இஸ்லாமிய வரலாறு – 04 / கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 04 / கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 1)

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய மெய்யியல்

கவாரிஜ்களின் காலத்தில் இந்த விவகாரம் முஸ்லிம்களின் கவனத்தை ஈர்த்தது. இஸ்லாமியச் சட்டவியலில் பெரும்பாவங்கள் செய்தவர்கள் ‘முர்தகிப் அல் கபீரா’ என்று அழைக்கப்பட்டனர். கவாரிஜ்கள் இவர்களை நிராகரிப்பவர்கள் (காஃபிர்கள்) என்றனர். அதாவது பெரும்பாவங்களைச் செய்தவர்கள் நிராகரிப்பாளர்கள் என்றனர். இது சில முஸ்லிம்களை சிந்திக்கச் செய்தது. இதற்கு முன்னர் இது குறித்து யாரும் பெரிதாகச் சிந்தித்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். எனினும் இப்போது இஸ்லாம் பல திசைகளிலும் விரிவடைந்து கொண்டிருந்தது. இதுவரை மக்கா, மதீனா பகுதிகளைச் சுற்றியே பரவியிருந்த இஸ்லாம் இப்போது பல்வேறு சிந்தனைகளை, நம்பிக்கைகள் மற்றும் கருத்துகளைக் கொண்ட பல பகுதிகளிலும் பரவிக் கொண்டிருந்தது. பாரசீக, கிரேக்க, ரோம மற்றும் எகிப்திய நாகரிகங்கள் கோலோச்சிய பகுதிகளிலும் இஸ்லாம் விரிவடைந்தது. இதனால் மக்களின் போக்குவரத்தும் அதிகரித்தது. ஏற்கனவே முஸ்லிம்களாக இருந்தவர்கள் இப்பகுதிகளுக்குப் போவதும் புதிய முஸ்லிம்கள் மக்கா, மதினாவுக்கு வருவதுமாக நிலைமை மாறியது. இதனால் பலவகை சிந்தனைத் தாக்கங்களுக்கு உள்ளான மக்கள், பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.

இதுதான் சிலர் சொல்லும் ‘இஸ்லாமிய மெய்யியலின்’ தொடக்கம் ஆகும். நாம் அறிந்த வரையில் இறைத்தூதர் காலத்தில் இஸ்லாமிய மெய்யியல் (Islamic Philosopy) என்ற ஒன்று இருக்கவில்லை. அன்று திருக்குர்ஆனின் வார்த்தைகள், இறைத்தூதரின் சொற்கள் என எல்லாமே மக்கள் மனதில் தெளிவாகப் பதிந்திருந்தன. அவர்களின் தாய் மொழியான அரபியில்தான் இறைவனின் சொற்களும் இறைத்தூதரின் சொற்களும் இருந்தன. இவற்றை விளங்கிக் கொள்வதில் அவர்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.  இதனால் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையேயான தொடர்பு குறித்து அவர்களின் மனதில் எந்தக் கேள்வியும் எழவில்லை.

ஆனால், அரேபியாவிற்கு உள்ளும் புறமும் மக்கள் போக்குவரத்து அதிகரிக்கத் துவங்கிய காலத்தில் பல கேள்விகள் எழுந்தன; புதிய சிந்தனைகள் உருவாயின. இவ்வாறு உருவான இஸ்லாமிய மெய்யியலின் முதல் பிரச்சனை அல்லாஹ்வின் பண்புகள் பற்றியதாக இருந்தது. அதாவது, அல்லாஹ் இருக்கின்றான். அது அல்லாஹ்வின் சாரம் (தாத்). அதேபோல அல்லாஹ்வின் பண்புகளும் (சிஃபத்) இருக்கின்றன. இவை இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறானவையா என்று சிலர் கேள்வி எழுப்பினர். அல்லாஹ்வையும் அவனது பண்புகளையும் விவரிப்பது எப்படி என்று அவர்கள் கேட்டனர். நம்மிடையே உருவான வித்தியாசங்களும் மாற்றுக் கருத்துகளும் இங்குதான் துவங்கின. அல்லாஹ்வை பற்றி கிட்டத்தட்ட விரிவான, மனித அறிவுக்கு உட்பட்ட விளக்கங்களை மனிதன் தேட முற்படும் போது இதுதான் நடக்கும். இதை நாம் எல்லா காலங்களிலும் பார்க்க முடியும்.

இறைத்தூதரிடம் அல்லது முதல் தலைமுறை முஸ்லிம்களிடம் இக்கேள்வி கேட்கப்பட்டிருந்தால் என்ன பதில் கிடைத்திருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். ‘அவை ஒன்று என்று நிறுவினாலும் சரி, இல்லை வெவ்வேறானவை என்று நிறுவினாலும் சரி. இதனால் என்ன பலன் கிடைக்கப் போகிறது? இது தேவையற்ற கேள்வி’ என்றுதான் அவர்கள் பதிலளித்திருப்பர். ஆனால் மெய்யியல் அறிவில் முற்றிய சிலர், இத்தகைய விவாதங்களைச் செய்வதன் மூலம் ‘மகத்துவமிக்க அல்லாஹ் எப்படிப்பட்டவன் என்பதைப் புரிந்து கொள்வது எவ்வாறு?’ என்ற கேள்விக்கு திருப்திகரமாக பதிலளித்துவிட்டதாக நினைத்தார்கள்.

அடுத்ததாக அவர்களின் பார்வை குர்ஆனின் பக்கம் திரும்பியது. ‘குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கு (கலாமுல்லாஹ்) எனில் அது அவனது பண்புகளின் ஒரு பகுதியா?’ என்று கேள்வி எழுப்பினர். ஏனெனில் குர்ஆன் என்பது மனிதன் பயன்படுத்தும் சொற்களால் ஆனது. எனில் ‘மனிதச் சொற்கள் இறைவனின் ஒரு பகுதியா?’ என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பல்வேறு கருத்துகளும் விவாதங்களும் நடைபெற்றன. இந்த விவாதம் வளர்ந்து சென்று அப்பாஸிகள் காலத்தில் உச்சத்தை அடைந்து ‘குர்ஆன் படைக்கப்பட்டதா? இல்லையா?’ என்ற கேள்வி எழுந்தது. அதாவது ‘அல்லாஹ்வின் வாக்கு படைக்கப்பட்டதா? இல்லையா?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு இருவேறு பதில்கள் அளிக்கப்பட்டன. ஒரு குழு ‘குர்ஆன் (அல்லாஹ்வின் வாக்கு) படைக்கப்பட்டது அல்ல’ என்றது. மற்றொரு குழு ‘இல்லை. அது படைக்கப்பட்டதுதான்’ என்றது.

இவ்வாறாக, முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய கோட்பாட்டளவிலான வித்தியாசங்களைப் பார்க்கையில், அவையனைத்தும் முஸ்லிம்களின் சாராம்சத்தோடு, அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் போன்ற கேள்விகளோடு தொடர்புடையது அல்ல என்று பார்க்கிறோம். மாறாக, அவை ‘இஸ்லாத்தில் போதுமான அளவு விவரிக்கப்படாத விவகாரங்கள்’ என்று சிலர் நினைத்த விஷயங்களை விவரிக்க முற்படுவதோடு தொடர்புடையது என்று பார்க்க முடிகிறது.

மனிதன் சுதந்திரமானவனா, இல்லையா என்ற கேள்வியைச் சுற்றி இவை விவாதிக்கப்பட்டன. நம் வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், அவை ஏற்கனவே விதிக்கப்பட்டுவிட்டது என்பதால் செய்கிறோமா அல்லது நம் சுயவிருப்பத் தீர்மானத்தை செயல்படுத்துவதால் செய்கிறோமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து அக்கால மக்கள் சொன்னவற்றை ஆராயும்போது இதில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன என்று அறிகிறோம். இவற்றுள் சில சிலவேளை அரசியல் மற்றும் சட்ட ரீதியான பிரச்சனைகளையும் உள்ளடக்கியதாகவும் இருந்தன. வெறுமனே கோட்பாட்டளவில் மட்டும் நாம் இதைப் பேசவில்லை. ஏனெனில் சில விவகாரங்கள் சட்ட ரீதியான விளைவுகளையும் சிலசமயம் சமூக அளவிலான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தன.

எடுத்துக்காட்டாக, பெரும் பாவங்கள் செய்த ஒருவர் (முர்தகிப் அல் கபீரா) முஸ்லிமா அல்லது நிராகரிப்பவரா? என்ற கேள்வியை எடுத்துக் கொள்ளலாம். அவர் முஸ்லிம் என்றால் ஒரு வகை சட்டங்கள் அவருக்குப் பொருந்தும்; முஸ்லிம் அல்லாதவர் என்றால் வேறுவகை சட்டங்கள் பொருந்தும். ஆகவே இவ்விவகாரங்கள் எப்போதும் கோட்பாட்டளவில் மட்டுமின்றி நடைமுறை ரீதியான விளைவுகளையும் ஏற்படுத்துவதாக இருந்தன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மற்ற இரண்டு வகை சிந்தனைப் பள்ளிகளைப் போலன்றி, கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள் நீடித்து நிலைக்கவில்லை. எடுத்துக்காட்டாக, அரசியல் சிந்தனைப் பள்ளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இன்றும்கூட ஒருவரைப் பார்த்து ‘சன்னி’ என்றோ ‘ஷியா’ என்றோ ‘காரிஜி’ என்றோ அழைக்கிறோம். இன்றும் கூட இவை செல்வாக்கு செலுத்துகின்றன. அதேபோலத்தான் சட்டவியல் சிந்தனைப் பள்ளிகளும். நம்மிடையே ஹன்பலி, ஜாஃபரி, ஷாஃபியீ அல்லது ஸைதீகள் என்று பலர் இருப்பதைப் பார்க்கிறோம். இவையனைத்தும் இன்றும் உயிரோடு இருக்கின்றன. ஆனால் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்தவர்கள் இன்று நம்மிடையே இல்லை.

அல் ஜப்ரிய்யா

முதல் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளியான அல் ஜப்ரிய்யாவை எடுத்துக் கொள்வோம். இவர்களின் கருத்துப்படி மனிதன் சுயவிருப்பத் தீர்மானம் கொண்டவன் அல்ல. அதாவது மனிதனின் ஒவ்வொரு செயலும் அல்லாஹ் விதித்ததால் மட்டுமே நடக்கிறது; மனிதனின் தீர்மானம் எதுவும் இதில் இல்லை. இத்தகைய வாதங்கள் உமைய்யா மற்றும் அப்பாஸிகள் ஆட்சிக் காலத்தில் முன்வைக்கப்பட்டன. இவற்றை அவ்வரசுகள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் முஸ்லிம் சமூகத்தை அடக்கி அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆட்சியாளர் ஒருவர், “அல்லாஹ் விதித்ததால்தான் நான் இதைச் செய்கிறேன்” என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள இது உதவும். அத்தகைய ஆட்சியாளருக்கு எதிராகக் கிளர்த்தெழத் தயாராகும் மக்களைக் கட்டுப்படுத்த இத்தகைய வாதங்கள் துணைபுரியும்.

இப்படியாக இது சில காலம் நீடித்தது. ஆனால் இன்றைய உலகை எடுத்துக் கொள்ளுங்கள். பள்ளிவாசல்களிலோ அல்லது இஸ்லாமியக் கூட்டங்களிலோ ஒருவரைப் பார்த்து ‘இவர் ஒரு ஜப்ரி’ என்று சொல்ல முடியுமா? இல்லை என்றே நான் கருதுகிறேன். ஆனால், ஒரு காலத்தில் இது நிதர்சனமாக இருந்தது. ஆக, இச் சிந்தனைப் பள்ளி மறைந்து போனது வரலாற்றுப் போக்கில் நடந்த ஒரு நன்மை என்றே சொல்ல வேண்டும். அதன் கூறுகள் வேண்டுமானால் ஆங்காங்கே இருக்கக் கூடும். மனதளவில் ஒரு எல்லைக்குத் தள்ளப்பட்ட ஒருவர் இத்தகைய கருத்துகளை சொல்லக் கூடும். எனினும் பள்ளிவாசல்களில் அறிஞர்களோ அல்லது ஆசிரியர்களோ இத்தகைய கருத்துகளைப் பரப்புவதை நாம் பார்க்க முடிவதில்லை. ஆனால் இதன் பொருள், இத்தகைய ஒன்று மீண்டும் உருப்பெறாது என்பது அல்ல. அதற்கான சூழல் உருவாகும்போது அத்தகைய சிந்தனைகள் மீண்டும் எழும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. எனினும் இப்போதைக்கு இது இல்லை என்றே சொல்லலாம்.

இத்தகைய சிந்தனைப் போக்குக்கு பதிலளிக்கும் வசனங்கள் திருக்குர்ஆனில் இருக்கவே செய்கின்றன. அத்தியாயம் அஃராஃபில் உள்ள ஒரு வசனத்தைப் பார்ப்போம்: அல்லாஹ் கூறுவதாவது, “எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன். அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.” [திருக் குர்ஆன் 7:146]

இது ஒரு ‘சுன்னாஹ்’. ‘சுன்னாஹ்’ என்றால் சமூக நியதி என்று பொருள். சிலர் சுன்னாஹ்வின் பொருளை வெறும் ‘பாரம்பரியம்’ என்ற அர்த்தத்தில் சுருக்கி விடுகிறார்கள். ஆனால் இச்சொல்லின் குர்ஆனிய அர்த்தம் ‘சமூக நியதி’ என்ற விரிந்த பொருளில் அமைந்துள்ளது. “உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கும் சமூக நியதிகள் இருந்தன (கத் ஹலக் மின் கப்லிகும் சுனன்)” என்கிறது குர்ஆன். எனவே மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சொல்வதாவது, ‘அகங்காரம் மக்களின் சமூகப் பண்பாகவே மாறிவிடும் போது, அவர்களுக்கு இறை அதிகாரத்தின் வெளிப்பாடு மறைக்கப்பட்டுவிடுகிறது. என்னதான் முயற்சி எடுக்கப்பட்டாலும் அவர்கள் அதைப் பார்க்க முடியாது. மூசாவை எடுத்துக் கொள்ளுங்கள். அன்று எகிப்தின் வல்லாட்சிக்கு எத்தனை முறை அற்புதங்கள் காட்டப்பட்டன?! தண்ணீர் சிவப்பாக மாறியது; பேன்களும் தவளைகளும் நிரம்பி வழிந்தன. எப்படியாவது மூசாவை வீழ்த்திவிட வேண்டும் என்று அழைக்கப்பட்ட மந்திரவாதிகளிடம் அவர் சவால் விட்டு வென்றதையும் அவர்கள் பார்த்தனர். இத்தனைக்குப் பிறகும் என்ன நடந்தது! அகங்காரத்தோடு அதிகாரத்தில் திளைத்திருந்த அம்மக்கள் இவற்றைக் கண்டு கொள்ளவே இல்லை.

ஆகவே அல்லாஹ், “எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்”என்று சொல்வதால்  ‘அல்லாஹ்வின் அத்தாட்சிகளுக்கும் அவனுடைய அதிகாரத்துக்கும் அவர்கள் செவிசாய்க்காமல் இருக்குமாறு அவன் விதித்துவிட்டான்’ என்பது இதன் பொருள் அல்ல. ஆகவே இம்மக்கள் புரிந்து வைத்துள்ளது போல, நினைத்ததைச் செய்துவிட்டு ‘அல்லாஹ் விதித்ததால்தான் நாங்கள் இதைச் செய்தோம். ஆகவே அல்லாஹ்வும் இதை அனுமதித்துள்ளான்’ என்று சொல்வதற்கு குர்ஆனில் எந்த அடிப்படையும் இல்லை.

அல் கதரிய்யா

அடுத்து, ‘ஜப்ரிய்யா’வுக்கு நேர் எதிரான சிந்தனைப் பள்ளியாக ‘அல் கதரிய்யா’ இருந்தது. இதன்படி, ‘மனிதனின் எந்தச் செயலிலும் அல்லாஹ்வின் தலையீடு சிறிதும் இல்லை. மனிதன் தானாகவே எல்லாவற்றையும் செய்கிறான்’. இதுவும் ஒரு துல்லியமான கோட்பாடு இல்லை. ஏனெனில் நாம் செய்யும் பல செயல்கள் அல்லாஹ்வின் நாட்டத்தாலேயே நடக்கின்றன. எனினும் ‘ஜப்ரிய்யா’வில் இருந்த ஒரு கோளாறை கதரிய்யா சரி செய்தது. ‘ஜப்ரிய்யா’ கோட்பாட்டில், மனிதன் தன் செயல்களுக்குப் பொறுப்பேற்காமல் தப்பித்துக் கொள்ள வழியிருந்தது. ஆனால் ‘அல் கதரிய்யா’ கோட்பாட்டில் அவ்வாறு செய்வதற்கு வழி இல்லாமல் போனது.

இவ்வாறாக ‘ஜபரிய்யா’விலிருந்த பிழை ‘கதரிய்யா’வில் சரிசெய்யப்படுவதைப் பார்க்கிறோம். எனினும் மனிதனின் செயல்களிலிருந்து அல்லாஹ்வை விலக்கும் போது, அது கொஞ்சம் பாதை மாறிவிட்டதாகவே பார்க்கிறோம். இதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இன்று தன்னை ‘கதரி’ என்று அழைத்துக் கொள்ளும் யாரையும் நாம் பார்க்க முடியாது. முஸ்லிம்களிடையே இருந்த இந்தப் பிரிவினை காலப்போக்கில் அழிந்துவிட்டது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 04 / கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *