தலைமைத்துவம்: ஓர் இஸ்லாமிய அணுகல் – மு. ஆஸிம் அலவி

Posted on
பிரதிகள் இல்லை

வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதர்களிடம் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் அவர்களிடம் காணப்பட்ட ஒழுங்கும், கட்டுப்பாடும் முதன்மையானவையாகும். இவ்விதமான காரணிகளைப் பற்றிய ஆய்வு தற்போது மேலாண்மை, தலைமைத்துவம் என்ற பெயர்களில் ஒரு தனி விஞ்ஞானமாக வளர்ந்துள்ளது. கடந்த காலங்களில் வாழ்ந்த செயல்திறமை பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்தால் தலைமைத்துவ, மேலாண்மைத் துறை சார்ந்த பண்புகள் அவர்களிடத்தில் காணப்பட்டமையே அவர்களின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தன என்று புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களில் சிலரிடம் இயற்கையாகவே இவ்விதமான பண்புகள் அமைந்திருந்தன. வேறு பலர் இயற்கையாக இப்பண்புகளை ஓரளவுப் பெற்றிருந்ததோடு, இத்துறையில் சிறந்து விளங்கியவர்களின் வழிகாட்டுதலால் தங்களிடம் இப்பண்புகளை மேலும் வளர்த்துக் கொண்டார்கள். மனிதர்களின் ஈருலக வெற்றிக்கும் வழிகாட்டக் கூடியவர்களாக அல்லாஹ் தெரிவு செய்த நபிமார்கள், இறைத்தூதர்களைப் பொறுத்தவரை அவர்களிடம் இயற்கை யாகவே மேலாண்மை, தலைமைத்துவப் பண்புகள் காணப்பட்டதோடு வஹி மூலமான வழிகாட்டுதல்களால் அவர்களிடம் இவ்விதப் பண்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்றன. இதன் காரணமாகவே முதலிரு பிரிவினரிடமும் தலைமைத்துவ, மேலாண்மைத் துறையில் ஏற்பட்ட பிழைகள் நபிமார்கள், இறைத்தூதர்கள் ஆகியோரின் வாழ்க்கையில் நிகழவில்லை. இவர்கள் அல்லாஹ் தங்கள் மீது சுமத்திய பொறுப்புகளை எவ்விதக் குறைவுமின்றி நிறைவேற்றவும் முடிந்தது.

இறுதி இறைத்தூதர் என்ற வகையில் முஹம்மத்(ஸல்) அவர்கள் தங்களின் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அவசிய மான அனைத்துத் திறமைகளையும், குணப் பண்புகளையும் அல்லாஹ் அவர்களிடம் வளரச் செய்திருந்தான். எனவே, அவர்கள் தங்களின் தூதுத்துவத்தை எவ்விதக் குறையுமின்றி நிறைவேற்றினார்கள் என்று அல்குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் குறிப்பிடுகின்றன. தனிமனிதர் என்ற முறையில் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்களின் வரிசையில் முஹம்மத்(ஸல்) அவர்கள் முன்னணியில் விளங்குகிறார்கள். நவீன வசதிகள் எதுவும் காணப்படாத ஒரு காலத்தில் பலத்த எதிர்ப்பு களுக்கு மத்தியில் மனித சமுதாயத்தை ஈருலக வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் நிலையான நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும் கொண்ட இஸ்லாம் மார்க்கத்தைப் போதித்து அவற்றின் வழியில் அமைந்த ஒரு கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும், ஒரு சமூக அமைப் பையும் நிறுவுவதில் அவர்கள் மிகவும் குறுகிய காலத்தில் முழுமையான வெற்றியைக் கண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாத்தையும், இஸ்லாமிய கலாச்சாரம், நாகரிகம், சமூக அமைப்பு என்பவற்றையும் பேணிக் காத்துவரும் பொறுப்பு முஸ்லிம்களுடையதாகும். எனவே, தனிப்பட்ட முறையிலே ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் இஸ்லாமிய சமூகத்தவர் என்ற முறையில் அனைத்து முஸ்லிம்களும் தம்மீது சார்ந்துள்ள இப்பொறுப்புகளை நிறைவேற்றி அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்கு அவசியமான மேலாண்மை, தலைமைத்துவ கோட்பாடுகள் அல்குர்ஆனிலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் நடைமுறையான ஸுன்னாவிலும் நிறைவாகக் காணக் கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அவற்றை வளரச் செய்துகொள்வதால் தன் முன்னேற்றத்தையும், இஸ்லாமிய அழைப்பியல்(தஃவா) துறையில் வெற்றியையும் அண்மைக் காலத்தில் காண்பது சாத்தியமாகும்.

ஒரு விஞ்ஞானமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள மேலாண்மை, தலை மைத்துவ கலைகளிலும் இவ்விதக் கோட்பாடுகள் பல காணப்படுகின்றன. ஆனாலும் மனிதனின் ஈருலக வெற்றிக்கும் இட்டுச்செல்ல துணைபுரியும் ஏகத்துவக் கோட்பாடு, மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றிய நம்பிக்கை, இறைவனின் பிரதிநிதி என்ற முறையில் மனிதனின் நிலை என்பன போன்ற இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இந்த விஞ்ஞானம் நிறுவப்படாததினால் அது மனிதனின் உலக வாழ்வில் சில துறைகளின் வெற்றிக்கு வழிகாட்டக் கூடுமாயினும் அவனது ஈருலக வெற்றிக்கு முழுமையாக வழிகாட்டும் தகைமை அவற்றில் இல்லை. எனவே, இந்த நவீன மேலாண்மை, தலைமைத்துவ விஞ்ஞானக் கோட்பாடுகளைப் பின்பற்றி இஸ்லாம் போதிக்கும் ஈருலக வெற்றியை ஈட்டிக்கொள்ள முடியாது என்பது தெளிவு.

எனவே, தற்காலத்தில் உலகளாவிய முறையில் ஏற்பட்டுவரும் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் காரணமாக ஏனைய துறைகளைப் போன்று மேலாண்மை, தலைமைத்துவத் துறைகளிலும் அல்குர்ஆன், ஸுன்னா என்பவற்றின் வழிகாட்டுதல்களை அறிந்து அவற்றை மக்களுக்கு அறிமுகம் செய்யும் பணியில் முஸ்லிம் அறிஞர்கள் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு இத்துறை சார்ந்த பல நூல்களையும் எழுதி வருகிறார்கள். இவை, பலர் தங்களது ஆளுமைகளை வளர்த்துக்கொள்ளவும், அழைப் பியல்(தஃவா) துறையில் வெற்றி காணவும் உதவுகின்றன. உங்கள் கைகளிலுள்ள இந்நூல் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் தலைமைத்துவம் பற்றிய சில முக்கிய கோட்பாடுகளை விளக்குகிறது. கடந்த பல வருடங்களாக தலைமைத்துவ, மேலாண்மைத் துறைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவரும் சகோதரர் ஆஸிம் அலவி அவர்கள் இதனை எழுதியுள்ளார். வாசகர்கள் தலைமைத்துவம் பற்றிய சிறப்புகளை விளங்கிக்கொள்ள உதவியாக அவற்றை ஏனைய தலைமைத்துவக் கோட்பாடுகளுடன் ஒப்புநோக்கி விளக்க அவர் இதில் முயன்றுள்ளார்.

இஸ்லாமிய வழியில் தங்களது திறமைகளை வளர்த்து சிறந்ததொரு முஸ்லிமாக வாழ விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும். அவ்வாறே இஸ்லாத்தை எடுத்துரைக்கும் அழைப்பாளராக விரும்பும் ஒவ்வொருவரிடமும் தலைமைத்துவப் பண்புகளைத் தெரிந்து வளரச் செய்வதற்கும் இந்நூல் நிச்சயம் துணைபுரியும். சகோதரர் ஆஸிம் அலவி அவர்களும், தலைமைத்துவ, மேலாண்மைத் துறைகளில் அறிவும், அனுபவமும் உள்ள வேறு பலரும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இத்துறையில் மேலும் பல நூல்களை இயற்றி வளர்ந்து வரும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வலுவூட்ட அல்லாஹ் அருள்புரிவானாக.

– மௌலவி ஏ.எல்.எம். இப்ராஹிம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *