இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ் வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 4) இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ்  வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 3)

♦ ♦ ♦ ♦ ♦

அபூபக்கர் எதிர்கொண்ட எதிர்ப்பு

அபூ பக்கருக்கு எதிர்ப்பு இருந்ததா? ஆம், அன்சார்கள் அவரை எதிர்த்தனர். அவர்கள் ‘இஸ்லாமிய தலைமைத்துவம் குறைஷிகளிலிருந்துதான் வரவேண்டும். அதனால் முஹாஜிர்கள் மட்டுமே தலைமை வகிக்க முடியும்’ என்பதை சமத்துவத்துக்கு எதிரான கருத்தாக பார்த்தனர். அடுத்து அபூ சுஃப்யானின் எதிர்ப்பையும், இஸ்லாத்தைத் தழுவி சில ஆண்டுகளே ஆன மக்கள் மத்தியில் அவர் எப்படி வெறுப்பை உமிழ்ந்தார் என்றும் பார்த்தோம். மறுபுறம் அல் ஹாஷிம்கள் மற்றும் இமாம் அலீயின் —இன்றைய மொழியில் சொல்வதானால் சட்டப்பூர்வ எதிர்கட்சி என்ற அடிப்படையிலான— எதிர்ப்பும் இருந்தது. தலைமை தேர்வு இப்படி நிகழ்ந்திருக்கக் கூடாது என்று இவர்கள் கருதினர். எப்படியாயினும் சில காலம் கழித்து இமாம் அலீயின் ஆதரவை அபூபக்கர் பெற்றார் என்று நாம் அறிகிறோம். எவ்வளவு காலம் என்பது குறித்து வெவ்வேறு நூல்கள் வெவ்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றன.

மேலும் இஸ்லாத்தை துறந்தவர்கள் (ரித்தா) இயக்கத்தினரிடமிருந்தும் அபூபக்கருக்கு எதிர்ப்பு கிளம்பியது. ‘ரித்தா’ என்றால் இஸ்லாத்தை துறத்தல் என்று பொருள். அன்று மிகப்பெரும் இயக்கமாக திரண்ட ஒரு பெரும் கூட்டம், தலைமைக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று அறிவித்தது. ‘இவ்வியக்கம் உச்சத்தில் இருந்த போது மக்கா மற்றும் மதீனா தவிர பிற பகுதிகள் அனைத்தும் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபட்டன’ என்று ‘சன்னி’ வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்களை எதிர்த்து நடந்த போர்களில் 1200 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் இறைத்தூதரோடு வாழ்ந்தவர்கள்; குர்ஆனை மனனம் செய்திருந்தவர்கள்.

‘ரித்தா’ இயக்கத்தினரின் வாதம் இவ்வாறு இருந்தது: “நாங்கள் முஸ்லிம்கள்தான். எங்களை எங்கள் போக்கில் விட்டுவிடுங்கள். எங்கள் விருப்பப்படி நாங்கள் முஸ்லிம்களாக இருந்துவிடுகிறோம். எங்கள் செல்வத்தை எல்லாம் கொடுக்கமாட்டோம். ஸகாத், ஸதகா, ஃகும்ஸ் என எதையும் கொடுக்க மாட்டோம்”. ஆனால் அபூபக்கர் இதற்கு இசையவில்லை. “இறைத்தூதர் நம்மோடு இருந்தபோது நாம் கடைபிடித்த இஸ்லாமிய ஒருமைப்பாடு இதுவல்ல. நான் தலைமை ஏற்றுக்கொண்டேன் என்பதற்காக நீங்கள் இந்த ஒருமைப்பாட்டிலிருந்து விலகிவிடுவீர்கள் என்றால், நான் அதை அனுமதிக்க மாட்டேன்” என்றார் அவர்.

அபூபக்கர் இரண்டு ஆண்டுகள் மற்றும் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். அக்காலத்தில் பல கடுமையான போர்கள் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இது எதை காட்டுகிறது? இறைத்தூதரின் மறைவின் போது அரேபியா முழுக்க முஸ்லிம்களாக மாறியிருந்த லட்சக்கணக்கான மக்கள் அனைவரும், நாம் எதிர்பார்க்கும் நேர்மையான முஸ்லிம்களாகவா இருந்தனர்? இல்லை. அன்று நேர்மையான முஸ்லிம்கள் இருந்த போதிலும், அப்பகுதி மக்களின் பொதுவான போக்கு இஸ்லாத்துக்கு எதிராகவே இருந்தது என்பதையே இது காட்டுகிறது.

இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகு அப்துல்லாஹ் இப்னு உமர் இவ்வாறு கூறினார்:“இஷ்ர அப்பன் நிஃபாகு ஃபில் மதீனா வர்தததில் அர்ளு”. இதன் பொருள்: “இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகு, மதீனாவில் நயவஞ்சகம் வீறுகொண்டு மீண்டும் எழுந்து வந்தது. அரேபியர்கள் இஸ்லாத்தை துறந்துவிட்டனர்.”

முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சமூக, அரசியல், பொருளாதார, மக்கள் சூழலாக இது இருந்தது. உங்களை சிந்திக்கத் தூண்டும் விதத்தில் எளிதாக சொல்வதானால் ‘அன்று வாழ்ந்த ஆகச் சிறந்த முஸ்லிம் மிகவும் பிரபலமற்றவராக காணப்பட்டார்’ என்ற நிலை இருந்தது.

விதிமீறல்கள்

உஸ்மான் குறித்து சொல்லப்படும் கடுமையான விதிமீறல்களைப் பற்றி இப்போது பார்ப்போம். இறைத்தூதர் அல் ஹகம் இப்னு உமைய்யா என்பவரை மதீனாவிலிருந்து நாடு கடத்தி இருந்தார். அபூபக்கர் மற்றும் உமரின் காலத்தில் பலர் அந்நபரை மீண்டும் மதீனாவிற்கு அழைத்துவர முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் இருவருமே, “இறைத்தூதர் அவரை வெளியேற்றிவிட்டால், அவ்வளவுதான். நாங்கள் அவரை அனுமதிக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். ஆனால் உஸ்மான் ஆட்சிக்கு வந்தவுடன் அவரை மதீனாவிற்குள் அனுமதித்தார். இதை எப்படி நியாயப்படுத்த முடியும்?! நியாயம் காண்பதை விடுங்கள். இது பற்றி சிந்திக்கக் கூட வேண்டாமா?! இது குறித்து சிந்திக்கவே கூடாது என்று கூறுபவர்கள், ‘ஒருவர் தவறு செய்தபின் அதைப் பற்றி பேசவே கூடாது. அத்தவறை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போகட்டும்’ என்ற ரீதியில் பேசுகிறார்கள். இத்தகைய தவறை ஒருவர் மீண்டும் செய்கிறார் எனில் அதை திருத்திக்கொள்ள முடியாத நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம். இதுபற்றி சிந்திக்கவே வேண்டாம் என்று கூறும் ‘சன்னி’ சிந்தனையும் இப்படித்தான் உள்ளது. இதற்கு இறைவேதத்திலும் இறைத்தூதர் வாழ்விலும் எந்த வழிகாட்டலும் இல்லை.

உஸ்மான் தவறு செய்தார் என்றால் நாம் அது குறித்து பேசித்தான் ஆக வேண்டும். நம்மால் அவருடைய காலத்துக்கு பின்சென்று அதை சுட்டிக்காட்ட முடியாதுதான். எனினும் இத்தனை ஆண்டுகள் கழித்தும் “ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது. அல் ஹகம், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து கொண்ட விதம் காரணமாகவும் அவருடைய பண்பு காரணமாகவும், இறைத்தூதர் அவரை நாடு கடத்தினார். அவர் மதீனாவிற்கு வெளியிலேயே இருந்துவிட்டுப் போகட்டுமே. அவரை ஏன் மீண்டும் மதீனாவிற்குள் அனுமதிக்க வேண்டும்?” என்று சொல்வதில் என்ன பிரச்சனை இருக்கிறது?

அடுத்து நாம் உஸ்மான் அபூ தரை வலுக்கட்டாயமாக நாடு கடத்திய சம்பவம் பற்றி சிந்திக்க வேண்டும். ஆம். நான் சிந்திக்க மட்டுமே வேண்டுகிறேன். அதற்குமேல் எதையும் சொல்ல விரும்பவில்லை. மதீனாவிற்கு வெளியே அர் ரப்தா என்னும் இடத்துக்கு அபு தரை உஸ்மான் நாடு கடத்தினார். “ஏன் இப்படிச் செய்தீர்கள், உஸ்மான்?!” நீங்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தாலும், இக்கேள்வியை கேட்க வேண்டும்; இது குறித்து சிந்திக்க வேண்டும்.

அடுத்து, மர்வான் இப்னு அல் ஹகம் என்ற நபர் விஷயத்தில் உஸ்மான் செய்தது என்ன? இஸ்லாத்துக்கு முந்திய கருத்துகளையும் அன்றைய அதிகாரக் கட்டமைப்பையும் மீண்டும் நிறுவ முயன்ற ஒருவர்தான் மர்வான். உஸ்மான் இவருக்கு தன் மகளை மணமுடித்துக் கொடுத்தது மட்டுமின்றி ஆப்பிரிக்காவிலிருந்து வரும் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கை அவருக்கு கொடுத்தார். இவ்வாறு செய்வதற்கு குர்ஆனில் எந்த அடிப்படையும் இல்லையே. இறைத்தூதரின் பண்பிலும் இது பொருந்தாதது ஆயிற்றே.

மேலும் அப்துல்லாஹ் இப்னு அபி சுர்ஹா என்ற நபருக்கு உஸ்மான் அடைக்கலம் கொடுத்தார். இவர் குறித்து இறைத்தூதர், “இப்னு சுர்ஹா கொல்லப்படுவதற்கு தகுதியானவர்” என்று கூறியிருந்தார். சமாதானம் செய்து கொள்ள முடியாத எதிரி என்று அறியப்பட்ட ஒருவருக்கு அடைக்கலமும் கொடுத்து அவருக்கு அரசாங்கப் பதவியையும் கொடுத்ததை என்னவென்று சொல்வது?! நான் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் ‘கவாரிஜ் ‘அல்லது ‘ஷியா’ நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல. இவை அனைத்தும் ‘சன்னி’ நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவைதான் என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மேலும் வலீத் இப்னு உக்பா என்ற நபரை உஸ்மான் கூஃபாவின் ஆளுநராக நியமித்தார். இவரைப் பற்றி ‘சன்னி’ நூல்கள் கூறும்போது இவர் இரவு முழுவதும் ‘உயர்ரக கேளிக்கைகளில்’ ஈடுபடுபவர் என்று விவரிக்கின்றன. ஒருமுறை இரவு முழுவதும் இத்தகைய கேளிக்கைகளில் ஈடுபட்டபின் ஃபஜ்ர் தொழுகைக்கு அவர் வருகிறார். தொழுகை நடத்தும் போது கடமையான (ஃபர்ளு) தொழுகையை இரண்டுக்கு பதிலாக நான்கு ரக்அத்துகள் நடத்துகிறார். மக்கள் அத்தவறை சுட்டிக்காட்டியபோது அவர் “என்ன நான்கு ரக்அத்கள் போதாதா? வேண்டுமென்றால் மேலும் சில ரக்அத்கள் தொழவைக்கிறேன்” என்று போதையில் கூறுகிறார். அவர் பேசும்போது, போதையின் வாசனையை மக்கள் அவரிடம் நுகர்கின்றனர். இத்தகைய ஒருவரை முஸ்லிம்களின் ஆளுநராக நியமிக்கலாமா?

ஆளுமைகளின் வரலாறு அல்ல

சகோதர சகோதரிகளே! பிரச்சனை என்னவென்றால், நாம் —எந்தப் பின்னணியைச் சார்ந்திருந்தாலும்— இவ்வரலாறை தனி ஆளுமைகளின் வரலாறாகப் பார்க்கிறோம். அதைவிட முக்கியமாக இது மனிதச் சமூகங்கள் மற்றும் மனிதப் பண்பின் வரலாறு என்பதை புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம். இறைத்தூதரின் இறப்பின் போது, அபூ பக்கரும் உமரும், இமாம் அலீயின் தகுதிகள் குறித்தும் அவரைப் பற்றி இறைத்தூதரே கூறியிருந்த விஷயங்கள் குறித்தும் சந்தேகத்தில் இருந்தார்கள் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? நிச்சயமாக இல்லை. எனில் இமாம் அலீயை பதவியில் அமர்த்தாமல், அவர்கள் ஏன் பதவி ஏற்றனர்? இதற்கு இரண்டு விதமாக பதிலளிக்கலாம். ‘அவர்களிருவரும் சதி செய்து, தீய எண்ணம் கொண்டு, சுயநலத்தோடு செயல்பட்டனர்’ என்று சொல்லலாம். அல்லது, ‘அவர்களிருவரும் இஸ்லாமியச் சமூகம் எதிர் நோக்கியிருந்த எதிர்ப்பை தடுப்பதில் கவனமாக இருந்தனர்’ என்றும் பதிலளிக்கலாம்.

ஒரு கணம் நாம் அனைவரும் ‘சகீஃபா’வில் இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு முடிவெடுத்தாக வேண்டிய இக்கட்டான சூழலில் நாம் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இமாம் அலீ அங்கு இல்லை. இறைத்தூதரின் புனித உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யும் பாக்கியத்தைப் பெற்றவராக அவர் அப்பணிகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். அபூபக்கர், உமர் மற்றும் அங்கிருந்த பிற மக்களின் உரையாடல்களை இவ்வாறு நாம் கற்பனை செய்யலாம்: “இமாம் அலீ, நீங்கள் எப்பேர்பட்டவர் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்களை குறைத்து மதிப்பிடுவதாக எண்ணிவிடாதீர்கள். சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய மக்களிடமிருந்து கிளம்பும் எதிர்ப்பை கட்டுப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். இதில்தான் எங்கள் அக்கறை முழுதும் குவிந்துள்ளது. இதை கவனிக்காவிட்டால், நாம் அனைவரும் சேர்ந்து வீழ்ந்துவிடுவோம்.” இது அங்கு நடந்த உரையாடல் அல்ல. உங்களுக்குப் புரிய வைப்பதற்காக நான் இதைச் சொல்கிறேன்.

அதாவது ‘சகீஃபா’ மக்களின் எண்ண ஓட்டம் இவ்வாறு இருந்தது: ‘இமாம் அலீ பதவி ஏற்றுக்கொண்டால் நாம் அனைவரும் நிச்சயமாக வீழ்ச்சியடைந்து விடுவோம். இமாம் அலீ இறைத்தூதர் அல்ல. இறைத்தூதருக்கே இது பெரும் போராட்டமாக இருந்தது. நாம் இப்போதுதான் வெற்றி பெற்று ஒரு நிலைக்கு வந்துள்ளோம். இப்போது இம்மக்களின் பொதுப்புத்தி, நம்மை வீழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறது. எனவே ‘இறைத்தூதர் நம்மிடமிருந்து பதவியைப் பறித்து தன் உறவினர்கள் கையில் அதை ஒப்படைத்துவிட்டார்’ என்று கூறும் வாய்ப்பை நாம் அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டாம். அவர்கள் இஸ்லாமிய மனம் படைத்தவர்கள் அல்ல, இஸ்லாத்துக்கு முந்திய கருத்துக்களை கொண்டிருப்பவர்கள்’.

மக்களின் பொதுப்புத்தி இமாம் அலீக்கு எதிராக இருந்தது. இதை பயன்படுத்திக் கொள்ள அபூ சுஃப்யான் முயற்சி செய்தார். ‘சகீஃபா’ அன்று அவர் இமாம் அலீயிடம் “உங்கள் கையை நீட்டுங்கள். நான் உங்களுக்கு உறுதிப் பிரமாணம் செய்கிறேன்” என்றார். ஏன் இவ்வாறு அவர் சொல்ல வேண்டும்? ஏனெனில் அப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்று அவருக்கு தெளிவாக தெரியும். இப்படி ஒரு வலை விரித்து இமாம் அலீயை அதில் சிக்க வைக்க முயற்சித்தார். ஒரு பக்கம் இமாம் அலீயை தலைவராக்கி விட்டு மறுபக்கம் “இறைத்தூதரின் குடும்பத்தை பாருங்கள்! அவர்கள் தங்களுக்குள்ளேயே பதவியை தக்கவைத்துக் கொண்டனர்” என்று பிரச்சாரம் செய்ய திட்டமிட்டார்.

அன்று அவர்கள் அத்தகைய வாய்ப்பை அம்மக்களுக்கு அளித்திருந்தால், இஸ்லாத்தின் எதிரிகள் அனைவரும் ஒன்று திரண்டு மதீனாவிலிருந்த சிறு முஸ்லிம் சமூகத்தின் மீது பெரும் போர் தொடுத்திருப்பர். ‘ரித்தா’ போர்களோடு ஒப்பிடுகையில் அது பல மடங்கு பெரிதாக இருந்திருக்கும். இவ்வாறு நிகழ்ந்திருக்காது என்று யாராவது சொல்ல முடியுமா? இல்லை.

இறைத்தூதரின் இறப்பிற்குப் பிறகு இமாம் அலீ பதவி ஏற்று, அன்றிருந்த இக்கட்டான சூழலில் அம்மக்களின் பொதுப் புத்தியை தனக்குச் சாதகமாக வென்றிருப்பார் என்று நினைப்பவர்கள் அன்று நிலவிய, இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டிராத பொதுப்புத்தியின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் வேறு சிலர், அன்றிருந்த பொதுப்புத்தி தம்மை நசுக்கக் காத்திருக்கிறது என்று எண்ணினார்கள். பிற்காலங்களில் இது நிரூபணமானது. இறைத்தூதர் மறைந்து முப்பதே ஆண்டுகளில் அவர்கள் திரும்பி வந்தனர். கர்பலா எனும் துர்சம்பவம் நிகழ்ந்தது. இதுதான் அன்றைய பேசப்படாத வரலாறு. ஆளுமைகளின் மீது கவனம் செலுத்தப்படும் போது இந்த வரலாறு மறைந்து போகிறது.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 03 / அஹ்ல் அல் சுன்னாஹ்  வ அல் ஜமாஅத் சிந்தனைப் பள்ளி (பாகம் 5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *