இஸ்லாமிய வரலாறு – 06 / சலஃபி சிந்தனைப் பள்ளி (பாகம் 3) – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 06 / சலஃபி சிந்தனைப் பள்ளி (பாகம் 2)

♦ ♦ ♦ ♦ ♦

முரண்

சலஃபிகளின் நூல்களிலேயே மற்றொரு அறிவிப்பும் உள்ளது.  இப்னு தைமிய்யா கூறுவதாவது: ‘நல்லோர்களான முன்னோர்கள் (சலஃபுஸ் ஸாலிஹ்) இறைத்தூதரின் மண்ணறை அருகே செல்லும்பொழுதெல்லாம், அவருக்கு சலாம் சொல்வர் (கானு சல்லிமூன அலை). இவர்களின் நூல்களில் இறைத்தூதரின் மண்ணறை ‘அர் ரவ்ளா அஷ் ஷரீஃபா’ (கண்ணியமான சிறு தோட்டம்) என்று அழைக்கப்படுகிறது. ஆக இப்னு தைமிய்யா ஒத்துக் கொண்ட விஷயத்தை நாம் செய்தால், அவர்கள் நம்மை தடுக்கின்றனர். இத்தனைக்கும் நபித்தோழர்கள் செய்ததுதான் ஆதர்சமானது என்று இவர்கள் நம்புகின்றனர். நபித்தோழர்கள் இறைத்தூதரின் மண்ணறைக்குச் சென்று சலாம் கூறினார்கள்  எனில் நம்மை ஏன் தடுக்கின்றனர்?! ஆக இவர்களுக்குள்ளாகவே ஒரு முரண்பாடு காணப்படுகிறது.

சலஃபி நூல்களில் உள்ள மற்றொரு நன்கு உறுதிப்படுத்தப்பட்ட செய்தியை இப்போது படித்துக் காட்டுகிறேன். ‘வலகத் கால நாஃபிஅ மவுலா அப்தில்லாஹ் இப்னு உமர் கான இப்னு உமர் யுசல்லிம அலல் கப்ர் ரஅய்துஹு மிஅதமர்ர அவ் அக்ஃபர் யஜீஉ இலல் கப்ர் வ ருஇய வாதி அன் யதஹு அல மக் அதிந் நபியி (ஸல்) மினல் மிம்பர் சும்ம வலஅஹா அலா வஜ்ஹி’. அதாவது, நாஃபிஅ என்பவர் அப்துல்லாஹ் இப்னு உமருக்கு மிக நெருக்கமானவர் (மௌலா). இவர்தான் அப்துல்லாஹ் இப்னு உமர் கூறும் ஹதீஸ்களின் முதன்மை அறிவிப்பாளர். நாஃபிஅ அறிவிப்பதாவது ‘இப்னு உமர் இறைத்தூதரின் மண்ணறைக்கு சலாம் சொல்பவராக இருந்தார். அவர் இவ்வாறு செய்வதை நான் நூற்றுக்கும் அதிகமான முறை பார்த்திருக்கிறேன். இறைத்தூதரின் அடக்கத்தலத்துக்கு வரும்போதெல்லாம் அவர், இறைத்தூதர் மிம்பரில் அமரும் இடத்தின் மீது கை வைத்து பிறகு தன் முகத்தின் மீது கை வைப்பார்’.

என்னால் ஹஜ்ஜுக்கு செல்ல முடியாது. எனினும் இன்று ஹஜ் அல்லது உம்ராவுக்கு செல்பவர்கள் இப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். (இமாம் அல் ஆஸி ஹஜ் செய்வதற்கு சவூதி அரசு விசா அளிப்பதில்லை – மொழி பெயர்ப்பாளர்) எனில் அப்துல்லாஹ் இப்னு உமரை இவர்கள் என்ன செய்வார்கள்? அவருக்கு கசையடி கொடுத்து, உதைத்து வெளியே தள்ளுவார்களா? இது நூதனச் செயல் என்று சொல்லி அவரை ‘இணைவைப்பவர்’ என்று அழைப்பார்களா? இத்தகவல்கள் எல்லாம் ஏதோ பெயர் தெரியாத அறிஞர்களிடமிருந்து பெறப்பட்டவை அல்ல. இவையனைத்தும் சலஃபிகளின் நூல்களிலிருந்தே பெறப்பட்டுள்ளன.

எல்லா ஹதீஸ் நூல்களிலும் பல முறை இடம்பெற்றிருக்கும் மற்றொரு ஹதீஸையும் இப்னு தைமிய்யா மேற்கோள் காட்டுகிறார். அதில் சொல்வதாவது ‘மக்காவிலுள்ள புனிதப் பள்ளிவாசல், மதீனாவிலுள்ள இறைத்தூதரின் பள்ளிவாசல் மற்றும் அல் குத்ஸில் இருக்கும் அக்ஸா பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர்த்து வேறு எந்த பள்ளிவாசலுக்கும் நீங்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளக் கூடாது (லா துஷத்துர் ரிஹாலு இல்லா இலா சலாசதி மஸாஜித் அல் மஸ்ஜிதுல் ஹராம் வ மஸ்ஜிதி ஹாதா வ மஸ்ஜிதுல்  அக்ஸா)’. இதன் பொருள் என்ன? இவை தவிர உள்ள பிற பள்ளிவாசல்களிருந்து விலகியிருக்க வேண்டுமா?

மதீனாவில் இறைத்தூதரின் (ஸல்) பள்ளிவாசல், ஆரம்பத்தில் மிகச் சிறியதாக இருந்தது. அதன் அளவு பற்றிய தகவல்களை நான் பார்த்ததில்லை. எனினும் ஊகித்துச் சொன்னால் சில நூறு பேர் நின்று தொழும் அளவுக்கு அது இருந்தது எனலாம். அக்கட்டடமும் சாதாரணமாக இருந்தது. அதன் தரை பாலைவன மணலால் ஆனது. அதன் அருகில் இருந்த வீட்டில்தான் அன்னை ஆயிஷாவோடு இறைத்தூதர் வசித்து வந்தார். அவர் இறந்த பிறகு பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படாமல் அவருடைய வீட்டில்தான் அடக்கம் செய்யப்பட்டார். பிற்காலத்தில் அப்பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யப்பட்ட போது, இறைத்தூதரின் வீடாகிய அடக்கத்தலம் பள்ளிவாசலோடு இணைந்தது. ஆக இறைத்தூதர், பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள இடத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார் என்பதை கவனிக்கவும்.

இறந்தவர்கள், அடக்கத்தலம் போன்றவை குறித்த சலஃபிகளின் கருத்தை சரிபார்க்க வேண்டுமெனில், இறைத்தூதர் விஷயத்திலும் அவ்வாறே செய்யப்பட்டிருக்க வேண்டும். நல்லோர்களான முன்னோர்கள் (சலஃபுஸ் ஸாலிஹ்கள்) இறைத்தூதரை தொலைவான இடத்தில் அடக்கம் செய்திருக்க வேண்டும். பொது அடக்கத்தலமான அல் பகியா (ஜன்னதுல் பகி) அங்கிருந்து தொலைவில் உள்ளது. அவர்கள் அவரை அங்கு அடக்கம் செய்திருக்கலாமல்லவா?!

இதுபற்றியெல்லாம் சலஃபிகள் சிந்திக்கிறார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. எளிமையான இதைக் கூட சிந்திக்காமல் விஷயம் பிரச்சனையில் முடிகிறது. இது பற்றி வேறு என்னதான் சொல்வது?!

இதையெல்லாம் நேர்மையாக நின்று பார்க்கும் பொழுது, இறைத்தூதரின் அருளை உணர முயல்வது (தபர்ருக்) அனுமதிக்கப்பட்டது என்று சொல்வதே சரி என நினைக்கிறேன். அவ்வாறு செய்வது உறுதிகொண்ட முஸ்லிம் ஒருவரின் ஆகுமான பண்புகளுள் உள்ளதே. அதாவது இறைத்தூதரின் பள்ளிவாசலை காணச் செல்வது, அவர் வாழ்ந்த இடத்தில் அவருடைய அன்றாட வாழ்வு, போராட்டம் போன்ற நினைவுகளை மீட்டெடுப்பது போன்றவை விரும்பத்தக்க செயல்கள் (முஸ்தஹ்ஸன்) ஆகும்.

இவை எல்லாமே நம் வரலாற்றின் அங்கம் ஆகும். நம்முடைய அங்கம் ஆகும். நம் எண்ணங்களில், நம் உணர்வுகளில் இறைத்தூதரை கண்ணியப்படுத்தவில்லை எனில் வேறு எப்படித்தான் அவரை கண்ணியப்படுத்தப் போகிறோம் என்று எனக்குப் புரியவில்லை. சாதாரணமாக மரணித்த மற்ற மனிதர்களைப் போல அவரையும் கருதி மறந்துவிடப் போகிறோமா என்ன? இப்படிச் செய்வது சரிதானா?

எதிர்வினையா?

மண்ணறைப் பற்றிய சலஃபிகளின் கருத்து, அக்காலக்கட்டத்தில் இருந்த வேறு சில குழுக்களின் செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக உருவானதா? அல்லது அவை அவர்களின் சொந்த சிந்தனையில் வெளிபாடா? என்று பார்ப்போம்.

அடக்கத்தலங்கள் குறித்து சலஃபிகள் கொண்டுள்ள கருத்துகள், வேறு சிலவற்றின் எதிர்வினையாகத் தோன்றியது என்ற பார்வையிலும் உண்மை உள்ளது. சலஃபிகளின் மூன்று காலகட்டங்களை பற்றி ஏற்கனவே கூறினேன். இதில் மூன்றாவது கட்டத்தில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ஈராக், ஈரான் மற்றும் மேலும் சில ஷியா பகுதிகளுக்கு சிப்பாயாகச் சென்றார். அப்போது ஈரானில் சஃபவி தஷய்யுவும், உத்மானிய துருக்கியில் சூஃபித்துவ இஸ்லாமும் நடைமுறையில் இருந்தன. அங்கு சில முஸ்லிம்கள் மண்ணறைகளுக்குச் சென்று அதில் அடக்கம் செய்யப்பட்ட வலி, ஷேக் அல்லது இமாம் போன்றோர், தங்களுடைய பிரார்த்தனைகளுக்கு செவிசாய்ப்பர் என்று நம்பி அவர்களிடம் நோய் நிவாரணம் போன்றவற்றை கேட்பதைக் கண்டார். இவை கோட்பாட்டு அடிப்படையில் உருவான நடைமுறைகள் அல்ல.  நான் அறிந்தவரையில், இதற்கு எந்தத் தத்துவப் பின்னணியோ அறிஞர்களின் ஆய்வோ இல்லை. இவை இஸ்லாமிய நடைமுறை அல்லது வழிபாட்டு முறை என்று யாரும் சொல்லவில்லை.  கல்வியறிவற்ற, அன்றைய கலாச்சாரத்தில் ஊறிய சில மக்கள்தான் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சில விரும்பத்தகாத மக்கள் (இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும். எனினும் இக்கருத்தை உணர்த்துவதற்காக இப்படிச் சொல்கிறேன்) இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதைப் பார்த்த இப்னு அப்துல் வஹ்ஹாப், அம்மக்கள் தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே  இருக்கும் உறவை மீறிவிட்டனர் என்று நினைத்தார். இதை ஊதிப் பெரிதாக்கி, ‘இப்படியே சென்றால் எல்லா முஸ்லிம்களும் வழிதவறிச் சென்றுவிடுவார்கள். ஆகவே காலம் கடந்துவிடும் முன் ஏதாவது செய்தாக வேண்டும்’ என்று எண்ணிய அவர், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து அப்பாமர முஸ்லிம்களை தேவையின்றி எதிர்த்தார். பிறகு இது ராணுவ நடவடிக்கையாக மாறியது.

இந்தப் பிரச்சனையை சரியாக அணுக வேண்டுமெனில் அதன் வேரைத்தான் களைய வேண்டும். அதாவது அத்தகைய கல்வியறிவற்ற, பாமர மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டும். தமக்கிருந்த அறிவைக் கொண்டு மிகச் சிறந்த முஸ்லிம்களாக இருக்க அவர்கள் முற்பட்டனர். தங்கள் செயல்களால் மிகச் சிறந்த முஸ்லிம்களாகத் திகழ முயன்ற பாமர மக்களை தாக்குவதும் அவர்களுடைய பள்ளிவாசல்களை இடிப்பதும் என்ன மாதிரியான அணுகுமுறை? ‘எங்கிருந்தோ வந்த நீங்கள் சிறந்த முஸ்லிம்களாக இருந்ததற்காக எங்களைத் தாக்குகிறீர்களா?!’ என்று அவர்கள் நினைத்திருக்கமாட்டார்களா?  இது அவர்களிடயே மனக்கசப்பையும் பிரிவினையையும் ஏற்படுத்தியது; இன்றளவும் இது நீடிக்கிறது.

நஜ்து பகுதியின் அரேபியக் கோத்திரங்கள் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபை ஆதரித்தன. சவூது குடும்பத்துக்கும் அப்துல் வஹ்ஹாபுக்கும் இடையே திருமண உறவு இருந்தது. அப்துல் வஹ்ஹாபின் மகளையோ பேரப்பிள்ளையையோ முஹம்மது இப்னு சவூத் மணமுடித்திருந்தார். இப்னு சவூத் பாமர மக்களுக்கு எதிராக போராட்ட மனப்பான்மையை கொண்டிருந்தார். அவர்களை ‘நூதனவாதிகள்’ என்றும் ‘இணைவைப்பவர்கள் என்றும் கூறினார். அறியாமையில் இருந்த மக்கள் மீது இணைவைப்புக் குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக போர் தொடுப்பது சரிகாணப்பட்டது. முதலில் இவர்களுக்கு எதிராகப் போர் செய்யத் துவங்கி, பின்னர் உஸ்மானிய அரசுக்கு எதிராக போர் தொடுக்கப்பட்டது. இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஈராக்கில் வஹ்ஹாபிகள் ஷியாக்களுக்கு எதிராக அளவுமீறிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், நானறிந்தவரையில் இவர்களுக்கும் சஃபவிகளுக்கும் போர் எதுவும் நடக்கவில்லை. மாறாக வஹ்ஹாபிகளுக்கும் உஸ்மானியர்களுக்கும் இடையேதான் கடும் போர்கள் நிகழ்ந்தன. இதற்குக் காரணம் வஹ்ஹாபிகள் தசவ்வுஃபுக்கு எதிராக இருந்ததே.

அன்று மொத்த உலகமும் உஸ்மானியர்களுக்கு எதிராக போரில் ஈடுபட்டிருந்தது. பிரிவினைவாதிகள், ஐரோப்பியர்கள், அர்மீனியர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லோரும் சேர்ந்து உஸ்மானியர்களை எதிர்த்துக் கொண்டிருந்த போது, இது போதாதென்று முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபும் அவர்களுக்கு எதிராக சமயப் போர் தொடுத்தார். வஹ்ஹாபிகளை அடக்குவதற்காக எகிப்தின் ஆட்சியாளரான முஹம்மது அலி பாஷா ராணுவத்தை அரேபியாவுக்கு அனுப்பினார். இதில் தோற்கடிப்பட்ட வஹ்ஹாபிகள் தோல்வியை வெளிக்காட்டாமல் பதுங்கிவிட்டனர். தக்க சமயம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் எனக் கருதி அமைதியாயினர். ஆக இவர்கள் எப்போதுமே பிற முஸ்லிம்களை வெறுக்கும்படியான போர் மனப்பான்மையிலேயே இருந்தனர். இதுதான் நாம் இங்கு விவாதிக்கும் அனைத்தையும் சீர்குலைக்கிறது.

முஸ்லிம்கள் பிற முஸ்லிம்களை —வஹ்ஹாபிகளையும்தான்— புறந்தள்ளுவதில்லை. பிறகு போர்தொடுப்பது எப்படிச் சரியாகும்? ஆனால் வஹ்ஹாபிகள் தங்கள் வெறுப்புப் பிரச்சாரத்தால், தங்களோடு உடன்படாத மற்ற அனைவர் மீதும் போருக்குச் செல்கின்றனர். எல்லோரும் இணைவைப்பவர்கள் ஆகிவிடுகின்றனர். ‘இணைவைப்பு’, ‘நிராகரிப்பு’ போன்ற சொற்கள் சர்வசாதாரணமாக உபயோகப்படுத்தப்படுகின்றன.

வஹ்ஹாபிகள் தங்கள் பிரச்சாரத்தின் ஆரம்ப நாட்களில், புகை பிடிப்பது தடுக்கப்பட்டது (ஹராம்) என்றனர். புகைபிடிப்பது தீங்கானது என்ற கருத்தோடு நான் உடன்படுகிறேன். அதை வெறுக்கவும் செய்கிறேன். புகை பிடிப்பதை என்னைவிட அதிகம் வெறுப்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால் நான் வெறுக்கிறேன் என்பதற்காக புகைபிடிக்கும் வேறொருவரை இணைவைப்பவர் என்றோ நிராகரிப்பவர் என்றோ சொல்ல முடியாது. ஆனால் வஹ்ஹாபிகள் இதைத்தான் செய்தனர். இன்னும் சொல்லப்போனால், ஆரம்பத்தில் அவர்கள் காபி அருந்துவதையும் தடை செய்தனர் (ஹராம்). பின்னாட்களில் இதை தளர்த்திக் கொண்டனர்.

இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் போர்களும் பிற அடக்குமுறைகளும் நிகழ்த்தப்படுகின்றன. இன்று சவூதி அரேபியாவில் நிகழும் சம்பவங்களை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள முடியும். சவூதி அரசு லெபனானிலுள்ள கிறிஸ்துவர்களோடு மிக இணக்கமாக நடந்துகொள்கிறது. ஏனெனில் அவர்கள் வேதக்காரர்களாம் (அஹ்லுல் கிதாப்). ஆனால் பிற முஸ்லிம்களிடம் தசவ்வுஃப் அல்லது தஷய்யு கோட்பாடுகளின் ஒரு நூலிழையை கண்டுவிட்டால் போதும். சூஃபி அல்லது ஷியா என்ற வார்த்தைகளைக் கேட்டால் போதும்; இவர்கள் உஷார் ஆகிவிடுகின்றனர். இச்சொற்களின் உள்ளர்த்தம் பற்றியெல்லாம் இவர்களுக்குக் கவலையில்லை.

கல்வியறிவுக்கு சவூதிகள் வைத்துள்ள அளவுகோலின்படி பார்த்தால்கூட கற்றறிந்த மிகச்சிறந்த ஷியாக்கள் பலர் உள்ளனர். அவ்வளவு எளிதில் அவர்களை முஸ்லிமல்லாதவர்கள் என்று புறந்தள்ளிவிட முடியாது. ஆனால் இவர்களைப் பொருத்தவரை அவர்கள் நிராகரிப்பவர்கள்தான். இதனால் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளலாம்; கொலை கூட செய்யலாம். இதுவெல்லாம் இவர்களுக்கு ஒரு பிரச்சனையே அல்ல. ஆனால் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் மட்டும் வேதக்காரர்கள் என்பதற்காக கண்ணியப்படுத்த வேண்டும்?! இது நியாயமா?

சிறிய விஷயங்களை இவர்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டனர். அதன் தாக்கம் இன்றுவரை காணப்படுகிறது. இன்றுவரை சவூதிகள் தங்கள் நடவடிக்கைகளால் எல்லோருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகின்றனர். குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸ்களிலும் யாருக்கும் வேறுபாடு இல்லை.  அவற்றைப் புரிந்து கொள்வதில்தான் ஒருவரையொருவர் எதிர்க்கின்றனர். அல்லாஹ் எல்லோருக்கும் சிந்தனை ஆற்றலை வழங்கியுள்ளான். அவ்வாற்றல் பரந்த எல்லைகளைக் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில் அனைவரும் ஒன்று சேர்ந்து கருத்துவேறுபாடுகளை பேசித் தீர்ப்பது பற்றி ஏன் அவர்கள் சிந்திப்பதில்லை? ஆனால் அவர்களோ சுற்றியிருக்கும் அனைத்தையும் எரித்துவிடும் அமிலத்தைப் போல இருக்கின்றனர். மன்னிக்கவும். நான் சிறிது உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.

முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபின் அரசியல் நடவடிக்கைகளை நாம் அறிவோம். இப்னு தைமிய்யாவின் அரசியல் பின்னணி என்ன? அவருக்கும் அன்றைய ஆட்சியாளர்களுக்கும் இருந்த தொடர்பு எப்படி இருந்தது? என்று பார்ப்போம்.

உண்மையில், இப்னு தைமிய்யா தன் கருத்துகளுக்காக அடக்குமுறைக்கு உள்ளானார். அன்றைய அரசாங்கம் ஆரம்பத்தில் அவரை ஏற்றுக்கொள்ளாமல் சிறையில் அடைத்தது. அதுதான் அவரை பிரபலமாக்கியது. அறிஞர்கள் அடக்குமுறைக்கு உள்ளாகும் போது, சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகும் போது பிரபலமடைந்து விடுகின்றனர். அப்போது மக்கள் அவர்களின் கருத்துகளை கேட்க ஆர்வம் காட்டுவர். இப்னு தைமிய்யாவும் அப்படித்தான்.

இத்தனை கோணல்களுக்கு மத்தியிலும் —உண்மையைச் சொன்னால்— எல்லாவற்றிலும் இருப்பது போல இதிலும் நல்ல சலஃபிகளும் உள்ளனர்; கெட்ட சலஃபிகளும் உள்ளனர். ஆனால் இங்கு வருந்தத்தக்க விதமாக கெட்டது மற்ற அனைத்தையும் விழுங்கிவிட்டது. நான் ஏற்கனவே மேற்கோள் காட்டிய பல நிகழ்வுகள் இப்னு தைமிய்யாவின் நூல்களில் உள்ளதுதான். உதாரணமாக வெளியூருக்குச் செல்லும் போது நபித்தோழர்கள் இறைத்தூதரின் அடக்கத்தலத்தை தரிசித்துவிட்டுச் செல்வர் போன்ற செய்திகள் இப்னு தைமிய்யாவின் நூலில் இருக்கின்றன. பிரச்சனை என்னவென்றால் இவர்கள் இவற்றை சந்தர்ப்ப சூழலில் வைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றனர். எனவே சலஃபி என்றாலே மொத்தமாக கெட்டது, மோசமானது என்று சொல்வதற்கில்லை. இதில் மிக நல்ல விஷயங்களும் உள்ளன; பல நல்ல கூற்றுகளும் உள்ளன.

இன்றைய சலஃபிகள், சலஃபி சிந்தனையை தோற்றுவித்த அஹ்மது இப்னு ஹன்பல் அல்லது இப்னு தைமிய்யா போல இல்லை. அவர்கள் இருவருமே அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு உள்ளாயினர். ஆனால் இன்று, சலஃபிகள் கிட்டத்தட்ட சவூதி அரசாங்கத்தின் சமய வெளியுறவுத் துறை போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மொத்த சலஃபி சிந்தனையும் ஒரு அரசாங்கத்தால் கடத்தப்பட்டுவிட்டால், நாம் சொல்ல என்ன இருக்கிறது?! முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாபும்கூட முன்னிருந்தவர்களின் திசையில் சென்றிருந்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். ஆனால் அவர் வேறு திசையில் சென்றுவிட்டார். அவர் பெற்ற புகழ் எல்லாம், சவூதி அரேபியாவின் செல்வத்தால் மட்டுமே பெறப்பட்டது.

♦ ♦ ♦ ♦ ♦

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *