இஸ்லாமிய வரலாறு – 06 / சலஃபி சிந்தனைப் பள்ளி (பாகம் 2) – இமாம் முஹம்மது அல் ஆஸி
Posted onஇஸ்லாமிய வரலாறு – 06 / சலஃபி சிந்தனைப் பள்ளி (பாகம் 1)
♦ ♦ ♦ ♦ ♦
சலஃபிகளும் முஃதசிலாக்களும்
சலஃபிகளின் கருத்துப்படி, எல்லா வசனங்களும் இறைவனிடமிருந்து வந்தது என்பதால் அறிஞர்கள் அவற்றின் மீது நம்பிக்கை கொள்ளும் போதிலும் அவர்கள் முதஷாபிஹாத் வசனங்களின் உள்ளே சென்று அறிவைப் பயன்படுத்தி அவற்றின் உள்ளர்த்தங்களை வெளிக்கொணர முயற்சி செய்வதில்லை. அது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்கின்றனர். முஃதசிலாக்களோ அல்லாஹ்வும் அறிஞர்களும் இத்தகைய வசனங்களின் முழு அர்த்தங்களை அறிவர் என்கின்றனர்.
இப்போது கேள்வி என்னவென்றால், இவ்வாறு கருத்து வேறுபாடு கொண்டோரிடையே ஏன் இறுக்கம் ஏற்பட வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி, ஏன் பிரிவினை ஏற்படுத்த வேண்டும்? மாற்றுக் கருத்து கொண்டோரையும் சேர்த்து வாழும் சூழலை நாம் உருவாக்க முடியாதா என்ன? சிலர் ஒரு விஷயத்தை ஒரே கோணத்தில் புரிந்து கொள்வர். இன்னும் சிலர் அதை வேறு கோணத்தில் புரிந்து கொள்வர். மேலும் சிலர் அவ்விஷயத்தின் முழுப் பரிமாணத்தையும் புரிந்து கொள்ளக் கூடும். இதை வைத்துக் கொண்டு முஃதசிலி என்றும் சலஃபி என்றும் ‘நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்றும் சொல்வது சரியா? இன்று நம் மத்தியில் இதுதானே நிகழ்கிறது?!
கிட்டத்தட்ட 800 அல்லது 1000 ஆண்டுகளாக நாம் மனதளவில் கோமா நிலையில் இருந்துவிட்டதால் இவ்வரலாறுகளின் மீது படிந்துவிட்ட தூசு அகற்றப்படாமலேயே உள்ளது. எனவே இதன் மீது ஒரு புதுப்பார்வை செலுத்துவது அவசியமாகிறது. எல்லோரையும் உள்ளடக்கிய இத்தகைய பார்வை, முஸ்லிம்களிடையே பாலங்களை உருவாக்கும். மேற்சொன்ன வசனத்தின் கருத்தை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் எனில், இதுகுறித்து நான் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. நாம் இதற்கு மேல் இவ்வகுப்புகளை நடத்துவதற்கான தேவைகூட இருக்காது. எனினும் இது தொடர்பான பிற விஷயங்கள் குறித்து நாம் மேலும் பார்ப்போம்.
அடுத்து, சிலர் (ஷியாக்கள்) இவ்வசனத்தில் வரும் ‘கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள்’ என்போர் இமாம்கள் என்கின்றனர். இமாம்கள் மீது மரியாதை வைத்தவனாகச் சொல்கிறேன், அப்படியெனில் அல்லாஹ் அந்த வசனத்தில் வெளிப்படையாகவே ‘இமாம்’ என்று சொல்லியிருக்கலாம் அல்லவா? எனவே ‘கல்வியில் உறுதிப்பாடு உடையோர்’ என்பதில் இமாம்களும் இருக்கக் கூடும். அவர்களோடு சேர்ந்து பிறரும் இருக்கக் கூடும் என்ற பரந்த பொருளைக் கொள்வதே சரியானது.
மேலும் தொடர்வதற்கு முன் குர்ஆனில் இடப்பட்ட நிறுத்தற்குறிகள் பற்றி சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். முதலில் குர்ஆன் இறக்கப்பட்ட போது அதில் குறிகள் எதுவும் இருக்கவில்லை. அதில் உயிரொலிக் குறிகள் கூட (ஃபத்ஹா, கஸ்ரா போன்றவை) இருக்கவில்லை. அரேபியா அல்லாத பிற பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு இது பெரும் சிரமத்தைக் கொடுத்தது. இமாம் அலீ காலத்தில் இப்பிரச்சனை கவனம் பெற்ற போது, அவர் அபு அல் அஸ்வத் அத் துவலி என்பவரிடம் இதற்கு தீர்வு காணப் பணித்தார். அதன் பின்னர்தான் அரபி எழுத்துக்களின் மீது புள்ளிகள் இடுவது புழக்கத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து பிற குறிகளும், நிறுத்தற்குறிகளும் இடுவது புழக்கத்திற்கு வந்தன. அப்பாஸி ஆட்சிகாலத்தில் முஸ்லிம் விஞ்ஞானமும் அறிவொளியும் உச்ச நிலையில் இருந்த போது இது நிகழ்ந்திருக்கும் என்று கணிக்கிறேன்.
மேலும், குர்ஆனில் வேறு சில இடங்களிலும் இத்தகைய வசனங்கள் உள்ளன. அதாவது, முற்றுப்புள்ளியிட்டு நிறுத்திவிட வேண்டுமா அல்லது காற்புள்ளியிட்டு தொடந்து படிக்க வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு நிலவும் வசனங்கள் வேறுசிலவும் உள்ளன.
சிந்தனையும் நம்பிக்கையும்
பெரும்பாலான முதஷாபிஹாத் வசனங்கள் பரிசுத்தமான அல்லாஹ் குறித்து வரும் வசனங்கள் ஆகும். குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அல்லாஹ் பற்றிய செய்திகளையும் விவரணங்களையும் மனித அறிவு ஒன்று, சிந்தித்து பொருள் கொள்ள முயற்சிக்கும் அல்லது ‘என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியாது. எனவே அல்லாஹ் சொல்வதை பொதுவாகப் புரிந்துகொண்டு அதன் குறிப்பான அர்த்தங்களை அவனிடமே விட்டுவிடுவோம்’ என்று சொல்லி தன்னை ஆசுவாவாசப்படுத்திக் கொள்ளும். இதில், சிந்தித்து அவற்றின் அர்த்தங்களை செம்மையாக்க விரும்பியவர்கள் அவை குறித்து ஆழ்ந்து சிந்தித்தனர்.
எடுத்துக்காட்டாக, பரிசுத்தமான அல்லாஹ் குர்ஆனில் ‘யதுல்லாஹி ஃபவ்க அய்தீஹிம்’ என்று கூறுகிறான். ‘யதுல்லாஹ்’ என்றால் அல்லாஹ்வின் கை என்று பொருள். சலஃபிகள், முஃதசிலாக்கள் என எல்லோரும் இவ்வசனத்தை சிந்தித்து புரிந்து கொள்ள முயற்சி செய்தனர். அரபு மொழியில் ‘மஜாஸ்’ என்று ஒரு இலக்கணக் கோட்பாடு உண்டு. ஒரு சொல்லை அதன் நேர்ப்பொருளில் புரிந்துகொள்ளாமல், அது ஆற்றும் செயலை வைத்து அதைப் புரிந்து கொள்வது ‘மஜாஸ் லுகவி’ எனப்படுகிறது. ஆக ‘யதுல்லாஹ்’ என்பதை, கையின் ஆற்றல்கள் என்ற பொருளில் அல்லாஹ்வின் அதிகாரம் அல்லது அல்லாஹ்வின் உதவிக்கரம் அல்லது அல்லாஹ்வின் ஆதரவுக் கரம் என்று பொருள் கொள்ளலாம். இப்படிச் சில சிந்தனைப் பள்ளிகள் பொருள் கொண்டன. வேறு சில சிந்தனைப் பள்ளிகள் “இல்லை. அல்லாஹ் ‘கை’ என்று சொல்கிறான் எனில் அதை அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். எனினும் அதன் அசல் கருத்து என்ன என்று நாங்கள் அறிய மாட்டோம். இதற்கு மேல் இதில் சிந்திக்க மாட்டோம்” என்று கூறின.
அடுத்து ‘முஷப்பிஹாத்’ என்று மற்றொரு சிந்தனையும் இருந்தது. இவர்கள், சொற்களை நேர்ப்பொருளில் அர்த்தம் கொண்டனர். ‘யதுல்லாஹ்’ எனும்போது, அல்லாஹ்வும் மனிதர்களைப் போலவே கைகளைப் பெற்றிருக்கிறான் என்றனர். எனினும் இவர்கள் மிகச் சொற்பமாகவே இருந்தனர்.
சலஃபிகள், அல்லாஹ் ‘கை’ என்று கூறுகிறான் எனில் அதற்கு மனித அடையாளம் கொடுக்க முடியாது என்றனர். அல்லாஹ் கூறியபடி அது ஒரு கை. ஆனால் அதன் தன்மையைப் பற்றி நாங்கள் அறிய மாட்டோம் என்றனர். அதாவது அல்லாஹ்தான் அதன் உள்ளர்த்தத்தை அறிவான் (வ மா யஃலமு தஃவீலஹு இல்லல்லாஹ்). மேலும் தங்களையே அறிவில் சிறந்தவர்களாகக் கருதி, ‘நாங்கள் அதன் அர்த்தத்தை உறுதிப்படுத்துகிறோம்’ என்கின்றனர்.
இவ்வசனத்தின் இறுதியில் வரும் ‘அல்பாப்’ (ஒருமை: லுப்) என்பதற்கு ‘மைய’ என்று பொருள் கொள்ளலாம். அதாவது அறிவு ஞானத்தின் மையமாக திகழ்வோரைத் தவிர வேறு எவரும் இதை உணரமாட்டார்கள் என்று பொருள்படுகிறது. இவ்வசனத்தின் கடைசி பகுதிகூட இருவித கருத்துகளுக்கு இடமளிக்கிறது.
இப்னு தைமிய்யா அறிஞர்களை நான்காக வகைப்படுத்தினார் என்று பார்த்தோம். தத்துவவாதிகள், முஃதசிலாக்கள், அல் மாதுரீதியா என்று அழைக்கப்படும் முஃதசிலாவின் ஒரு கிளையினர் மற்றும் இறுதியாக அஷ்அரிகள். முஃதசிலாவுக்கும் மாதுரீதியாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
இந்நான்கு வகையினரும் அசல் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் அல்ல என்று இப்னு தைமிய்யா கூறினார். இதை இப்னு தைமிய்யாவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் “இந்த நான்கு வகை முஸ்லிம் அறிஞர்களும் சலஃப்களின் பாதையைச் சார்ந்தவர்கள் அல்ல (மின்ஹாஜு சலஃப் லைச ஹாதிஹில் அர்பஅ)”. தங்களைச் சாராத பிற முஸ்லிம்களை ஏளனமாகப் பார்க்கும் போக்கு இன்றும் கூட இத்தகைய சில மக்களிடம் இருப்பதை நாம் அறிவோம்.
அவர் மேலும் கூறுவதாவது “மூல உரைகளிலிருந்து அன்றி வேறு எதிலிருந்தும் கோட்பாடுகளைப் பெற முடியாது (லி அன்னல் அகாயித இல்லாமல் மஃஸூஸ்)”. இது பிரச்சனைக்குரிய வாதம். மூல உரைகளை பகுத்தறிவு ரீதியாக புரிந்துகொள்ளாமல் அதிலிருந்து கோட்பாடுகளைப் பெறுவது எப்படி சாத்தியமாகும் என்பது எனக்கு விளங்கவில்லை. அவர் இருந்திருத்தால் இதை அவரிடமே கேட்டிருக்கலாம்.
அவர் மேலும் கூறுவதாவது “சலஃபிகள் உள்ளத்தை நம்புபவர்கள் அல்ல. ஏனெனில் உள்ளம் வழிதவறக் கூடும். எனவே அவர்கள் மூல உரைகளின் மீதுதான் உறுதியான நம்பிக்கை கொள்கின்றனர்”. மீண்டும் அதே கேள்வியை எழுப்புகிறேன். சிந்திக்கும் உள்ளமின்றி, உரைகளை புரிந்துகொள்ளாமல் இது எப்படி சாத்தியமாகும்?!
சலஃபிகள், பகுத்தறிவு ரீதியாக குர்ஆனுக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்குப் புறம்பானது என்பது போல சொல்கின்றனர். ஏனெனில் இது சலஃப்களான முஸ்லிம்களின் முன்னோர்கள் —நபித்தோழர்களும், அவர்களுக்கடுத்த தலைமுறையினரும் (தாபியீன்கள்)— செய்திராதது என்கின்றனர்.
வசீலா அல்லது தவஸ்ஸுல் என்ற அரபிச் சொல்லை மன்னிக்கப்படுவதற்கான வழி என்று சொல்லலாம். சிலர் தவஸ்ஸுலை மத்தியஸ்தம் என்று மொழிபெயர்க்கின்றனர். சலஃபிகள், தவஸ்ஸுலும் ஓரிறைக் கொள்கையும் (தவ்ஹீத்) ஒன்றுக்கொன்று முரணானது என்று நம்புகின்றனர். இக்கருத்தை இன்னும் பெரிதாக்கி, இறைத்தூதரின் அடக்கத்தலத்துக்குச் செல்வதே ஓரிறைக் கொள்கைக்கு முரணானது என்றும் சொல்கின்றனர். மேலும் அங்கு இறைத்தூதரை மனதில் வைத்து செய்யப்படும் வழிபாடுகளும் ஏதோ ஒருவிதத்தில் தவ்ஹீதுக்கு எதிரானது என்று கருதுகின்றனர். அடக்கத்தலங்களில் பிரார்த்தனை செய்வது, இறந்தவர்களை நினைவு கூர்வது போன்ற விஷயங்கள் அவர்கள் புரிந்து வைத்துள்ள ஓரிறைக் கொள்கைக்கு எதிரானது என்று கருதி மிக எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர். இவையனைத்தும் நூதனச் செயல் (பித்அத்) என்று கருதுகின்றனர்.
அல்லாஹ்வின் கை குறித்து அவர்கள் கொண்டுள்ள கருத்தை நாம் ஏற்கனவே பார்த்தோம். இப்னு அல் ஜவ்ஸி என்றொரு பிரபல ஹன்பலி சிந்தனையாளர் ‘தஃபா அத் தஷ்பீஹ்’ என்றொரு நூலை எழுதினார். அதன் பொருள் தஷ்பீஹை மறுப்பது என்பதாகும். தஷ்பீஹ் என்பது அல்லாஹ்வின் கரம் பற்றி சலஃபிகள் கொண்டிருக்கும் கருத்தை குறிக்கும். ஆக ஒரு ஹன்பலி சிந்தனையாளரே, சலஃபிகளின் கருத்தை மறுத்து எழுதியிருக்கிறார் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
மற்றொரு வசனத்தில் ‘அல்லாஹ்வின் முகத்தைத் தவிர மற்ற அனைத்தும் அழிந்தே போகும் (குல்லு ஷைய்யின் ஹாலிகு இல்லா வஜ்ஹஹு)’ (28:88) என்று அல்லாஹ் கூறுகிறான். இதையும் சலஃபிகள், ‘மஜாஸி’ முறையில் புரிந்து கொள்ளாமல் நேர்ப்பொருளில் புரிந்துகொள்கின்றனர். இதில் முகம் என்பதன் பொருள் என்ன என்று கேட்டால் “எங்களுக்குத் தெரியாது. இதை யாரும் விளக்க முடியாது. இறைவன் சொல்வதை நாங்கள் அப்படியே நம்பிவிடுவோம்” என்கின்றனர்.
இத்தகைய கருத்து நபிமொழிகளிலும் காணக்கிடைக்கிறது. சலஃபி நூல்களிலும் பிறவற்றிலும் வரும் ஒரு நபிமொழி, “நிச்சயமாக அல்லாஹ் ஆதமை தன் கையால் பக்குவப்படுத்தினான் – இன்னல்லாஹ ஃகம்மர இப்ன ஆதம பி யதிஹி” என்று சொல்கிறது. இதிலும் கை என்பதன் பொருள் என்னவென்று சலஃபிகளிடம் கேட்டால் அவர்கள் அதே பதிலைத்தான் தருவர்.
பிரபலமான மற்றொரு ஹதீஸில் இறைத்தூதர் சொன்னதாக அவர்கள் கூறுவதாவது “பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களின் உள்ளம் அர்ரஹ்மானின் இரு விரல்களுக்கிடையே உள்ளது (கல்புன் முஃமினி பைன இஸ்பஐனி மின் அஸாபி அர் ரஹ்மான்)”. இதிலுள்ள விரல்கள் என்ற சொல்லின் அர்த்தம் என்னவென்று அவர்களிடம் கேட்டால், “அது விரல்கள்தான், ஆனால் எங்களால் அதை விவரிக்க முடியாது” என்று பதில் சொல்வர். இப்படி பல எடுத்துக்காட்டுக்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இறந்தவர்களின் நிலை
அடுத்து ‘இஸ்திஃகாஃபா’ பற்றி பார்ப்போம். இதன் பொருள் ‘காப்பாற்றுதல்’ என்பதாகும். அதாவது ஆபத்தில் சிக்கிய ஒருவர் தன்னை காப்பாற்றக் கோருவது என்று சொல்லலாம். சலஃபிகளைப் பொறுத்தவரை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமாவது இவ்வாறு கோருவது —அவர்கள் புரிந்து வைத்துள்ள — ஓரிறைக் கொள்கையை மீறுவதாகிவிடும். அப்படிச் செய்யும் ஒருவர் பெரும் பாவம் செய்தவராகிவிருகிறார். இதற்கு ஆதாரமாக அவர்கள் சில நபிமொழிகளை மேற்கோள் காட்டுகின்றனர். அதில் ஒன்று பின்வருமாறு: ‘இன்னமா லா யுஸ்திஃகாஃபு பி வ இன்னம யுஸ்திஃகாஃபு பில்லாஹ்’. இறைத்தூதர் சொன்னதாக அவர்கள் சொல்வதாவது ‘உங்களைக் காப்பாற்றுமாறு என்னிடம் நீங்கள் உதவி கோர முடியாது. அல்லாஹ்விடம் மட்டுமே அவ்வாறு கோர முடியும்’. ஃகவுஃப் என்பது மரண அபாயத்தில் இருக்கும் ஒருவரை உயிரூட்டி மீட்பது போன்றதாகும். இதிலிருந்து, அவர்களுடைய சில அறிஞர்கள் பின்வரும் கோட்பாட்டை முன்மொழிந்தனர்: ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு கேட்பது, மூழ்கிக் கொண்டிருக்கும் ஒருவனிடம் மூழ்கிக் கொண்டிருக்கும் மற்றொருவன் உதவி கேட்பது போன்றதாகும் (இஸ்திகாஃபி தில் மஹ்லுக் பில் மஹ்லுக் அஸ்திகாஃபி அல் கரீக் பில் கரீக்).
இறைத்தூதர்களும் இறைநேசர்களும் இறந்த பிறகு மண்ணறையில் உயிரோடிருப்பார்கள் என்று கருதப்பட்டாலும் கூட முஸ்லிம்கள் அவர்களிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று இப்னு தைமிய்யா கூறுகிறார். இறந்தவர்களின் மண்ணறை நிலை குறித்து பல கருத்துகள் உள்ளன. ஒருவர் இறந்த பிறகு அவரிடம் யாராவது பேசினால் அது அவர்களுக்கு கேட்கும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றனர் என்பதை சலஃபி வகையறாக்கள் உணர்ந்துள்ளனர்.
இறைத்தூதரின் நம்பகமான வரலாறில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு போருக்கு பிறகு, இறைத்தூதர் போரில் கொல்லப்பட்டவர்கள் அருகே சென்று சிதறிக் கிடக்கும் சடலங்களைப் பார்த்து பேசினார். அப்போது அவருடன் இருந்த சிலர், ‘இறந்தவர்களிடமா பேசுகிறீர்கள்?’ என்று கேட்ட போது, அதற்கு அவர் ‘நீங்கள் என்னை செவிமடுப்பதைப் போலவே அவர்களும் செவிமடுக்கின்றனர்’ என்று பதிலளித்தார்.
தங்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டி, சலஃபிகள் இந்த நபிமொழியை எப்படியாவது மறுதலிக்க விரும்பக்கூடும். எனினும் இது நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபிமொழியாக இருப்பதால் இதை ஏற்றுக் கொண்டு சமாளிக்கும் கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவர்கள், ‘இறைத்தூதர்களும் இறைநேசர்களும் மண்ணறையில் உயிரோடு இருந்தாலும் கூட, யாரும் அவர்களிடம் பேசவோ, எதுவும் கேட்கவோ கூடாது. (வ இன் கானு அஹ்யாவு ஃபி அல் குபூரிஹிம்).’ இந்தப் பேச்சுக்கே இங்கு இடமில்லை என்பது போல முடித்துக் கொள்கின்றனர்.
இறந்தவர்களைப் பொருத்தவரை சலஃபிகளின் நிலைப்பாடு அவர்களை மட்டம் தட்டுவதாகவும் அவர்களை பொருட்படுத்தத் தேவையில்லை என்பதாகவும்தான் இருக்கிறது. இதுவிஷயத்தில் நான் ஓரளவிற்கு துல்லியமாக சலஃபிகளை விளக்க முயற்சித்தால் இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்: ‘இறந்தவர்கள் இவ்வுலகை விட்டு அறுதியாகச் சென்றுவிட்டார்கள். அவர்களுக்கும் உலகில் வாழ்பவர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்பு எதுவும் இல்லை. இறந்தவர்கள் சம்பந்தமாக எதைச் செய்தாலும் அது நேர விரயம் மட்டுமின்றி இஸ்லாத்தை இழிவுபடுத்தும் செயல் என்றும் அது இறைநம்பிக்கையை அகற்றிவிடும்’ என்று சலஃபிகள் கருதுகின்றனர். இது ஒருவரை இணைவைப்பவராக்கிவிடுகிறது (முஷ்ரிக்) என்ற அளவுக்கு அவர்கள் செல்கின்றனர். இவ்வாறு அவர்களின் நூல்களிலேயே சொல்லப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் பற்றியும் சமாதிகள் பற்றியும் அவர்களுடைய நூல்களில் கூறப்பட்டுள்ளதை நான் நேர்மையாக இங்கு எடுத்துச் சொல்லியாக வேண்டும். அன்னை ஆயிஷா அறிவிப்பதாக ஒரு ஹதீஸை அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். அதில் ‘அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கண்டித்துள்ளான். ஏனெனில் அவர்கள் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை பள்ளிவாசல்களாக மாற்றிவிட்டனர். அல்லாஹ்வே, என் அடக்கத்தலத்தை வழிபாட்டுத்தலமாக மாற்றிவிடாதே (லஅனல்லாஹு யஹூத வந்நாசாரா இத்தஃகது குபூர அன்பியாஹிம் மசாஜித்)’ என்று இறைத்தூதர் தன் மரணதருவாயில் (ஃபி மறளி மவ்திஹி) கூறியதாக சொல்லப்படுள்ளது.
மற்றொரு நபிமொழியையும் அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர். ‘இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை பள்ளிவாசல்களாக மாற்றிவிட்ட மக்களின் மீது அல்லாஹ்வின் கோபம் அதிகரிக்கும்’ என்று அதில் சொல்லப்பட்டுள்ளது.
♦ ♦ ♦ ♦ ♦
இஸ்லாமிய வரலாறு – 06 / சலஃபி சிந்தனைப் பள்ளி (பாகம் 3)