ என்பது அவருடைய நியாயமாக இருந்தது.
ஆட்சியாளர் முத்தவக்கில், அஹ்மது இப்னு ஹம்பலுக்கு பொருளாதார உதவிகள் செய்ய முன்வந்த போது அதை அவர் மறுத்துவிட்டார். தான் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தேவையுடைய பிறருக்கு அதை அவர் பகிர்ந்தளித்திருக்க முடியும். ஆனால் அதைக்கூட செய்ய அவர் மறுத்துவிட்டார். மேலும் அரசு உதவி பெறக் கூடாது என்று தன் குடும்பத்தாரையும் வலியுறுத்தினார். தன் மகனோ அல்லது பேரனோ அரசு உதவி பெறுவதை அறிந்த போது, அவருடைய வீட்டில் உணவு உண்ணவும் மறுத்து விட்டார்.
அஹ்மது இப்னு ஹம்பல் கூர்மையான நினைவாற்றலை பெற்றிருந்தார். பொறுமை, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை மிக்கவராக இருந்தார். அவருக்கென்று ஒரு வசீகரத்தன்மை இருந்தது. ஒருமுறை தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்: “மக்கத்துப் பள்ளத்தாக்குகளுக்குச் சென்று அங்கேயே குடியமர்ந்து பொதுமக்களின் கண்களிலிருந்து மறைந்துவிட வேண்டுமென்று நான் விரும்புகிறேன்”. ஆக அவர் ‘பொதுமக்களின் அங்கீகாரத்தை’ பெறுவதில் ஆர்வம் கொள்ளவில்லை.
மேலும் அவர் பாசாங்கு செய்பவர்களை சிறுமைப்படுத்துபவராக இருந்தார். சிலவேளை அவர்களை ஏளனம் கூடச் செய்வார். ஒருமுறை சில மாணவர்கள் பகட்டாக நடந்து கொள்வதை அவர் உணர்ந்தார். அவர்கள் மை மற்றும் காகிதத்தை கையில் வைத்துக் கொண்டு சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். இன்று கல்லூரி பட்டச் சான்றிதழைப் பெற்றிருப்பதற்கு ஒப்பானது அது. காகிதமும் மையும் பெற்றிருந்தவர் அறிஞர் என்று அன்று அறியப்பட்டார். அவர்களிடம் சென்று “அறிவாளிகள் இப்படி பகட்டாக நடந்து கொள்வது நன்னடத்தையல்ல” என்று கூறினார்.
அன்று மக்கள் இறை நம்பிக்கை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். ‘இறை நம்பிக்கை அதிகரிக்கவோ குறையவோ செய்யுமா?’ ஒருவர் இறை நம்பிக்கை மட்டும் பெற்றிருந்து கடமையானவற்றை செய்யாமல் இருக்கலாமா?’ போன்ற கேள்விகள் எழுந்தன. இது குறித்து அஹ்மது இப்னு ஹம்பல் சுயமாக கருத்து கொண்டிருந்தார். அவர் சொன்னதாவது: “இறை நம்பிக்கை அதிகரித்து, குறையும் தன்மை உடையது. மேலும் வெறும் நம்பிக்கை என்றில்லாமல் உறுதியான செயல்பாடுகளும் இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அது நம்பிக்கையே அல்ல” என்றார். ஹதீஸ்களை பகுத்தறிவு ரீதியாக விரிவுபடுத்துவதைக் காட்டிலும் அவற்றை அறிவிப்பதைத்தான் அவர் வலியுறுத்தினார். அதாவது அவர் அல் மஃகூலை ஓரங்கட்டி அல் மன்கூலுக்கு முக்கியத்துவம் அளித்தார்.
அரசியல் விவகாரங்கள் என்று வரும்போது, இறைத்தூதருக்குப் பிறகு வந்த அபூபக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலீ ஆகியோர் கொண்ட ஆட்சியாளர் வரிசையை ஆதரித்தார். வலுக்கட்டாயமாக பதவிக்கு வந்த ஒரு ஆட்சியாளர், மக்கள் செல்வாக்கைப் பெற்றிருப்பின் அவர் சட்டப்பூர்வமானவரே என்றார். சமகால ஆட்சியாளர்களை எதிர்த்த நிலையிலேயே கிட்டத்தட்ட தன் வாழ்க்கை முழுவதையும் கழித்த அவர், அது ஒரு அநீதியான அரசாங்கம் என்ற அடிப்படையில் அதை எதிர்க்கவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
முஸ்னத் அஹ்மத் இப்னு ஹம்பல் என்றொரு முஸ்னத் (அறிவிப்பாளர்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட நபிமொழிகள்) அவர் பெயரில் உள்ளது. சிலர் இதை முஸ்னத் அல் இமாம் என்றும் இன்னும் சிலர் முஸ்னத் இப்னு ஹம்பல் என்றும் சொல்வர். இதுதான் அஹ்மது இப்னு ஹம்பல் தன் வாழ்நாள் முழுவதும் சேகரித்து, வரிசைப்படுத்தி, சரிபார்த்த தொகுப்பாகும். இதனால்தான் சில அறிஞர்கள் இவரை சட்டவியலாளர் என்று கருதாமல் முஹத்திஸ் —நபிமொழிகளை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுபவர்— என்று கருதுகின்றனர். இப்னு குதைபா, அல் தபரி ஆகியோர் இவ்வாறு கருதுகின்றனர்.
பிற சட்டவியலாளர்கள் வழக்கமாக,பேசுபொருள் அடிப்படையில் ஹதீஸ்களைத் தொகுத்து அதன்படி அத்தியாயங்களை அமைத்தனர். எடுத்துக்காட்டாக, திருக்குர்ஆன் விரிவுரை சம்பந்தமான நபிமொழிகள் அல்லது பொருளாதாரப் பரிவர்த்தனைகள் தொடர்பான அல்லது ஸகாத் தொடர்பான என்று அத்தியாங்களை அமைத்தனர். ஆனால் அஹ்மது இப்னு ஹம்பல் முஸ்னதில் அப்படிச்செய்யவில்லை. மாறாக இமாம் அலீ மூலமாக வந்த ஹதீஸ்கள், உஸ்மான் மூலமாக வந்த ஹதீஸ்கள், அபூ பக்கர், உமர் போன்றோர் மூலமாக வந்த ஹதீஸ்கள் என்ற அடிப்படையில் அத்தியாயங்களை அமைத்தார். இது அன்று அதிகம் பிரபலமடையாத வேறொரு முறையாக இருந்தது.
அஹ்மது இப்னு ஹம்பலின் சிந்தனைப் பள்ளியைப் பொருத்தவரை, அதில் ஒரே பிரச்சனைக்கு வெவ்வேறு அபிப்பிராயங்கள் சொல்லப்பட்டிருப்பதை காண முடியும். பெரும்பாலும் இது வர்த்தகம் தொடர்பான சட்டங்களில் காணப்படுகிறது. சான்றாக, ஒரு பொருள் உருவாகும் முன்னரே அதற்கான விலையை பேசலாமா? என்பது ஒரு பிரச்சனை. மூன்று மாதங்களில் கோதுமை அறுவடை செய்யப்படப் போகிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்காக இப்போதே நான் பணம் செலுத்தலாமா? இது அனுமதிக்கப்பட்டதா? சமீபத்தில் நடந்த பொருளாதார வீழ்ச்சி, ஊக வணிகத்தால் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம். விஷயம் மிக எளிமையானதாகத் தோன்றினாலும், இதிலும் சில அறிஞர்கள் இது கூடும் என்றும், வேறு சிலர் கூடாது என்றும் சொல்லியிருப்பதைக் காண முடியும். ஆனால் அஹ்மது இப்னு ஹம்பலைப் பொருத்தவரை அவரே இரு வேறு கருத்துகளை சொல்லியிருப்பார். ஆக இணக்கம் காண முடியாத எதிர் கருத்துகளைக் கொண்டதாக இவருடைய சட்டவியல் இருப்பதை சிலவேளை பார்க்கிறோம். இவை அவருடைய நூல்களிலேயே உள்ளன. “ஒரே கேள்வியோடு இருவர் வந்தால் அவர்களுக்கு ஒரே பதிலை என்னால் தர முடியாது. அக்கேள்வியின் பின்னணி அறிந்துதான் நான் பதிலளிப்பேன். ஒருகேள்விக்கு எப்போதுமே இதுதான் ஒரே பதில் என்று என்னால் சொல்ல முடியாது”. என்று இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் கூறினார். ஹம்பலி சிந்தனைப் பள்ளியில் வெவ்வேறு கருத்துகள் இடம் பெற்றிருப்பதற்கான நியாயமாக இதைக் கருதலாம்.
சன்னி இஜ்திஹாதின் பிற சட்டவியலாளர்களைப் போலல்லாமல், ‘இஜ்திஹாதின் வாயில் அடைக்கப்படவில்லை’ என்று ஹனாபிலாகள் சொல்கின்றனர். ‘ஒவ்வொரு தலைமுறையிலும் உலகின் ஒவ்வொரு முஸ்லிம் பகுதியிலும் சுயாதீனமான முழுமையான ஒரு முஜ்தஹித் இருக்க வேண்டும். இது கட்டாயம்!’ என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஹம்பலி சிந்தனைப் பள்ளி ஒருபோதும் பிரபலம் அடையவில்லை. அதற்கு பெருந்திரளான மக்கள் செல்வாக்கு ஒருகாலத்திலும் இருந்ததில்லை. வரலாறு முழுவதுமாகப் பார்த்தால் நஜ்து பகுதியில் —இன்றைய சவூதி அரேபியாவின் உட்பகுதி— மட்டுமே அது செல்வாக்கு பெற்று இருந்தது. ஒரு காலத்தில் அது பாக்தாதில் செழித்தோங்கியது. முஹம்மது இப்னு அப்துல் வஹாபின் பின்பற்றாளர்கள், அஹ்மது இப்னு ஹம்பலின் சட்டவியல் அல்லது இறையியல் நீட்சியாகக் கருதப்படுகின்றனர். இவர்களை சிலர் சலஃபி சிந்தனையாளர்கள் என்றும் அழைக்கின்றனர். இப்போது, இவர்களுக்கும் சவூது குடும்பத்துக்கும் இடையே உருவான ஏற்பாட்டுக்குப் பிறகு, ஹம்பலி சிந்தனைப் பள்ளிக்கு ஒரு தேசிய அடையாளம் கிடைத்துள்ளது. இப்போது அத்தேசம், அடிப்படையில் தன்னை ஹம்பலி என்று கூறிக்கொள்கிறது.
ஹி. 323 வாக்கில் ஹம்பலிகள் அதிகார உச்சத்தை அடைந்தனர். முத்தவக்கில் காலத்தில் அப்பாஸிகளின் அதிகாரப்பூர்வ கொள்கை மாறிய போது, அவர்கள் அதிகார நிலைக்கு வந்தனர். பாக்தாதில் அவர்களுடைய கை ஓங்கி இருந்த சமயம், அவர்கள் வெளிப்படுத்திய மனப்பாங்கை சிலர் அருவருக்கத்தக்கது என்று வர்ணிக்கின்றனர். பாக்தாதில் திராட்ச ரசத்துக்கும் (வைன்) காடிக்கும் (வினிகர்) இடையே உள்ள வேறுபாடு குறித்த சர்ச்சை நிலையானது. ஆனால் ஹம்பலிகள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து அங்கு திராட்ச ரசம் இருப்பதைக் கண்டால் அதை வெளியே எடுத்து வீசுவர். பெண் பாடகர்களைக் கண்டால் அவர்களை வசைபாடுவது, கசையால் அடிப்பது; புல்லாங்குழல், தம்பூரா போன்ற இசைக் கருவிகளைக் கண்டால் அவற்றை உடைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஆண்களோடு சந்தைக்கு வரும் பெண்களையும் குழந்தைகளையும் கேள்விக்குள்ளாக்குவர். அவர்கள் அளிக்கும் பதில் இவர்களுக்கு திருப்தி இல்லாத பட்சத்தில், அவர்களை ஒழுக்கப்படுத்துவது என்ற பெயரில் தன்னிச்சையாக அடிப்பது, அல்லது எங்காவது இருக்கும் காவலர்களிடம் பிடித்துக் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இதை அவர்கள் —இன்றும் கூட— நன்மையை ஏவி தீமையை தடுத்தல் (ஹயாத்து அல் அம்ரு அல் மரூஃப் வ நஹீ அனில் முன்கர்) என்று அழைத்தனர். இவ்வாறு, அமைதியைக் குலைக்கும் அதிகார நடவடிக்கைகளை மக்கள் மீது ஏவியதற்காக அவர்கள் பெயர் பெற்றனர். இதனால்தான் இத்தகைய சர்வாதிகார மனப்பாங்கை வெளிப்படுத்தியவர்களிடமிருந்து பலர் விலகி இருக்க விரும்பினர் என்று கருதுகிறேன்.இன்று சவூதி அரசாங்கம் பெருமளவு செல்வத்தைக் குவித்து வைத்துள்ளது. உலகம் முழுவதும் பல பகுதிகளில் இத்தகைய சிந்தனையை அவர்களால் நிதியுதவி அளித்து பரப்ப முடிகிறது. எனவே எங்கெல்லாம் இந்நிதி அளிக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் இம்மாதிரியான விஷயங்களின் எச்சங்களைக் காண முடியும்.
♣ ♣ ♣ ♣ ♣
உரையின் இடையிலும் இறுதியிலும் இமாம் அல் ஆஸியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றிற்கு அவர் அளித்த பதில்களும் பின்வருமாறு:
கேள்வி: ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ என்றும் ‘உம்முல் கிதாப்’ என்றும் சொல்லப்படுகிறதே. இதிலிருந்துதான் குர்ஆன் இறங்கியது என்றும் சொல்லப்படுகிறது. எனவே நீங்கள் சொல்லும் ‘கருவிகளை’ சொற்களையும் அமைப்பையும் கொண்ட குர்ஆன் என்றும் அதன் ‘அர்த்தத்தை’ லவ்ஹுல் மஹ்ஃபூல்என்றும் புரிந்து கொள்ளலாமா?
பதில்: நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் சொற்களைக் கொண்டு ஒன்றின் முழு அர்த்தத்தை வெளிப்படுத்த முடியாத நிலையை இங்குதான் எதிர்கொள்கிறோம். மனிதப் புரிதலில் முழுமையாக அடங்காத சில கருதுகோள்கள், சில வார்த்தைகள் குர்ஆனில் இன்றும் உள்ளன. ‘அல் லவ்ஹுல் மஹ்ஃபூல்’ என்பதை சிலர் ‘பாதுகாக்கப்பட்ட ஏடு’ என்கின்றனர். இதன் அசல் அர்த்தம்தான் என்ன? லவ்ஹுல் மஹ்ஃபூலை புரிந்து கொள்வதற்கு சிலர் மேற்கொள்ளும் சொந்த முயற்சியை அசல் லவ்ஹுல் மஹ்ஃபூல் மீது அவர்கள் திணிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களுடைய கருத்துகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. இது எப்படி இருக்கிறது என்றால், ஒன்றை வாசித்துவிட்டு அதன் பொருள் இதுதான் என்று—மக்களின் பொதுப் புத்தியில் பொருந்தாத— ஒரு கற்பிதத்தை ஏற்படுத்திக் கொள்வது போல இருக்கிறது. பொதுப்புத்தி ஏற்றுக்கொள்ளும் அர்த்தத்தைத்தான் பொதுவான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வர். சிலர் சொல்லும் வியாக்கியானங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் அது ‘மற்றவர்கள் அறிய முடியாததை இவர்கள் அறிந்துள்ளார்கள்’ என்ற அளவில் மட்டுமே சரியாக இருக்க முடியும். பிறர் அறிய முடியாததை இவர்கள் அறிந்துள்ளார்கள் என்பதாலேயே அது முழுமுதல் உண்மையாகி விடாது. அத்தகைய அறிவிலிருந்து பிறர் விரிவாக்கம் செய்ய முடியாது.
கேள்வி: மூலப் பிரச்சனையான ஈசா (அலை) குறித்த கேள்விக்கு இவ்விரு தரப்பினரும் என்ன பதில் அளித்தனர்?
பதில்: ஈசா படைக்கப்பட்டார் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். பிரச்சனை என்னவென்றால், அவர்கள் முன் வைத்த வாதங்களில் ஈசாவின் நித்தியத் தன்மை குறித்த பிரச்சனை மறைமுகமாக திணிக்கப்பட்டது. ஈசா ஒரு மனிதர் என்றும் ஒவ்வொரு மனிதரும் இறப்பைச் சந்தித்தாக வேண்டும் என்றும் குர்ஆன் மிகத் தெளிவாகச் சொல்கிறது. மூலப் பிரச்சனையைப் பார்த்தால் இருதரப்பினரும் இணக்கமாகத்தான் இருந்தனர். முஃதசிலாக்களோ அஷ்அரியாக்களோ ஈசா (அலை) குறித்து மாற்றுக் கருத்து கொண்டிருக்கவில்லை. ஆக இப்பிரச்சனை முழுவதும் ஒரு தத்துவ ரீதியிலான விவாதமாக மாறிவிட்டது. ஆனால் அது எப்படி வளர்ந்து என்னவாக மாறிவிட்டது என்று பாருங்கள்! முஸ்லிம்கள் ஒன்றுபட்டுச் சிந்தித்த போது, பிரச்சனை எதுவும் இருக்கவில்லை. ஆனால் அந்தப் பாதிரியார் போன்ற ஒருவர் கேள்வி எழுப்பி, அதற்கு நாம் பதில் சொல்லப் போய் நமக்குள்ளாகவே இருந்த பலவீனங்கள், நமக்கு எதிராகவே செயல்படத் துவங்கின.
கேள்வி: இன்று ஃபஹத் அல்லது அப்துல்லாஹ் போன்ற ஆட்சியாளர்கள் (அன்றைய சவூதி மன்னர்கள்) தத்துவ விவாதங்கள் எதிலும் ஈடுபடுவதில்லையே. அன்றைய ஆட்சியாளர்கள் மட்டும் ஏன் இத்தகைய விவாதங்களில் அதிக ஆர்வம் காட்டினர்?
பதில்: அன்றைய மற்றும் இன்றைய ஆட்சியாளர்களுக்கிடையே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. குர்ஆன் படைக்கப்பட்டது என்ற கருத்தை ஆதரித்த மஃமூனைப் பாருங்கள். அவர் போர்க்களங்களுக்குச் சென்றார்; படைகளோடு இருந்தார். அப்துல்லாஹ் அல்லது இன்றைய பிற மன்னர்களை போர்க்களத்தில் பார்க்க முடியுமா? இவர்கள் இருவரும் வெவ்வேறு வகையினர்.அப்துல்லாஹ் போன்றோரையும் அல் மஃமூன் போன்றோரையும் யாரும் குழப்பிக்கொள்ளக் கூடாது; அந்த அளவுக்கு இன்று நெறிபிறழ்வு மிகத் தீவிரமாகிவிட்டது. எனினும் அடிப்படையில் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். விஷயம் என்னவென்றால் ஒருவர் நெறிபிறழ்வில் முற்றிலும் மூழ்கிவிட்டார்; மற்றொருவர் அங்கும் இங்குமாக இருப்பதால் அவரால் தன்னை மறைத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள், மூளை மழுங்கியவர்கள். அப்துல்லாஹ் போன்றோருக்கு சுயமாக சிந்தனைகள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?! உங்களுக்கு அரபு மொழி தெரிந்து, அவர்களின் பேச்சுக்களை நீங்கள் கேட்க வேண்டுமே! அதுநாட்டுப் புறத்தவர்கள் பேசுவது போல இருக்கும். அதில் விஷயம் எதுவும் இருக்காது. அவர்களால் சுயமாகப் பேச முடியாது; எழுதி வைத்துத்தான் பேசுவார்கள். இங்குள்ள ஜார்ஜ் புஷ்ஷும் அப்படித்தான். இவர்களில், தன் எண்ணங்களை சுயமாகச் சிந்தித்து பேசுபவர் ஒருவர் இருக்கிறார் எனில் அது கடாஃபி மட்டுமே. ஆனால் அவர் பேச ஆரம்பித்தால் வேறு திசையில் சென்று விடுகிறார்.
கேள்வி: சமகால ஷியாக்கள் குறித்து அஹ்மது இப்னு ஹம்பல் ஏதாவது கூறியுள்ளாரா?
பதில்: ஷியாக்கள் குறித்து அவர் கூறியதாக நான் எந்தத் தகவலையும் பார்க்கவில்லை. அதே நேரம், அவர் உறுதியாக எதிர்த்து நின்ற முஃதசிலாக்கள், ஷியா ஆதரவாளர்கள் என்று மேம்போக்காகக் கருதப்பட்டனர் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நபிமொழிகளை எழுதுவதில்தான் அவர் ஆர்வம் காட்டினார். அவர் எழுதியிருந்தால் மட்டுமே இது குறித்த தகவல்கள் நமக்குக் கிடைக்கும். அவருக்கு சாலிஹ், அப்துல்லாஹ் என்று இரு மகன்கள் இருந்தனர். தந்தை இறந்த பிறகு, இவர்கள்தான் ஹதீஸ் குறித்த அவருடைய விரிவான எழுத்துகளை சேகரித்து, தொகுத்து, வினியோகித்து பிரபலப்படுத்தினர். அவர் இதை விரும்பியிருக்க மாட்டார் என்று அறிந்தும், மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் இதைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். இவை எதிலும் ஷியாக்கள் குறித்து எதையும் நான் பார்க்கவில்லை.
கேள்வி: தாலிபான்கள் தங்களை ஹம்பலிகள் என்று கருதுகிறார்களா?
பதில்: இல்லை. சட்டவியல் அடிப்படையில் கறாராகப் பார்த்தால் அவர்கள் ஹனஃபிகள் ஆவர். சோவியத் ஆக்கிரமிப்பின் போது அவர்கள் மீது சவூதி அரேபியர்களின் செல்வாக்கு மேலோங்கியது. ஆப்கானியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதும், அங்கு அரபுப் போராளிகள் வருவதுமாக இருந்த சமயத்தில் சலஃபி சிந்தனைகளுக்கு அவர்கள் ஆட்பட்டனர். இதில் வெகு சிலர் மட்டும் —சலஃபி சிந்தனையை ஏற்றுக் கொண்ட—‘சவூதி ஆதரவாளர்கள்’ என்று அறியப்பட்டனர். அதில் சய்யாஃப் என்பவரும் ஒருவர். பொதுவாக ஆப்கானிய மக்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் மீது ஹம்பலி தாக்கம் இல்லை.
கேள்வி: அஹ்மது இப்னு ஹம்பல் மரணித்து கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் ஆகிவிட்டது. அப்படியிருந்தும் சன்னி வரலாற்றில் ஏன் அவர் மட்டுமே இறுதிப் பெரும் அறிஞராகக் கருதப்படுகிறார்?
பதில்: ஆம். இக் கேள்வி பதிலளிக்கப்படாமலேயே உள்ளது. சன்னிகள் மத்தியில் பல சட்டவியலாளர்கள் இருந்த போதிலும், இந்த நான்கு பேர் மட்டும் மங்காமல் நீடித்து வாழ்வது ஏன்? இதற்குக் காரணம் பின்வருபவையாக இருக்கலாம் எனக் கருதுகிறேன். முதலாவது, ஆரம்ப காலத்தில் அவர்கள் அடைந்த புகழ் அடுத்தடுத்த தலைமுறைகளிலும் தொடர்ந்து நீடித்தது. சான்றாக, ஆரம்பகாலத்தில் அபூ ஹனீஃபா இருந்த போது, பலர் அவரோடு ஒத்திசைந்து அவரையே தங்களுடைய அறிஞராக, அறிவாதாரமாக ஏற்றுக் கொண்டனர். நாளடைவில் இது மேலும் வளர்ந்தது. அடுத்து, அவர்கள் அரசாங்கத்தோடு நடந்து கொண்ட விதமும் இதற்குக் காரணம் எனக் கருதுகிறேன். அபூ ஹனீஃபா விஷயத்தில், அவர் எந்த விதத்திலும் அரசாங்கத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவருடைய மாணவர்கள் அப்படியல்ல. அவருடைய முக்கிய மாணவரான அபூ யூசுஃப், அப்பாஸிகள் காலத்தில் நீதித் துறையின் (இன்றைய மொழியில் சொல்கிறேன்) தலைவர் ஆனார். ஆக அவர்கள் அரசாங்க உறவுகளைக் கையாண்ட விதமும், மக்கள் மத்தியில் அவர்களுடைய கருத்துகள் பரவியதும், இச் சிந்தனைப் பள்ளிகள் அழியாமல் வாழ வழிவகுத்தன.
ஹம்பலி சிந்தனைப் பள்ளி விஷயத்திலும் இதைச் சொல்ல முடியும். அநேகமாக ஹம்பலி சிந்தனைப் பள்ளிதான் உள்ளதிலேயே பலவீனமான சிந்தனைப் பள்ளி எனச் சொல்லலாம். ஏனெனில் அது ஆரம்பத்தில் பிரசித்தி பெறவே இல்லை. அதற்கென ஒரு மக்கள் திரள் உருவாகவில்லை. மேலும் அஹ்மது இப்னு ஹம்பல் ஹதீஸ் அறிஞரா அல்லது சட்டவியலாளரா என்ற குழப்பமும் இருந்தது. ஆனால் பிற சிந்தனைப் பள்ளிகள் பிரபலம் அடைந்தன. எகிப்து மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் ஷாஃபியி-ம், அந்தலூஸ் மற்றும் வட ஆப்பிரிக்காவில் மாலிக்கும் பிரசித்தி பெற்றனர். பல மக்கள் ஷாஃபிகளாகவும், ஹனஃபிகளாகவும், மாலிகிகளாகவும் மாறினர். அரசாங்கத்தோடு இவர்கள் மேற்கொண்ட கவனமான அணுகுமுறையும் இவர்களுக்கு உதவியது. ஆனால் அரசங்கத்தோடு மோதல் போக்கில் ஈடுபட்ட பிற சிந்தனைப் பள்ளிகள், சிக்கல்களை சந்தித்தன. எனவே அவை குறைவான பின்பற்றாளர்களையே ஈர்த்தன. அதனால் அவை ‘மைய நீரோட்ட’ சிந்தனைப் பள்ளிகளாக கருதப்படவில்லை.
கேள்வி: இன்றைய சலஃபிகளைப் போல ஹம்பலின் சட்டவியலும் கறாரானதாக இருந்ததா?
பதில்: இல்லை. சலஃபிகள்தான் அஹ்மது இப்னு ஹம்பலின் இடத்தில் நின்று பேசுவதாக, அவருடைய கொள்கைகளுக்கு விளக்கம் அளிப்பதாக, அவரை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறி அத்தகைய ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டனர். அவர் சொன்னது ஒன்றுதான்: “குர்ஆன் மற்றும் ஹதீசை ஆதாரமாகப் பாருங்கள்”. குர்ஆனையும் ஹதீசையும் ஆதாரமாக நோக்கினால், இன்று நாம் பார்க்கும் நிலைமை இருக்காது. மேலும் அவர் குர்ஆனையும் ஹதீசையும் மட்டுமே எழுத வலியுறுத்தினார். ஆனால் அவர் இறந்த பிறகு, இதுபற்றி எதுவும் அவர் சொல்லாதது போல மற்றதனைத்தையும் எழுதிவிட்டனர்.
எனினும் நான்கு சிந்தனைப் பள்ளிகளுள் இதுதான் கறார் தன்மை உடையது என்று சொல்லலாம். அவரே அப்படித்தான் இருந்தார். ஒருமுறை அவருக்கு ஆரஞ்சுப் பழம் கொடுக்கப்பட்ட போது அதை உண்ண மறுத்துவிட்டார். “இறைத்தூதர் உண்ணாத ஒரு பழத்தை நான் எப்படி உண்ண முடியும்?” என்றார். இது அபத்தமோ இல்லையோ. அவருடைய உளவியல் இப்படித்தான் இருந்தது. இதன் மூலம், தன்னால் இயன்ற அளவு இறைத்தூதருக்கு மரியாதை செலுத்துவதாகவும் அவரை பின்பற்றுவதாகவும் நினைத்தார். அவர் மற்றவர்களைக் காட்டிலும் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தார்.
கேள்வி: ஹம்பலிகள் மக்களை துன்புறுத்தினர் என்று பார்த்தோம். இப்படிச் செய்வதற்கு இமாம் ஹம்பலின் முஸ்னதில் அங்கீகாரம் இருந்ததா?
பதில்: இல்லை. நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்ற பேரில்தான் அவர்கள் இதைச் செய்தனர். இன்றும் இது உள்ளது. இதுதான் நன்மையை ஏவி தீமையை தடுப்பதற்கான வழிமுறை என்று அவர்கள் நினைக்கின்றனர்.
கேள்வி: மற்ற சிந்தனைப் பள்ளிகளைக் காட்டிலும் ஹம்பலி சிந்தனைப் பள்ளியில் இந்த மாற்றம் எப்படி நடந்தது?
பதில்: இச்சிந்தனைப் பள்ளியின் மாற்றத்துக்கு பிற்காலத்தில் சிலர் பங்களிப்பு செய்தனர். இஸ் இப்னு அப்து சலாம், இப்னு தைமியா மற்றும் முஹம்மது இப்னு அப்துல் வஹாப் ஆகியோர் இதில் அடங்குவர். அவர்கள் தங்களை ஹம்பலின் பின்பற்றாளர்கள் என்றும் அவருடைய நீட்சி என்றும் கருதுகின்றனர். இவர்களனைவரும் சேர்ந்து சில சகிப்புத்தன்மை குன்றிய மனப்பாங்கை கொண்டுவந்தனர். ஆனால் அஹ்மது இப்னு ஹம்பல் காலத்தில் யாரும் முஸ்லிம்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை.
அரேபியாவில் மக்கள் கற்களையும் பாறைகளையும் வணங்குவதை இப்னு அப்துல் வஹாப் கண்டார் என்று சில தகவல்களை நான் பார்த்தேன். இச்செய்தியை சந்தேகக் கண் கொண்டே நான் பார்க்கிறேன். ஏனெனில் முஸ்லிம் உலகம் முழுவதும் பயணம் செய்தாலும் கூட இம்மாதிரியான விஷயங்களை வணங்கும் முஸ்லிம்களை எங்குமே காண முடியாது. நீங்கள் யாராவது இப்படி நடப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கேள்வி: ஷியாக்கள் தொழும் போது சிறு கல்லை முன்னால் வைத்துத் தொழுவதைக் கண்டு அவர் இவ்வாறு கருதியிருக்கக் கூடும் அல்லவா?!
பதில்: சரி. அப்படியே வைத்துக் கொள்வோம். அவ்வாறு ஷியாக்கள் தொழுவதைப் பார்க்கும் ஒருவர், அது பற்றி ஒரு முடிவு எடுக்கும் முன், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இக்கல்லை வணங்குகிறீர்களா?” என்று கேட்பதுதானே இயல்பறிவாக இருக்க முடியும்? அதுவல்லாமல், அதைப் பார்த்தவுடன் “அவர் கல்லை வணங்குகிறார், அவரை கொன்று விடுவோம்” என்று சொல்வது என்ன மாதிரியான அணுகுமுறை.
கேள்வி: இறைத்தூதர் காலத்தில் மதீனாவில் அரசாங்கம் உருவான பின், போர்களில் யூத ஆண்கள் மொத்தமாகக் கொல்லப்பட்டு பெண்கள் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர். இஸ்லாத்தின் ஒளியில் இதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
பதில்: நம் வரலாறு பல குறிப்பான நிகழ்வுகளையும் அவற்றுக்குரிய விளக்கங்களையும் கொண்டுள்ளது. எனவே நம் கேள்விகளும் குறிப்பாக இருக்க வேண்டும். பனீ குறைளா எனும் யூதப் பிரிவு குறித்து சொல்கிறீர்கள். இவர்கள்தான் மதீனாவில் இருந்த கடைசி யூதப் பிரிவினர். அவர்கள் தேசவிரோத குற்றம் இழைத்தனர். அது போர்ச்சூழலாக இருந்தது. மேலும் அது சாதாரண போர்அல்ல. முஸ்லிம்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிய போர்! அரேபியாவின் அதிகார வர்க்கம் முழுவதும் மொத்தமாகச் சேர்ந்து மதீனாவில் முஸ்லிம்களை முற்றுகைக்கு உள்ளாக்கியது. முஸ்லிம்களுக்கு வாழ்வா சாவா என்ற சூழ்நிலை உருவாகியது.மதீனாவில் வாழ்ந்து வந்த இந்த யூதர்கள், ஆரம்பத்தில் இறைத்தூதர் மதீனாவுக்கு வந்த போது ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அதில், புதிய சமூகம் மற்றும் தேசத்தின் அங்கமாக இருப்பதாகவும் மற்ற எல்லோரையும் போலவே விசுவாசத்தோடு ஆதரவளிப்பதாகவும் வாக்களித்து கையொப்பமிட்டனர். இப்படிச் செய்ய யாரும் அவர்களை நிர்பந்திக்கவில்லை. அவர்களாக முன்வந்து இவ்வாறு கையொப்பமிட்டனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பிறகு முஸ்லிம்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிய ஒரு போர் வந்தது. அதில் இணை வைப்பவர்கள் வெற்றி பெற்றால் முஸ்லிம்களின் முடிவு உறுதி ஆகியிருக்கும். அத்தகைய ஒரு சூழலில் அவர்கள் கட்சி மாறிவிட்டனர். எதிரிகளோடு சேர்ந்து கொண்டனர். இப்படிபட்ட ஒரு சூழலில் எதிரிகளோடு சேர்ந்த்தால், இதற்கான விலை உயிராகத்தான் இருக்க முடியும். அதைத்தான் அவர்கள் அனுபவித்தனர். எனினும் இங்கு மொத்த சமூகமும் தண்டிக்கப் படவில்லை. அவர்களில் போர் வலிமை பெற்ற, எதிரிகளோடு கைகோர்த்த ஆண்கள் மட்டும் தண்டிக்கப்பட்டனர்.
எனவே இங்கு கேள்வி என்னவென்றால், ‘தேசத் துரோகம் இழைத்தோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் இஸ்லாத்தில் உண்டா?’ என்பதுதான். இதற்கு, ‘ஆம்’ என்பதே பதில். இது நாமாக உருவாக்கிக் கொண்ட சட்டம் அல்ல. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்காக விதித்தது இது. இதுதான் அவர்கள் விஷயத்தில் நடந்தது. இது அவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.
யாருக்கும் இல்லாமல் இவர்களுக்கு மட்டும்தான் இந்தச் சட்டம் விதிக்கப்பட்டது என்பதல்ல. யாரும் வேண்டுமென்றே அவர்களை தேர்ந்தெடுத்து இவ்வாறு செய்யவில்லை. அவர்கள் தாங்களாகவே இத்தகைய சூழலில் மாட்டிக் கொண்டனர். அதற்கான விலையை கொடுத்தனர். இதற்கு முன்னர், அகழ் (ஃகந்தக்) போரின் உச்சத்தின் போது இணை வைப்பவர்களும் பிற சில யூத குழுக்களும் குறைளா குழுவை அணுகினர். குறைளாக்களோ, “வேண்டாம். இறைத்தூதருக்கு எதிரான இத்தகைய துரோகத்தில் நாங்கள் பங்கெடுக்க விரும்பவில்லை. எங்களை விட்டுவிடுங்கள். தயவு செய்து வேண்டாம்” என்பது போல பேசினர். ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் அனைவரும் மீண்டும் பல முறை கலந்து பேசி, பிறகு இறைத்தூதருக்கு எதிராக திரும்பிவிட்டனர். இணைவைப்பவர்கள் சென்ற பிறகு, போர் தணிந்த பிறகு, அவர்களுக்கு உரிய தண்டனை நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம்களாக மாறும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை நிராகரித்துவிட்டனர். இத்தனைக்கும் அவர்கள்உலக வாழ்க்கையை பெரிதும் விரும்புபவர்கள் . இந்தப் பின்னணியில்தான் இந்த விஷயத்தை அணுக வேண்டும்.
கேள்வி: பனு குறைளா கோத்திர ஆண்கள் கொல்லப்பட்ட பிறகு, அவர்களுடைய பெண்கள் அடிமைப் படுத்தப்பட்டனரா. அப்படியெனில் இஸ்லாத்தின் ஒளியில் இதை எப்படி புரிந்துகொள்வது?
பதில்: பனூ குறைளா கோத்திர ஆண்கள் கொல்லப்பட்டபிறகு அங்கேயே —மதீனாவில்— வாழ விரும்பிய பிற நபர்களை பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்தது. ஆனால் அக்கோத்திரப் பெண்கள் அடிமைப் படுத்தப்படவில்லை. இஸ்லாத்தில் அடிமைத்தனம் கிடையாது. அவர்கள் இஸ்லாமிய சமூகத்தோடு கலந்துவிடலாம் அல்லது கைபர் போன்ற பிற பகுதிகளுக்குச் செல்லலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. இங்கே ‘கலப்பு’ என்று சொல்லும் போது அது ‘ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்’ என்பதான ஒரு ஏற்பாடாக இருந்தது. அங்கு அனாதை இல்லங்கள் அல்லது பெண்களை சந்தைக்கு விபச்சாரிகளாக அனுப்புவது போன்று எதுவும் நடக்கவில்லை. நம் சமூகம் தூய சமூகம் ஆகும். சமூகம் தூய்மையாக இருக்க வேண்டுமெனில் அப்பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ‘அவர்களை குடும்ப உறுப்பினர் போல நடத்த வேண்டும்’ என்பதை விட வேறு எது கண்ணியமாக இருக்க முடியும்?
‘குடும்ப உறுப்பினரைப் போல’ என்றால் அவர்களை திருமணம் செய்ய வேண்டும் என்பது பொருள் அல்ல. எனினும் அப்பெண்கள் முஸ்லிம்களை திருமணம் செய்ய விரும்பினால் செய்யலாம். யாரும் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. திருமணத்தில் நிர்பந்தம் இல்லை. ஆனால் நம் குடும்பத்தை கவனித்துக் கொள்வது போல அவர்களையும் கவனிக்க வேண்டும். இது ஒரு பெருமதிப்பு. அனாதைகளை ஒரு குடும்பத்தில் இணைத்து அவர்களை கவனித்துக் கொள்வது போலத்தான் இதுவும்.
கேள்வி: இவர்களைத்தான் ‘வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்’ என்று சொல்லப்பட்டுள்ளதா?
பதில்: இல்லை, இல்லை! ‘வலக்கரம் சொந்தமாக்கிக் கொள்ளப்பட்டது’ என்பதற்குள் போக வேண்டாம். இவை மயக்கம் நிறைந்த சொற்கள். ‘மா மலகத் அய்மானுக்கும்’ என்பதற்கு ‘வலக்கரம் சொந்தமாக்கிக் கொள்ளப்பட்டது’ என்பது பொருள் ஆகும். இம் மொழிபெயர்ப்பில் இதன் முழு அர்த்தமும் வெளிப்படுவதில்லை. வலக்கரம் சொந்தமாக்கப்பட்டது என்றால் என்ன? வலக்கரம் என்பது இஸ்லாத்தில் கண்ணியத்தைக் குறிக்கும் சொல் ஆகும். இதன் பொருள், அவர்களுக்கு அன்பும் பாசமும் பொருந்திய சூழலை ஏற்படுத்துவதாகும்.
கேள்வி: இந்த நவீன காலத்திலும் இந்த ‘வலக்கரம் சொந்தமாக்கப்பட்டவர்கள்’ உள்ளனரா?
பதில்: இல்லை. இப்போது எதுவும் அப்படி இல்லை. நாம் இஸ்லாமிய வாழ்க்கை முறையை மீண்டும் கட்டமைக்கும் போது; இறைத்தூதரும் முஸ்லிம்களும் மதீனாவில் பெற்றிருந்த சமூகத்தைப் போல ஒரு இஸ்லாமிய சமூகத்தையும் அரசாங்கத்தையும் நாம் அடையும் போது, இந்நிகழ்வுகள் மீண்டும் நடைபெறும். அப்போது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வழிகாட்டியபடி நாம் அவற்றை அணுகுவோம். மதீனாவில் இறைத்தூதரும் முஸ்லிம்களும் வலிந்து போருக்குச் செல்லவில்லை. பிற மக்கள்தான் இவர்களோடு போர் தொடுத்தனர். அப்போதுதான் முஸ்லிம்கள் அவர்களை எதிர்த்து போர் செய்தனர்.
போர் சூழல் என்பது —இஸ்லாமிய மற்றும் தெய்வீக வழிகாட்டுதல் இல்லாதபட்சத்தில்— நிச்சயமாக மோசமான நிகழ்வுகள் நடைபெறும் ஒன்றாகும். இன்றைய உலகில் போரினால் ஏற்படும் விளைவுகளைப் பாருங்கள். ஆனால் அத்தகைய சூழலில் இஸ்லாத்தின் ஈடுபாடு கலக்கும் போது, அந்த மோசமான விளைவுகள் குறைந்து விடுகின்றன அல்லது அறவே தடுக்கப்படுகின்றன. நாம் பிற மனிதர்களை இயன்ற அளவு கருணை மற்றும் சகிப்புத்தன்மையோடு அணுகுவோம். ஒரு அதிகார வர்க்கம் நம்மோடு போர் புரிந்து தோற்றுவிட்டால் அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். இது போர் சூழல்! வாழ்வா சாவா என்ற நிலை! நம்மை தாக்கியதற்காக அவர்கள் விலை கொடுத்தாக வேண்டும். எப்படி நம்மைக் கொன்றார்களோ அதே போல அவர்களின் உயிரும் பறிக்கப்படும். ஆனால் போரில் ஈடுபடாதவர்கள் இயன்ற அளவு சிறப்பான முறையில் நடத்தப்படுவர். இதனால் பிரச்சனைகள் மேலும் வளர்வதும் சமூகச் சீர்கேடு மேலும் மோசமாவதும் தவிர்க்கப்படும்.
எனவே இப்பிரச்சனை ‘குடும்பம்’ என்ற அமைப்பினால் தீர்க்கப்படுகிறது. இந்த அனாதைகளையும் விதவைகளையும் பிற குடும்பங்கள் பொறுப்பேற்கும் நிலை ஆகிறது. அவர்கள் அனாதைகளைப் போலவும் விதவைகளைப் போலவும்தான் நடத்தப்படுவர். இதன் பொருள் அவர்களை வற்புறுத்தி திருமணம் செய்வதோ, அடிமைப் படுத்துவதோ அல்லது வைப்பாட்டிகளாக நடத்துவதோ அல்ல. இவையெல்லம் இவ்விஷயத்தில் வீசப்படும் மோசமான சொல்லாடல்களே தவிர வேறொன்றும் இல்லை.
கேள்வி: அறிவுசார் விஷயங்களில் இந்த ஆட்சியாளர்கள் ஏன் கருத்து பகிர்ந்தனர்? அதற்கு என்ன தேவை இருந்தது? அவர்கள் அறிஞர்கள் அல்லவே! மேலும் அவர்கள் சில சிந்தனைப் பள்ளிகளை உயர்த்திப் பிடித்து வேறு சிலதை ஏன் வெறுக்க வேண்டும்?
பதில்: மஃமூனைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர் தன்னை ஒரு அறிஞராகவே கருதினார். மற்றவர்களைப் போல சாதாரண ஆட்சியாளராக அவர் தன்னை கருதவில்லை.
இரண்டாம் கேள்விக்கு, உமவி மற்றும் அப்பாஸி ஆட்சியாளர்கள் அரசியல் எதிர்ப்பை சந்தித்தனர். எனவே தங்களுக்கு பாதகமில்லாத சில சிந்தனைப் பள்ளிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். அதே சமயம் தங்களுக்குப் பாதகமான வேறு சில சிந்தனைப் பள்ளிகளை ஒடுக்க முற்பட்டனர். ஏனெனில் இந்த சிந்தனைப் பள்ளிகளால்—வாய்ப்பு கிடைத்தால்— ஆட்சியை மாற்றவும் முடியும். எனவே பதவி அதிகாரங்களில் ஆர்வம் கொண்ட அறிஞர்களோடு ஒருவித சமரசத்தை ஏற்படுத்துவது அவர்களுடைய நலனுக்கும் உகந்ததாக இருந்தது. அதுதான் நடந்ததும் கூட.
எனினும் இச்சிந்தனைப் பள்ளிகளை தோற்றுவித்தவர்கள் ஆட்சியாளர்களோடு எவ்வித சமரசமும் செய்யவிலை என்று பார்க்கிறோம். ஆனால் அவர்களுடைய பின்பற்றாளர்கள் “பதவி கிடைத்தால் அதை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு? மற்றவர்களுக்கு நான் பரவாயில்லை” என்ற ரீதியில் தங்களுக்குள்ளாகவே ஒரு வாதத்தைக் கற்பித்துக் கொண்டனர். இவர்கள் பதவி ஏற்காமல் இருந்திருத்தால், பல குடிமக்கள், முஸ்லிம்கள், அவ்வாட்சியில் நடக்கும் பிறழ்வுகளை கவனிக்கத் துவங்கியிருப்பர். ஆனால் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதை பயன்படுத்தி அவ்வாட்சியாளர்கள் மக்களை மழுங்கடித்துவிட்டனர். இதை அறியாமல் அவ்வறிஞர்களும் தமக்கு வழங்கப்பட்ட பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.
இன்று நிலவும் வெவ்வேறு ஆட்சிகள், அரச குலங்கள், முடியாட்சிகள் மற்றும் நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் பலதரப்பட்ட அரசாங்கங்களை —57 இஸ்லாமிய நாடுகள் இன்று உள்ளன— இனியும் யாரும் இஸ்லாத்தின் பேரால் ஆதரிக்க முடியாது என்ற அளவுக்கு இந்த அரசியல் பிறழ்வு, காலங்கள் செல்லச் செல்ல தெளிவாகிவிட்டது. சான்றாக, இன்று சவூதி அரேபியாவில் இருக்கும் அரசாங்கத்தை இப்னு ஹம்பல் அல்லது வேறு ஏதாவது அறிஞரின் பேரால் யாரும் ஆதரிக்க முடியுமா என்ன?
எனவேதான் இத்தகைய விஷயங்கள் பொதுவெளியில் விவாதிக்கப்படுவது இல்லை. இன்றை தொலைக்காட்சி விவாதங்களில், செய்தித்தாள்களில் இது பற்றிய விவாதங்களை காணவே முடியாது. நிலமை அந்த அளவுக்கு அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இவ்வரலாறுகளைத் தொகுத்து இவற்றின் பின்னணியில் சிந்தனைகளை ஒருங்கிணைக்கும் முஸ்லிம்கள்தான் நம்மிடையே இல்லை. மக்களிடம் உண்மைகளை எடுத்துரைத்து பொதுக் கருத்தை உருவாக்கும் ஒரு சி.என்.என் அல்லது பி.பி.சி போன்ற ஊடகங்களும் நம்மிடம் இல்லை. இவற்றை நாம் இங்கு பேசி கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்றால், இதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கேள்வி: சவூதிகள் ஹம்பலிகளாக இருப்பது வரலாற்றில் தானாக நடந்த நிகழ்வா? அல்லது அதிகாரம் மற்றும் சட்டப்பூர்வ தன்மையை தங்களுக்குத் தாங்களே கொடுப்பதற்கேற்ற கூறுகள் ஏதும் ஹம்பலி சிந்தனைப் பள்ளியிலேயே உள்ளதா?
பதில்: இல்லை. இருநூறு வருடங்களுக்கு முன் இப்னு அப்துல் வஹாபும் இப்னு சவூதும் ஒரு உடன்பாடுக்கு வந்த போது இது துவங்கியது. சவூதி அரேபியாவில் இரு பிரிவினர் இருந்தனர். ஒரு பிரிவினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டும் குறியாக இருந்தனர். மற்றொரு பிரிவினர் தாங்கள் சரி என்று நினைத்த இஸ்லாமிய வழிமுறையை பராமரிப்பதில் மட்டும் குறியாக இருந்தனர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து அரேபியா முழுவதும் சென்று “நஜ்தை கைப்பற்றிவிட்டோம்; ஹிஜாஸை கைப்பற்றிவிட்டோம்; அடுத்து நஜ்ரான்” என்று பரவி இப்போதைய சவூதி அரேபியா என்ற ஒரு தேசத்தை உருவாக்கியுள்ளனர்.இது அவர்களின் வசதிக்கேற்ப செய்து கொள்ளப்பட்ட ஒரு ஏற்பாடு. தங்களை அஹ்மது இப்னு ஹம்பலோடு இணைத்துக் கொள்ளும் வஹாபிகள் (பழைய தலைமுறையினர்) அல்லது சலஃபிகளுக்கும் (இப்போதைய தலைமுறையினர்) சவூதி அரச குடும்பத்துக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒரு ஏற்பாடு.
அவ்வுறவை அவர்கள் பாதுகாத்துத்தான் வந்தனர். ஆனால் 9/11 சம்பவம் அவர்களுக்கிடையே ஒரு கசப்பை ஏற்படுத்தியது. அவர்களிடையே இருந்த உறவு முறிந்துவிடும் போலத் தெரிந்தது. ஆனால் அது முறிந்துவிட்டதாகத் தெரியவில்லை. ஒரு சில வாரங்களுக்கு முன் மன்னர் அப்துல்லாஹ் ஐ.நா. வில் ஒரு அமைதி மாநாட்டை நடத்தினார். இதில் வஹாபி அறிஞர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆக அவர்களிடையே எல்லாம் சுமூக உறவு இல்லைதான். ஆனால் இன்றும் கூட அவர்கள் சேர்ந்துதான் இயங்குகின்றனர்.
நன்மையை ஏவி தீமையை தடுப்பதாக சொல்லிக் கொள்ளும் இவர்கள் எல்லா விஷயங்களிலும் அதை கடைபிடிக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். மதுக்கலன் வைத்திருப்பவர் அல்லது இசைக்கருவியை மறைத்து வைத்திருப்பவரை விட அதிக தீங்கு செய்யும் இந்த அரச குடும்பத்தினரை அவர்கள் கவனிக்க வேண்டும். அச்செயல்களை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் ஆட்சியாளர்களிடமிருந்து இன்னும் தீவிரமான தீங்குகள் வெளிப்படுகின்றன. சமூகத்தின் வளங்களை திருடுவது, ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு விசா வேண்டும் என்று சொல்வது இதெல்லாம் இதுவரை கேள்விப்படாத ஒன்று. அஹ்மது இப்னு ஹம்பல், இப்னு தைமியா, இப்னு அப்துல் ஹவாப், இப்னுல் கையிம், இப்னு அப்துல் வஹாப் ஆகியோரிடம் “முஸ்லிம்கள் மக்காவுக்குச் செல்வதற்கு அனுமதி பெற வேண்டும்” என்று அவர்கள் சொல்லட்டுமே! விசா என்பது அனுமதி பெறுவதுதானே! வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரிய நூதனமாக (பித்ஆ) இருக்கும். கேட்பாரின்றி அவர்கள் இதை செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
♣ ♣ ♣ ♣ ♣