இஸ்லாமிய வரலாறு – 04 / கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 3) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 04 / கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 2)

♦ ♦ ♦ ♦ ♦

அல் முர்ஜியா

கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகளின் வரிசையில் அடுத்து வருவது ‘அல் முர்ஜியா’. நான் இதைச் சொல்ல விரும்பவில்லை என்றாலும், இன்று தம்மை ‘அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஅத்’ என்று அழைத்து கொள்வோரின் விதிக்கப்படாத கோட்பாக ‘அல் முர்ஜியா’ கோட்பாடு மாறிவிட்டது. சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் சொன்னது இதுதான்: “ஒருவர் எத்தகையவர் என்று தீர்மானிப்பதில் நாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை”. இதுவும் பெரும் பாவங்கள் செய்த ஒருவர் (முர்தகிப் அல் கபீரா) தொடர்புடையதாகவே இருந்தது.

‘அல் ஜப்ரிய்யா’வின் கருத்துப்படி, ஒருவர் தன் சுய விருப்பத் தீர்மானமின்றி பெரும்பாவத்தைச் செய்வதால், அல்லாஹ்வின் சம்மதத்துடனேயே அச்செயலைச் செய்கிறார். எனவே அவர் ஒரு முஸ்லிம். ‘அல் கதரிய்யா’வின் கருத்துப்படி, அவர் முழுச் சுதந்திரத்துடன், தன் சுய விருப்பத் தீர்மானத்தை செயல்படுத்தியவராக அச்செயலைச் செய்கிறார். எனவே அவர் ஒரு நிராகரிப்பவர் (காஃபிர்). ஆனால் ‘அல் முர்ஜியா’க்கள், “அவரை முஸ்லிம் என்றோ நிராகரிப்பவர் (காஃபிர்) என்றோ நாங்கள் சொல்ல மாட்டோம். இதை நாங்கள் அல்லாஹ்விடமே விட்டு விடுகிறோம். நடந்த விஷயங்களை நாங்கள் புரிந்து கொண்டோம். எனினும் அவர் பற்றிய கருத்தை நாங்கள் தள்ளிப்போட விரும்புகிறோம். அவருடைய பண்பை தீர்மானிப்பதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” என்றனர். ‘முர்ஜியா’ என்றால் ‘தள்ளிப் போடுபவர்கள்’ என்று பொருள்.

கவாரிஜ்களும் கொலை போன்ற பெரும்பாவங்கள் செய்தோரை நிராகரிப்பவர்கள்  என்றே அழைத்தனர் என்று அறிகிறோம். கவாரிஜ்கள் மேற்கண்ட கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்தவர்களுக்கு முன்னர் அல்லது அவர்களின் சமகாலத்தில் வாழ்ந்த போதிலும், அவர்கள் தங்களை ‘கதரிய்யா’ என்றோ ‘ஜபரிய்யா’ என்றோ ‘முர்ஜியா’ என்றோ அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

இதே காலகட்டத்தில் தோன்றவிருக்கும் ‘முஃதசிலா’ சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர்களும் ‘முர்ஜியா’க்களைப் போன்றே கூறினர். அவர்கள் கூறியதாவது, “பெரும்பாவம் செய்த ஒருவரை நிராகரிப்பவர் (காஃபிர்) என்றோ முஸ்லிம் என்றோ நாங்கள் சொல்ல மாட்டோம். நாங்கள் சொல்வதெல்லாம் ‘அவர் நம்பிக்கையாளர் அல்ல (கைரு முஃமின்)’. தயவு செய்து எங்களை நிர்பந்திக்காதீர்கள். மறுமையில் அல்லாஹ் அவர் குறித்துத் தீர்ப்பு கூறுவான். அவர் குறித்த கருத்தில் நாங்கள் பெரும்பான்மை முஸ்லிம்களோடு ஒத்துப் போகிறோம்”. பெரும்பான்மை முஸ்லிம்களின் கருத்து ‘முர்ஜியா’க்களின் கருத்தாகவே இருந்தது.

இன்றும் நிலவும் இத்தகைய மனப்பாங்கை சுருக்கமாக ஆனால் தெளிவாக எடுத்துச் சொல்லும் ஒரு வாக்கியம் பல நூல்களில் உள்ளது. மீண்டும் சிறிது தயக்கத்துடனேயே இதைச் சொல்கிறேன். ‘முர்ஜியா’க்கள் என்ற தலைப்பில் அது வராத போதும், இன்று அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜமாஅத் என்று அழைக்கப்படுவதன் கோட்பாடுகளில் அது இரகசியமாகப் பொதிந்து உள்ளது. அந்த வாக்கியமாவது, “நம்பிக்கை (ஈமான்) இருக்குமிடத்தில் எந்தத் தீமையான செயலும் அந்த நம்பிக்கையை களங்கப்படுத்திவிடாது. அதேபோல நிராகரிப்பு (குஃப்ர்) இருக்குமிடத்தில் எந்த நற்செயலும் அந்நிராகரிப்பை மட்டுப்படுத்திவிடாது. (லா யலுர்ரு மா அல் ஈமானி தன்புன் கமா லா யன்ஃப ம அல்குஃப்ரி தா’அ).” முர்ஜியாக்களும் இத்தகைய கருத்தையே  கொண்டிருந்தனர் என்று பார்க்கிறோம்.

மக்கள் இத்தகைய விவகாரங்களை எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. தங்களை ‘சன்னி’கள் என்று அடையாளப்படுத்திக் கொள்பவர்களிடம் ஓட்டகைப்போர், சிஃப்பீன் போர் அல்லது உமையாக்களுக்கு எதிராக கவாரிஜ்கள் நடத்திய போர் போன்றவற்றைப் பற்றிக் கேட்டால் அவர்களின் பதில் இப்படித்தான் இருக்கும். எடுத்துக்காட்டாக, “யஸீத் செய்தது பற்றி எங்களுக்குத் தெரியும். ஆனால் அதுபற்றி நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை” என்றுதான் அவர்கள் சொல்வார்கள். இதன் பொருள் அவர்கள் யஸீதின் செயலை அங்கீகரிக்கிறார்கள் என்பதல்ல. மாறாக நடந்த விஷயங்கள் பற்றி வெளிப்படையாகக் கருத்து கூற அவர்கள் விரும்பவில்லை. மேலும் ஒரு அணியோடு அடையாளப்படுத்தப்பட அவர்கள் விரும்பவில்லை என்றும் கொள்ளலாம். பிரச்சனைகளைச் சரியாக அணுகாமல் தப்பித்துக் கொள்வதற்கான எளிதான வழி இது. இத்தகைய மனப்பாங்குதான் அவர்கள் மத்தியில் மறைவாக வியாபித்து இருக்கிறது.

சிலர் இதை உஸ்மானின் காலத்தில் சிலர் கொண்டிருந்த மனப்பாங்கின் நீட்சி என்று பார்க்கின்றனர். ஒட்டகை மற்றும் ஸிஃப்பீன் போர்களின் போது, அவற்றில் கலந்து கொள்ளாமல் ஒரு குழு இருந்தது. சஅது இப்னு அபி வக்காஸ், அப்துல்லாஹ் இப்ன் உமர், அப்துர்ரஹ்மான் இப்னு அபு பக்கர் மற்றும் அபு பக்ரதா என்ற ஒரு ஹதீஸ் அறிவிப்பாளர் போன்றோர் மிகக் கறாராக நடுநிலை பேணினர். ஒரு சாரார் சரியானவர்கள் மற்றொரு சாரார் தவறானவர்கள் என்று சொல்ல அவர்கள் விரும்பவே இல்லை. “இவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் எங்களுக்குத் தெரியும். எனினும் யார் சரி யார் தவறு என்று நாங்கள் சொல்லப் போவதில்லை” என்றனர்.

இத்தகைய மனப்பாங்கு, முக்கியமாக பின்வரும் சூழலில் வெளிப்பட்டது. அன்று போர் மற்றும் பிற காரணங்களுக்காக பல முஸ்லிம்கள் மக்கா, மதீனா மற்றும் ஹிஜாஸ் பகுதியைவிட்டு வெளியேறி இருந்தனர். பத்துப் பதினைந்து ஆண்டுகள் கழித்து அவர்கள் திரும்பி வந்த போது நிலைமை முற்றிலும் மாறியிருந்தது. அவர்கள் இவ்வாறு கூறினர்: “என்ன ஆயிற்று உங்களுக்கு! நாங்கள் இங்கிருந்து கிளம்பும் போது, எல்லாம் சரியாகத்தானே இருந்தது? இப்போது ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கிறீர்கள். இதில் எங்களையும் பங்கெடுக்கக் கூறுகிறீர்கள்! இல்லை! நாங்கள் இதில் பங்கெடுக்கப் போவதில்லை.” சில வரலாற்று நூல்களில் இத்தகையோர் ‘அல் ஃகுஸா’ என்று அழைக்கப்படுகின்றனர். ‘அல் ஃகுஸா’ என்றால் புதிய நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவதற்காகச் சென்ற வீரர்கள் என்று பொருள். இவர்கள் ‘அஷ்ஷக்காகீன்’ என்றும் அழைக்கப்பட்டனர். ‘ஷக்’ என்றால் சந்தேகம் என்று பொருள். அவர்கள் சில விஷயங்களை சந்தேகத்தோடு அணுகியதால் ‘சந்தேகிப்பவர்கள் (அஷ்ஷக்காகீன்)’ என்று அழைக்கப்பட்டனர்.

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் சஅது இப்னு அபீவக்காஸ் இவ்வாறு கூறினார், “பேசும் வாளை என்னிடம் கொடுத்து, அது யாரைக் கொல்ல வேண்டும் என்று சொல்கிறதோ, அதைக் கேட்டு நான் அவரைக் கொலையும் செய்வேன். ஆனால் இந்த விவகாரத்தில் என்னைத் தலையிடச் சொன்னால், நிச்சயமாக அது என்னால் முடியாது” (இவை அவருடைய அசல் வார்த்தைகள் அல்ல. அவர் கூறியவற்றின் கருத்தை இங்கே நாம் சொல்கிறோம்).

இதை அவர்கள் வெறும் வாயளவில் சொல்லவில்லை. உண்மையாகவே அவர்கள் அப்படித்தான் உணர்ந்தார்கள். அவர்களின் ஆழ்மனதிலிருந்து வந்த நிலைப்பாடு இது. ஆகவே சிலர் ‘முர்ஜியா’ கொள்கையை இவர்களோடு தொடர்புபடுத்திப்பார்க்க முற்பட்டனர்.

சில முர்ஜியாக்கள் இவ்வாறு கூறினர், “ஆழமான கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ள இம்மக்கள், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சி சொல்கிறேன். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி பகர்கிறேன் (அஷ்ஹது அன் லா இலாஹா இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்) என்று மொழிந்தவர்கள்தானே?! அப்படியிருக்க இவர்களை நிராகரிப்பவர்கள் (குஃப்பார்) என்றோ இணைவைப்பவர்கள் (முஷ்ரிகீன்) என்றோ எப்படி அழைக்க முடியும்?! ஒரு போதும் நாங்கள் அப்படிச் சொல்லவே மாட்டோம். அவர்களும் முஸ்லிம்கள்தான். எனினும் அவர்கள் பற்றிய தீர்ப்பை நாங்கள் அல்லாஹ்விடமே விட்டுவிட்டோம். அவர்களின் உள்ளத்தில் இருப்பதை அவனே நன்கு அறிவான். அதன்படி அவனே அவர்களுக்கு தீர்ப்பு வழங்குவான் (முர்ஜிஉ ஹுக்மகும் இலல்லாஹ் அல்லதி யஃலமு சராயிரன்னாஸ வ யுஹாஸிபுகும் அலைய்ய)”.

இத்தகைய கருத்து பிரபலமடைந்து, சமூக அளவில் பலர் இதைப் பின்பற்றத் துவங்கினால் என்ன நடக்கும்? சமூகத்தின் மேல்மட்டத்தில் இருக்கும் பல குற்றவாளிகள் தங்கள் குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லம் ஒன்று தான். , ‘அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை என்று நான் சாட்சி சொல்கிறேன். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி பகர்கிறேன்’ என்று மொழிந்து விட்டால் போதும். மக்கள் அவர்கள் செய்பவற்றைக் கண்டு கொள்ளாமல் நடுநிலை பேணுவார்கள் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் ஸைத் இப்னு அலீ (இமாம் ஹுசைனின் பேரர்) இவ்வாறு கூறினார்: “ஃபுஸ்ஸாக்களுக்கு நம்பிக்கையைத் தூண்டும் விதமாகச் செயல்பட்ட முர்ஜியாக்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை ‘(அப்ரா மினல் முர்ஜியா அல்லதீன அத்மஉ அல் ஃபுஸ்ஸாக ஃபி அஃப்வில்லாஹ்).” அல்லாஹ் தங்களை மன்னித்து விடுவான் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட கேடுகெட்ட ஆட்சியாளர்களை ‘ஃபுஸ்ஸாக்’ என்று அவர் குறிப்பிட்டார். இத்தகைய கோட்பாடு தனிமனித அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் சமூக அளவில் பார்த்தால், குற்றங்களுக்குத் துணைபோகும் வகையில் மக்களை வழிகெடுக்கிறது. இதற்கெதிராகத்தான் ஸைத் இப்னு அலீ குரலெழுப்பினார்.

முஃதசிலாக்களும் கவாரிஜ்களும் அபு ஹனீஃபா மற்றும் அவரது முக்கிய மாணவர்களான அபு யூசுஃப் மற்றும் முஹம்மத் ஆகியோரை முர்ஜியாக்கள் என்று குற்றம் சுமத்தினர். ஆனால் இது உண்மையல்ல. இவர்களை மட்டுமில்லாமல், அலீயின் பேரரான ஹஸன் இப்னு முஹம்மத், அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் குரலெழுப்பிய சஈது இப்னு ஜுபைர் ஆகியோரையும் முர்ஜியாக்கள் என்று அவர்கள் குற்றம் சுமத்தினர். அபு ஹனீஃபாவும் பிற ‘சன்னி சிந்தனைப் பள்ளியைச்’ சார்ந்த அறிஞர்களும் உமையா மற்றும் அப்பாஸி ஆட்சியாளர்களுக்கு எதிராக எதுவுமே பேசவில்லை என்று சிலர் சொல்கின்றனர். ஆனால் இதுவும் உண்மை அல்ல. சன்னிகளும் சரி ஷியாக்களும் சரி இது பற்றி பேச மறுக்கிறார்கள்.

♦ ♦ ♦ ♦ ♦

(உரை நிகழ்த்திய பின் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பின்வருமாறு இமாம் அல் ஆஸி பதிலளித்தார்)

தந்திரசாலியான முஆவியா பதவிக்கு வந்ததும் இறைத்தூதரைச் சுற்றியிருந்த முதல் தலைமுறை முஸ்லிம்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகளை வைத்து அரசியல் செய்தார். இறைத்தூதருக்குப் பிறகு கேள்விக்கிடமின்றி, இமாம் அலீயும் நபிவீட்டார் (அஹ்ல் அல் பைத்) என்று அழைக்கப்படுபவர்களும்தான் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்.

உஸ்மான் ஆட்சி காலத்தில், அவரை ஆதரித்தோர் மற்றும் எதிர்த்தோர் என முஸ்லிம்கள் இருதுருவங்களாக பிரிந்து கிடந்ததையும் அவர் நன்கு அறிந்திருந்தார். இதில் இமாம் அலீ நேரடியாக எந்தப் பக்கமும் சார்ந்திருக்கவில்லை என்றும் அவரை ஆதரித்த பெரும்பாலோர் உஸ்மானுக்கு எதிரணியில் இருந்தனர் என்றும் நாம் அறிவோம். இந்த இயங்கியல்களை முஆவியா நன்கு புரிந்து வைத்திருந்தார். எனவே பதவிக்கு வந்தவுடன் —பள்ளிவாசல்கள், கஅபா, ஹஜ், மக்களின் பொதுப் புத்தி என அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்த— அவர், இறைத்தூதர் காலத்தில் எழுப்பப்பட்ட கட்டமைப்பை நிர்மூலமாக்க வேண்டும் என அரசு எந்திரங்களுக்கு உத்தரவிட்டார். அதாவது கதீர் கும் குறித்த ஹதீஸ் உட்பட இமாம் அலீயை மற்ற நபித்தோழர்களிடமிருந்து உயர்த்திக்காட்டும் பிற ஹதீஸ்களை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்றார். எனவே பிற நபித்தோழர்களை இமாம் அலீ அளவிற்காவது உயர்த்திவிட்டால் சமநிலையை அடைந்து விடலாம் என்றும், இதை அடைந்துவிட்டால் அதிகாரம், ராணுவம், பொருளாதாரம் ஆகியவற்றின் துணை கொண்டு தன் எதிரிகளை வீழ்த்திவிடலாம் என நினைத்தார்.

இதனடிப்படையில் பல ஹதீஸ்கள் புனையப்பட்டன. அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கும் அரசவை அறிஞர்கள் பலர் பணியமர்த்தப்பட்டனர். இப்படியாக தனக்குப் பின் ஆகத்தகுதியானவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் மத்தியில் இறைத்தூதர் விதைத்த கருத்து நாளடைவில் மங்கலாக்கப்பட்டது. தலைமையும் சமூகமும் சேர்ந்தே இயங்க முடியும். ஆனால் முஆவியா வெற்றிகரமாக இவற்றை தனித்தனியே பிரித்து ஒன்றோடொன்று தொடர்பின்றி இயங்கச் செய்தார். அன்றைய முஸ்லிம் சமூகம் ஆகத்தகுதியானவரால் வழிநடத்தப்பட விரும்பும் பட்சத்தில் அதற்குப் பொறுத்தமானவர் இமாம் அலீதான் என்ற கருத்தை முன்னிறுத்துவதில் இறைத்தூதர் தன்னால் இயன்றதைச் செய்துவிட்டார் என்று சொல்வதில் உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன்.

மேலும் இறைத்தூதரைச் சுற்றி அவருக்கும் அவருடைய கருத்துகளுக்கும் நேர்மையாக இருந்தவர்கள் இருந்தனர். ஆனால் அந்த நேர்மையோடு அவர்கள் விஷயங்களை தவறாக கணித்திருக்கக் கூடும். இங்குதான் இரு சாராரும் தவறிழைக்கின்றனர். ஒரு சாரார், ‘அவர்கள் அனைவரும் நபித்தோழர்கள். எனவே அவர்கள் தவறிழைக்க வாய்ப்பே இல்லை’ என்கின்றனர். மற்றொரு சாரார், ‘நபி வீட்டார், உரிமை மறுக்கப்பட்டவர்களாக இருந்தனர்’ என்கின்றனர்.

நபித்தோழர்களும் இறைத்தூதரின் உறவினர்களும் ஒருவருக்கொருவர் ஒவ்வாதவர்கள் என்ற கருத்து எப்படியோ அன்றிலிருந்து இன்றுவரை நிலவி வருகிறது. அவர்களிருவரும் பரமவைரிகள் போல கருதப்படுகின்றனர். இந்தக் கருத்து முஆவியாவிடமிருந்துதான் வந்தது. இஸ்லாம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறதெனில் அதற்குக் காரணம் இறைத்தூதரைச் சுற்றி இருந்தவர்களிடமிருந்து பீறிட்டெழுந்த நேர்மையே ஆகும். இவர்கள் பரமவைரிகளாக இருந்திருந்தால் இத்தகைய நேர்மை சாத்தியமாகி இருக்குமா? இதை நாம் மீட்பார்வையிட்டு பிரச்சனையின் மூலகர்த்தாவை அடையாளம் காண வேண்டும்.

♦ ♦ ♦ ♦ ♦

சன்னி சிந்தனைப் பள்ளியின் சட்டவியலாளர்களும் இமாம்களும் உமைய்யாக்கள் மற்றும் அப்பாஸிகளை எதிர்த்து ஷியாக்கள் நடத்திய போராட்டத்தின் ஆதரவாளர்களாக இருந்தனர். சன்னி வரலாற்று நூல்களில் இந்தச் செய்தி சொல்லப்பட்டுள்ள போதிலும் அது வெளிப்படையாக இல்லை. அதே போலத்தான் ஷியா நூல்களிலும். இதில்தான் சன்னிகளும் ஷியாக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் போலும்! அவர்கள் இருவருமே முஆவியாவை ‘அரசர்’ என்று அழைக்க விரும்பவில்லை. அபூ ஹனீஃபா, அஷ் ஷாஃபி, மாலிக் மற்றும் ஹன்பல் ஆகியோர் தத்தம் கால அரசாங்கத்துக்கு எதிராக இருந்தனர் என்று இரு தரப்புமே சொல்ல விரும்பவில்லை.

உமைய்யாக்களுக்கு எதிராக ஸைத் இப்னு அலீ நடத்திய போராட்டத்துக்கு அபூ ஹனீஃபா ஆதரவளித்தார். ஸகாத், ஸதகா என எல்லா செல்வமும் உமைய்யாக்களுக்கு எதிரான போராட்டத்துக்காக கொடுக்கப்பட வேண்டும் என தன் மாணவர்களிடம் அபூ ஹனீஃபா ரகசியமாகச் சொன்னார்.

அஷ் ஷாஃபியும் 10 அல்லது 15 புரட்சியாளர்களோடு இருந்தார். எல்லோரும் கைது செய்யப்பட்டு இவரைத் தவிர மற்ற எல்லோரும் கொலை செய்யப்பட்டனர். அதிசயமாக இவர் மட்டும் கொலை செய்யப்படவில்லை. இப்படியாக இவர்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு எதிரானவர்களாகவே இருந்தனர். ஆனால் அபூ ஹனீஃபா அல்லது ஷாஃபியை அரசியல் ரீதியாக ஷியா என்று யாரும் சொல்வதில்லை. ஏனெனில் அவர்கள் சட்டவியல் வல்லுனர்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றனர்.

எந்தவொரு ஷியா அல்லது சன்னியிடம் அபூ ஹனீஃபாவின் அரசியல் நிலைப்பாடு என்ன என்று கேட்டுப்பாருங்கள். அவர்களிடம் எந்த பதிலும் இருக்காது. இது குறித்து அறியாமையே வியாபித்திருக்கிறது. இந்த அறியாமை களையப்பட வேண்டும்.

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *