இஸ்லாமிய வரலாறு – 04 / கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள் – இமாம் முஹம்மது அல் ஆஸி

Posted on

இஸ்லாமிய வரலாறு – 04 / கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 2)

இஸ்லாமிய வரலாறு – 04 / கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 3)

♦ ♦ ♦ ♦ ♦

இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். படிக்க எளிதாக இருக்கும் பொருட்டு மூன்று பாகங்களாகப் பிரித்துள்ளோம்  – மொழி பெயர்ப்பாளர்.

உரையாற்றிய நாள்: 04-03-2008

YouTube link: Islamic History / Al Aqeeda School of Thought

இமாம் முஹம்மது அல் ஆஸியின் ஆங்கில உரையை இங்கே கிளிக் செய்தும் கேட்கலாம்.

♦ ♦ ♦ ♦ ♦

(பாகம் 1)

எல்லா முஸ்லிம்களும் ஒரே வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்றும் ஒரே நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் நாம் ஏற்கனவே கூறினோம். பல்வேறு  முஸ்லிம்கள் பல்வேறு விதங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும் அவர்களுக்கென தனி வரலாறோ நாகரிகமோ இல்லை என்பதையும் அனைவரும் ஒரே வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்பதையும் முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே அனைவரும் இந்த வரலாறை எந்த அளவுக்குக் கவனமாக ஆய்வு செய்ய முடியுமோ அந்த அளவுக்கு கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். அடுத்ததாக, இவ்வரலாறை மூன்று பரிமாணங்களில் அணுகலாம் என்றும் பார்த்தோம். இதனடிப்படையில் முதலாவதாக ஆரம்பகால இஸ்லாத்தின் அரசியல் கூறுகளை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். பிரிவினைகளும் பொருந்திப் போகாத கருத்துகளும் உருவான காலகட்டம் அது.

நம் வரலாற்றின் இரண்டாவது பரிமாணம், அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் வார்த்தைகள் பிரதிநிதித்துவம் செய்யும் விரிந்த பொருள் கொண்ட இஸ்லாம் குறித்து முஸ்லிம்கள் கொண்டுள்ள கோட்பாடுகளோடு தொடர்புடையது ஆகும். இதைத்தான் இந்த அத்தியாயம் உட்பட அடுத்த சில அத்தியாயங்களில் நாம் பார்க்க உள்ளோம். ஆரம்பகாலங்களில் தோன்றி இன்றுவரை நம் மத்தியில் நீடிக்கும் —சச்சரவுகளை ஏற்படுத்தி, உள்நாட்டுப் போர்களைத் தூண்டி, சில முஸ்லிம்களின் மனதில் ‘இது நம் பள்ளிவாசல் அல்ல’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஒரு பள்ளிவாசலை தவிர்த்து மற்றொரு பள்ளிவாசலுக்கு செல்லத் தூண்டுகிற— அரசியல் வேற்றுமைகளைப் போலன்றி, மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் பொதுப் புத்தியில் வேரூன்றாத சில கோட்பாட்டு ரீதியான வேற்றுமைகளும் நம் வரலாற்றில் உள்ளன. இத்தகைய வித்தியாசங்களை ஒருவர் ஆங்காங்கே காணமுடியும் என்றாலும் அவை முஸ்லிம்களை தனித்தனியாக வரையறுக்கும் அளவுக்குத் தீவிரமடையவில்லை.

இதைத் தொடர்ந்து, நம் வரலாற்றின் மூன்றாவது பரிமாணமான சட்டவியல் ரீதியிலான (ஃபிக்ஹ்) வேறுபாடுகளை அடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம். பல வகை சட்டவியல் சிந்தனைப் பள்ளிகள் இருப்பதை நாம் மேலோட்டமாக அறிவோம். எனினும் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பது குறித்து நம்மிடையே ஒரு மேலோட்டமான கருத்தே நிலவுகிறது. ஆதலால் அதுகுறித்து பின்னர் விளக்கமாகப் பார்ப்போம்.

இப்போது, இஸ்லாத்தின் ஆரம்பகாலங்களில் முஸ்லிம்கள் தோற்றுவித்த கோட்பாட்டு வேறுபாடுகளின் மீது ஒரு பார்வையைச் செலுத்தியவர்களாக இந்த அத்தியாயத்தை தொடங்குவோம். நாம் அறிந்த பெரும்பாலான வேறுபாடுகள், அநேகமாக கொள்கை அளவில் மட்டுமே வெளிப்படுகின்றன. இவற்றில் நடைமுறை சம்பந்தமானது எதுவும் இல்லை. பிற மதங்களில் காணப்படும் சமயக் கொள்கை சார்ந்த வேறுபாடுகளைப் போல அல்லது பிற மெய்யியல் சிந்தனைகளில் காணப்படும் தத்துவ விவாதங்களைப் போலத்தான் இந்தக் கோட்பாட்டு வேறுபாடுகளை நாம் அணுக வேண்டும்.

இறைவன் யார்?

துவக்கக் குறிப்பாக நாம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நம்பகமான வரலாற்று ஆவணங்களின் வரிசையில் மைய ஆதாரமாக விளங்கும் திருக்குர்ஆன் வழியாகவும் பிற வரலாற்று நூல்களின் வழியாகவும் இறைத்தூதரின் காலத்துக்குச் சென்று பார்த்தால் நமக்கு ஒரு விஷயம் புலப்படுகிறது. அதாவது அந்தக் கால மக்கள் யாரும் இறைத்தூதரிடம், “அல்லாஹ் யார் என்று நீங்கள் எங்களுக்கு விளக்க முடியுமா?” என்று கேட்டதே இல்லை என்று அறிய முடிகிறது. அவர்கள் இறைத்தூதரை அணுகி பல விஷயங்களைப் பற்றி கேட்டுள்ளார்கள் என்று திருக்குர்ஆனின் பல வசனங்களில் பார்க்கிறோம். எடுத்துக்காட்டாக, “ يَسْـــَٔلُوْنَكَ عَنِ الْاَهِلَّةِ  பிறையைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்”, மேலும் “يَسْـــَٔلُوْنَكَ عَنِ الْمَحِيْضِ மாதவிடாய் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்”, “துல்கர்னைன் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள்”, மேலும் “புனித மாதங்கள் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள்” போன்ற பல வசனங்களை நாம் திருக்குர்ஆனில் பார்க்க முடியும். இப்படிப் பல விஷயங்களைப் பற்றி அவர்கள் கேட்ட போதிலும், யாருமே –—அவர்கள் மக்கா,மதீனா வாசிகளாக இருந்தாலும் சரி அல்லது யூதர்களாக இருந்தாலும் சரி— “இறைவன் யார் என்று நீங்கள் விளக்க முடியுமா? எதனால் அவன் இறைவன் ஆகிறான்?” போன்ற கேள்விகளைக் கேட்டதாக ஒரு வசனம் அல்லது வரலாற்றுக் குறிப்பு கூட இல்லை. ஆரம்பத்திலேயே இதைக் குறிப்பிடுவது மிக அவசியமாகிறது. ஏனெனில் நாம் பார்க்கப் போகும் பல கோட்பாட்டுத் திரிபுகள் அல்லது வித்தியாசங்கள் அல்லது முரண்பாடுகள் அனேகமாய் இதை ஒட்டியே உள்ளன.

விதி

தலைப்புக்குள் நுழையும்முன், இஸ்லாத்திலிருக்கும் பல்வேறு கோட்பாட்டுச் சிந்தனைகளுடன் தொடர்புடைய முதன்மையான ஒரு விஷயத்தைக் குறித்து நாம் பார்க்க வேண்டும். அதுதான் ‘அல் கதர்’. இப்பதம் பொதுவாக ‘விதி’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது. ‘மனிதனின் செயல்பாடுகளில் அல்லாஹ்வின் தலையீடு உள்ளதா என்று அறிய முற்படுவது’ என்று இதற்கு விளக்கமளிக்கலாம். இது குறித்து முஸ்லிம்களிடையே பல கருத்துகள் உருவாகி நாளடைவில் இணக்கம் காண முடியாத அளவுக்கு எதிர் எதிராக அவை வளர்ந்து சென்றன. இவற்றை விரிவாகப் பார்க்கும் முன் அத்தியாயம் ஆல இம்ரானில் வரும் இவ்வசனத்தை நினைவுபடுத்த வேண்டும்.

இஸ்லாமிய வரலாறின் ஆரம்பகாலங்களில் முஸ்லிம்கள் கொண்டிருந்த பல்வேறு கோட்பாடுகளை அறியும் முயற்சியில் இறங்கியுள்ள நாம், மிக முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டிய வசனம் இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவதாவது,

“அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை முதஷாபிஹாத் (பல அந்தரங்கங்களைக் கொண்ட வசனங்கள் ) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அவற்றை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.” [அல் குர்ஆன் 3:7]

அதாவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள வேதமாகிய திருக்குர்ஆனில் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுக்காத, தெளிவான அர்த்தம் கொண்ட வசனங்கள் (முஹ்கமாத்) கணிசமான அளவில் உள்ளன. அதேவேளை வெவ்வேறு விளக்கங்களுக்கு இடம் கொடுக்கும் வசனங்களும்  (முதஷாபிஹாத்) இதில் உள்ளன. இத்தகைய வசனங்களை நீங்கள் ஒரு விதத்தில் புரிந்து கொள்ளக் கூடும்; அதேசமயம் மற்றொருவர் மற்றொரு விதத்தில் புரிந்து கொள்ளக் கூடும். அல்லாஹ் சொல்லாமல் இச்செய்தியை நாம் அறிய முடியாது. இதைச் சொல்வதன் மூலம் இவற்றைக் கவனமாக அணுகுமாறு அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான். எனினும் ‘வெவ்வேறு விளக்கங்களுக்கு இடம் கொடுக்கும் வசனங்கள்’ என்று சொல்வதால், அவை முரண்படும் விளக்கங்களைக் கொடுக்கும் என்றோ எதிர் எதிர் கருத்துக்களை வெளிப்படுத்தும் என்றோ பொருள் அல்ல. மாறாக இணங்கிச் செல்லும் தனித் தனி விளக்கங்களாகவோ அல்லது ஒன்றையொன்று பலப்படுத்தும் கருத்துகளாகவோதான் அவை இருக்கும். அல்லாஹ்வின் வேதத்தில் முரண்பாடுகள் இல்லை என்பது தெளிவு. உறுதியான அறிவு உள்ளவர்கள் இதை ‘திருக்குர்ஆனின் பெரும்பான்மையான வசனங்களில் பொதிந்துள்ள உறுதி, பிற —தெளிவு குறைவான— வசனங்களை தாங்கிச் சுமக்கும்’ என்று புரிந்து கொள்வார்கள்.

அடுத்து, மற்றொரு வசனத்தைப் பார்ப்போம். அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் பரம எதிரிகளான இணை வைப்பவர்களின் (முஷ்ரிகீன்) பண்பை இது தெளிவுபடுத்துகிறது.

(அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்கள்) “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) விலக்கி இருக்கவும் (ஹராம்) மாட்டோம்” என்று கூறுவார்கள் – இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  [அல்-குர்ஆன் 6:148]

இந்த வசனம் முக்கியமான ஒரு விஷயத்தை உணர்த்துகிறது. இதன் மூலம் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப் போகும் தத்துவ விவாதங்கள் புதிதானவை அல்ல என்றும் ஏற்கனவே இத்தகைய வாதங்கள் முன்வைக்கப்பட்டன என்றும் அறிய முடிகிறது. அதாவது நிராகரிப்பாளர்கள் “அல்லாஹ் நாடாமல் நாங்கள் இணை வைப்பவர்கள் ஆகிவிடவில்லை” என்று கூறினர். ‘அல்லாஹ்வின் நாட்டத்தால் நடந்த ஒன்றுக்கு எங்கள் மீது ஏன் பழி சுமத்துகிறீர்கள்!’ என்பது அவர்களின் வாதமாக இருந்தது. தங்களுடைய வாழ்க்கை முறைகளுக்கும் சொந்த முடிவுகளுக்கும் பொறுப்பேற்க முடியாமல் பிறர் மீது பழி சுமத்தும் சுபாவத்தை இங்கு நாம் பார்க்க முடிகிறது.

‘மனிதன் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்பது ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளதா?’ போன்ற கேள்விகள் இறைத்தூதர் காலத்திலும் எழுந்தன. “நாங்கள் இணைவைப்பவர்களாக (முஷ்ரிகீன்) இருக்க வேண்டும் என்று எங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் மீது பழி சுமத்தாதீர்கள்” என்று அவர்கள் கூறினர்.

உமரின் ஆட்சிக் காலத்தில், இன்றைய ஜோர்டான் நாட்டுப் பகுதியில் ஒரு தொற்று நோய் பரவியது. அப்போது இராணுவத்தினருக்கும் பிற மக்களுக்கும் ‘அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம்’ என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனித விவகாரங்களில் இறைவனின் தலையீடு, மனிதனுக்கு சுயவிருப்பத் தீர்மானம் இருக்கிறதா அல்லது என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீருமா? போன்ற கேள்விகள் அப்போது எழுந்தன. விதியை வேறு விதத்தில் புரிந்து கொண்ட சில மக்கள் மத்தியில் இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தியது. “அல்லாஹ்வின் விதியிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறீர்களா? தொற்று நோய் பாதித்த இடத்திலிருந்து விலகியிருப்பதன் மூலம் அதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா?” என்று அவர்கள் கேட்டனர். இதற்கான பதில் கலீஃபா உமரிடமிருந்தே வந்தது அவர் கூறினார்: “நாங்கள் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து மற்றொரு விதிக்குச் செல்கிறோம் (நஃபிர்ரு மின் கதரில்லா இலா கதரில்லா)”. விதி குறித்து கண்மூடித்தனமாக இல்லாமல் அறிவுப்பூர்வமான ஒரு புரிதலை இங்கு காண முடிகிறது.

இதேபோல் மற்றொரு சம்பவம் உஸ்மான் காலத்தில் நடந்தது. அவரது இல்லத்தில் அவரைச் சிறை பிடித்த கிளர்ச்சியாளர்கள், அவர் மீது கற்களை வீசத் துவங்கினர். அப்போது அவர்களிடம், “நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இவரை எங்களுக்குப் பிடிக்கவில்லை. இவரைப் பதவியிலிருந்து அகற்ற விரும்புகிறோம். ஆகவே இவரை எதிர்த்து இவர் மீது கற்களை வீசுகிறோம்”, என்றனர். மேலும், “இதை நாங்கள் செய்யவில்லை. அல்லாஹ்தான் இதைச் செய்கிறான். இது மனிதனின் செயல் அல்ல” என்று கூறினர். பின்வரும் வசனத்தைத் தவறாக புரித்து கொண்டதால் ஒரு குழப்பம் ஏற்பட்டது.

“(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல – அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான். நம்பிக்கையாளர்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியேற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.” (அல் குர்ஆன் 8:17)

அவர்கள் இந்த வசனத்தின் அர்த்தத்தை அதன் பின்னணியிலிருந்து பிரித்தெடுத்து தவறாக விளக்கம் அளிக்க முற்பட்டனர். ஆனால் இதற்குப் பதிலளித்த  உஸ்மான், “சரி, அல்லாஹ்தான் என் மீது கல் வீசுகிறான் எனில் எல்லா கற்களும் என்னைத் தாக்கியிருக்க வேண்டுமே? மாறாக ஏன் பல முறை குறி தவறி எங்கோ வீசுகிறீர்கள்?” என்று கேட்டார்.

இவ்வாறாக ‘அல்லாஹ் விதித்ததால்தான் நாங்கள் இதைச் செய்கிறோம். நாங்களாக எதையும் செய்யவில்லை. ஒன்றை செய்யலாமா, வேண்டாமா என்பதில் எங்கள் தெரிவு எதுவும் இல்லை. அல்லாஹ்தான் இதைச் செய்கிறான்’ என்று சொல்லும் மனநிலை மக்கள் மத்தியில் அன்றே இருந்ததை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன. எனினும் அந்தக் காலகட்டத்தில் அவை முதிர்ச்சியடையாத எண்ணங்களாக மட்டுமே இருந்தன. இம்மக்களின் எண்ணங்களை விளக்கும் வகையிலான கோட்பாடுகளோ தத்துவங்களோ அப்போது உருவாகவில்லை. பிற்காலத்தில்தான் இது குறித்த விவாதங்களும், கொள்கைகளும் உருவாயின.

♦ ♦ ♦ ♦ ♦

இஸ்லாமிய வரலாறு – 04 / கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள் (பாகம் 2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *